chennireporters.com

அரசமைப்புச் சட்ட நாள்.

அரசியல் அமைப்புச் சட்டத்தை அரசியல் சட்ட அவையில் நிறைவேற்றப்பட்ட நாள் 26.11.1949.

1949 நவம்பர் 26 ஆம் நாள் இந்திய மக்களின் பெயரால் , 395 விதிகளையும் , 8 அட்டவணைகளையும் கொண்ட அரசியல் அமைப்புச் சட்டத்தை அரசியல் சட்ட அவை நிறைவேற்றியது . அரசியல் அமைப்புச் சட்ட அவையின் தலைவரான டாக்டர் ராஜேந்திர பிரசாத் , அவருடைய முடிவுரையில் ,

 

இந்த இருக்கையில் அமர்ந்துக் கொண்டு நாள்தோறும் அவையின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்த நான் ஒன்றை நன்கு உணர்ந்தேன் . அரசியல் அமைப்புச் சட்ட வரைவுக்குழு உறுப்பினர்களையும் , சிறப்பாக உடல் நலிவுற்ற உடல் நிலையிலும் ஓய்வறியாது பணியாற்றிய அதன் தலைவரான அம்பேத்கர் அவர்களையும் தவிர வேறு எவராலும் _ எந்த அளவிற்கு ஆர்வமுடனும் ஈடுபாட்டுடனும் பணியாற்றியிருப்பினும் , இதை எழுதி இருக்க இயலாது .

டாக்டர் அம்பேத்கரை வரைவுக்குழுவில் இடம் பெறச் செய்ததுடன் அதன் தலைவராகவும் நாம் அமர்த்தியது போன்றதொரு சிறந்த முடிவை நாம் இதற்கு முன்பும் எடுத்ததில்லை ; இனியும் எடுக்கப் போவதில்லை .

அவ்வாறு அவரைத் தேர்ந்தெடுத்தது மிகவும் சரியே என்பதை மட்டுமே அவர் நிரூபித்துக் காட்டிடவில்லை _ அதற்கும் மேலாக அவரிடம் ஒப்படைத்த பணியை மிகத் திறம்பட முடித்துள்ளார் “” என்று கூறிப் பாராட்டினார் .

அரசியல் அமைப்புச் சட்ட அவை இரண்டு ஆண்டுகள் பதினோரு மாதங்கள் பதினோரு நாட்கள் கடுமையாகப் பணியாற்றியது . அரசியல் சட்ட வரைவு நகலின் பேரில் 7600 திருத்தங்கள் முன்மொழியப்பட்டன . அவற்றுள் 2473 மட்டும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு , அவற்றின் மீது முடிவுகள் எடுக்கப்பட்டன .

காந்தியக் கொள்கைச் சார்புடைய ஒரு வார ஏடு , புரட்சியாளரை உபாலியுடன் ஒப்பிட்டது . புத்தர் மகாபரி நிர்வாண நிலையை அடைந்து மூன்று மாதங்கள் கழிந்த பின்னர் கூடிய பௌத்த துறவியர் மாநாட்டில் பௌத்த துறவிகளுக்குப் புத்தரின் கொள்கைகள் அடங்கிய விநயபிடகத்தைத் தொகுத்துரைத்திட உபாலியைத் தெரிவுச் செய்ததைப் போல், அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கிட புரட்சியாளர் தெரிவு செய்யப்பட்டார் என வியந்து பாராட்டியது .

ஆட்சி செய்யும் முழு ஆதிபத்தியம் மக்களுக்கு வழங்கப்பட்டிருப்பதுதான் இந்திய அரசியல் சட்டத்தின் முதன்மையான கூறாகும் . சமூக மற்றும் பொருளாதாரச் சனநாயகமே நம்முடைய குறிக்கோள் என்று அரசின் வழிகாட்டும் கோட்பாடுகளில் குறிக்கப்பட்டுள்ளது . தேவைகளுக்கு ஏற்பத் திருத்தங்களை ஏற்று இயங்கக்கூடிய ஒரு சமநிலையை இந்திய அரசியல் சட்டம் பெற்றுள்ளது .

இதையும் படிங்க.!