மனித உயிர்களை கொள்ளும் சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் நடை மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும் என்று ரயில் பயணிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் நடை மேம்பாலம் அமைக்கப்படாத்தால் ஆபத்தான முறையில் பொது மக்கள் தினந்தோறும் தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர் இதனால் அடிக்கடி உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே அரசு உடனடியாக மின் தூக்கி நடை மேம்பாலத்தை அமைக்கவேண்டும் என்கின்றனர் ரயில் பயணிகள்.
சென்னை, எழும்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட புதிய பூபதி நகர், ஓசான்குளம் ஹவுசிங்போர்டு, புல்லாபுரம் பகுதிகளில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். சேத்துப்பட்டு ஏரிக் கரையையொட்டி உள்ள இந்தப் பகுதிகளை சேர்ந்த மக்கள் அரசு ஆரம்ப சுகாதார மையம், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் ரேஷன் கடை, வங்கி, அஞ்சலகம், மெடிக்கல், பெண்களுக்கான தையல் பயிற்சி மையம், மளிகை கடைகள் மற்றும் நூலகம் ஆகியவற்றுக்குச் செல்ல சேத்துப்பட்டு ரயில் தண்டவாளத்தை கடந்து, அதனை ஒட்டி அமைந்துள்ள பாதை வழியாக பிருந்தாவனம் பிரதான சாலை, மங்களபுரம், ஜெகநாதபுரம் பகுதிகளுக்கு வந்து செல்வது வழக்கமாக இருந்து வந்தது.
மேலும் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவன மருத்துவமனைக்கு செல்லும் ஊழியர்கள், நோயாளிகள், இந்திய உணவு கழக மண்டல அலுவலக ஊழியர்கள், சமூக நலக்கூடங்கள், தனியார் திருமண மண்டபங்கள், அம்பேத்கர் விளையாட்டு திடலுக்கு செல்லும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இந்த பாதை வழியாகவே சென்று வந்தனர்.
தண்டவாளத்தை கடக்காமல் இந்த பகுதிகளுக்கு பொதுமக்கள் தங்களது அன்றாட தேவைகளுக்கு வந்து செல்ல வேண்டுமானால் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு பயணம் செய்ய வேண்டி இருக்கும். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் முதல் ரயில் தண்டவாளத்தை ஒட்டி அமைந்துள்ள பாதையானது செங்கற்கள் கொண்டு அடைக்கப்பட்டு விட்டது. இதனால் மேற்கூறியுள்ள புதிய பூபதி நகர், ஓசாங்குளம் ஹவுசிங்போர்டு, புல்லாபுரம் ஆகிய பகுதிகளை சேர்த்த மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் வயதானவர்கள், நோயாளிகள், பெண்கள், எழும்பூரில் உள்ள மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு செல்லும் மாணவிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
எனவே இந்த மூன்று பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது அன்றாட தேவைகளுக்காக பிருந்தாவனம் பிரதான சாலை, மங்களபுரம், ஜெகநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தண்டவாளத்தை கடக்காமல் எளிதில் வந்து செல்லும் வகையில் நடை மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக எழுப்பப்பட்டு வருகிறது.
ஆனால் ஒவ்வொரு தேர்தலின்போதும் இந்த விவகாரத்தில் உத்தரவாதம் அளிக்கும் அரசியல்வாதிகள் வாக்குகளை வேட்டையாடிவிட்டு நடை மேம்பாலம் என்கிற மக்களின் கோரிக்கையை காற்றில் பறக்கவிட்டு விடுவதாக பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை தமிழ்நாடு அரசு அதிகாரிகள், அமைச்சர்களை சந்தித்து முறையிட்டும் யாரும் கண்டுகொள்ளவில்லை என்றும் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே சுமார் 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்களின் ‘நடை மேம்பாலம்’ என்கிற ஒற்றைக் கோரிக்கையை மாநில அரசோ அல்லது மத்திய அரசுடன் இணைந்தோ செயல்படுத்தி தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து புதிய பூபதிநகர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் வி. இளையரசன் கூறியதாவது:
தென்னக ரயில்வே மேலாளருக்கு கோரிக்கை மனு அளித்த வழக்கறிஞர் வி. இளையரசன்.
நாங்கள் குழந்தையாக இருந்த போதிலிருந்தே ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள பாதை வழியாகத்தான் மங்களபுரம், ஜெகநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு எங்களுடைய அன்றாட தேவைகளுக்காக சென்று வந்தோம். இந்நிலையில் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் பொதுமக்கள் புழங்கி வந்த பாதையை அதிகாரிகள் நிரந்தரமாக மூடி இருப்பது எங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தி உள்ளது. விபத்து ஏற்படும் அபாயத்தால் பாதையை அடைத்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
அதே சமயம் நாங்கள் மேற்கூறியுள்ள பகுதிகளுக்கு செல்வதற்கு பல கிலோ மீட்டர் தூரத்துக்கு அலைந்து திரிவதையும் அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஒருபுறம் வாலிபர்கள், வாகனங்கள் வைத்திருப்பவர்கள் சுற்றிவர முடியும் என்கிற நிலையில் மறுபுறம் வயதானவர்கள், நோயாளிகள், பெண்கள், பள்ளிக்கூடம் செல்லும் மாணவ மாணவிகள் மிகுந்த சிரமத்தை சந்திக்க வேண்டி உள்ளது.
இந்தப் பகுதியில் நடை மேம்பாலம் அல்லது சுரங்கப் பாதை அமைத்து தர வேண்டும் என அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை விடுத்தும் யாருமே கண்டுகொள்ளாதது ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இனியாவது இந்த பகுதியில் சுரங்கப்பாதை அல்லது நடை மேம்பாலம் அமைத்து தர ரயில்வே நிர்வாகத்துடன் இணைந்தோ அல்லது தன்னிச்சையாகவோ தமிழ்நாடு அரசு துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அப்போதுதான் புதிய பூபதிநகர், ஓசாங்குளம் ஹவுசிங்போர்டு, புல்லாபுரம் ஆகிய பகுதிகளை சேர்த்த ஆயிரக்கணக்கான மக்களின் பிரச்னைக்கு ஒரு முடிவு வரும். இவ்வாறு வழக்கறிஞர் வி. இளையரசன் கூறினார்.