chennireporters.com

குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து. சிதைந்துள்ள அங்கன்வாடி மையத்தை சீரமைப்பாரா கலெக்டர்?

ஆவடி அருகே அங்கன்வாடி குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.  15 ஆண்டுகளுக்கு மேலான சிதைந்து உள்ள கட்டிடத்தை சீரமைத்து குழந்தைகளின் உயிரை காப்பாற்றுவாரா கலெக்டர் ஆல்பி  ஜான் வர்கீஸ் என்கிற குரல் பொதுமக்கள் மத்தியில் பலமாக எழுந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம். வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம், ஆவடி அடுத்த பாலவேடு முதல் நிலை ஊராட்சியில் கரிமேடு அண்ணா நகர் பகுதியில் அமைந்துள்ளது.  இந்த பகுதியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.  இந்த மையத்தில் இருபதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.

15 வருடங்களுக்கு முன்பு  இந்த கட்டிடம் கட்டப்பட்டது தற்போது இடிந்து விழும் நிலையில் பராமரிப்பு இல்லாமல் இருந்து வருகிறது. மேலும் அங்கன்வாடி கட்டிடத்தை சுற்றிலும் செடி கொடி மரங்கள் வளர்ந்து கட்டிடம் விரிசல் விட்டு விஷப் பூச்சிகளின் வாழ்விடமாக மாறியுள்ளது. மேலும்  குழந்தைகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குடிநீர் மற்றும் கழிவறை இல்லாமல் அங்கன்வாடி  குழந்தைகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

குடிப்பதற்கும் தண்ணீரும் சமையல் செய்வதற்கும், மற்றும் கழிவறை உபயோகத்திற்கும் அங்கன்வாடி ஊழியர்கள் அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு சென்று எடுத்து வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அங்கன்வாடியில் ஒரு பணியாளர் மட்டுமே பணியில் உள்ளாதால்  பெரிதும் சிரம்மம் ஏற்பட்டுள்ளது.  உதவியாளர்கள் இல்லாத்தால் குழந்தைகளை கவனிப்பதில் பெரிதும்  அவதிப்படுகிறார் அங்கன்வாடி மைய ஊழியர்.

மேலும் அங்கன்வாடி மையத்தின் கட்டடத்திற்கு சுற்றுச்சுவர் இல்லாத காரணத்தினால் அப்பகுதியில் உள்ள இளைஞர்களின் டாஸ்மார்க் பாராக மாறியுள்ளது. மது குடித்து விட்டு பாட்டில்களை அங்கேயே உடைத்து விட்டு செல்கின்றனர். இதனால் அங்கன்வாடிக்கு வரும் குழந்தைகளுக்கு காயம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

மிகவும் பழமையான இந்த கட்டிடத்தை உடனடியாக சீரமைத்து தர வேண்டும் இல்லையென்றால் புதிய ஒரு கட்டிடத்தை கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும். அது வரை வாடகை கட்டிடத்தில் இந்த அங்கன்வாடி மையத்தை மாற்ற வேண்டும்  குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலைக்கு  வருவதற்கு முன்பு மாவட்ட ஆட்சியர் ஆல்ஃபி ஜான் வர்கீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் குழந்தைகளின் பெற்றோர்.

மேலும் அந்தப் பகுதியில் மக்களுக்கு தேவையான பல அடிப்படை தேவைகளை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தி தர வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள்.

இதையும் படிங்க.!