chennireporters.com

”மா” விவசாயம் பாதிப்பு அரசு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை.

பெரியகுளத்தில் தொடர் மழை மற்றும் செல் பூச்சியின் தாக்கம் காரணமாக மா விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால்  விவசாயிகள் பெரிதும்  கவலை  அடைந்துள்ளனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் ”மா” விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது . தமிழகத்தில் சேலத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் பெரியகுளம் பகுதி மா விவசாயம் இருந்து வருகின்றது. இங்கு சுமார் 50,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் மா விவசாயம் செய்யப்பட்டு வருகின்றது இப்பகுதி மக்களின் பிரதான தொழிலாகவும் மா விவசாயம் இருந்து வருகின்றது.

இப்பகுதியில் காசா லட்டு, பங்குனவள்ளி, கல்லாமை, செந்தூரம் , மல்கோவா, கிரேப்ஸ், போன்ற வகைகள் மாமரங்கள் உள்ளன. இந்நிலையில் கடந்த சில வருடங்களாகவே மா விவசாயம் மிகுந்த பாதிப்படைந்து வருகின்றது.  இந்த ஆண்டு பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மா மரங்களில் அதிக அளவில் பூக்கள் பூத்துக் குலுங்கின.

மரங்களில் அதிகளவில் பூ பூத்துக் குலுங்கியதால் விளைச்சல் அமோகமாக இருக்கும் என மா விவசாயிகள் ஆவலுடன் எதிர்பார்ப்புடன் பல்வேறு கனவுகள் நிறைந்த வாழ்க்கை கற்பனை செய்து வந்தனர்.  மேலும் மா விவசாயகன் மா மரங்களுக்கு ஊட்டச்சத்து வழங்கும் வகையிலும், மாம்பூக்களில் தேன் விழுவதை கட்டுப்படுத்தும் வகையிலும் அவற்றின் தன்மைக்கு ஏற்ப சுமார் 15 நாட்களுக்கு ஒரு முறை மருந்து தெளிக்கும் பணியில் தீவிரம் காட்டினர்.

பின்னர் பூ பிஞ்சாகும் வரை காத்திருந்து அவற்றில் எந்த ஒரு நோயும் தாக்காதிற்கும் வகையில் அவ்வப்போது மருந்துகள் அடித்து வந்தனர். இந்நிலையில் பெரியகுளம் பகுதியில் கடந்த சில தினங்களாக கோடை வெயிலில் தாக்கத்தினால் ஏற்பட்ட தொடர் மழையின் காரணமாக மா மரங்களில் ஏற்பட்ட விளைச்சல் பாதிப்புக்கு வகையில் மாமரத்தில் பூத்திருந்த பூக்கள் கருகி உதிர்ந்தன.

அதே நிலையில். மா பிஞ்சுகளில் கருப்பு நிற புள்ளிகள் மற்றும் ஒரு வகையான செல் பூச்சிகளின் தாக்கத்தினாலும், நோய்த் தொற்று ஏற்பட்டு மரத்தில் இருந்த மாங்காய் பிஞ்சுகள் கருகி உதிர்ந்து கீழே விழுந்து வருகின்றன. மேலும் தொடர் மழை மற்றும் செல் பூச்சியின் தாக்கத்திலிருந்து மா விளைச்சளை காப்பாற்ற, செல்பூச்சிகளை கட்டுப்படுத்த சரியான மருந்துகள் இல்லை என, விவசாய துறையினர் தோட்டக்கலைத் துறையினர் மற்றும் மருந்து கடை உரிமையாளர்கள் தெரிவித்து வருகின்றனர் .

மேலும் செல் பூச்சியின் தாக்கத்தினால் மாங்காய் பிஞ்சுகள் அதிக அளவில் பாதிப்பிற்குள்ளாகி மா மரங்களில் உள்ள பிஞ்சுகள் உதிர்ந்து வருகின்றது பெரியகுளம் பகுதி பொதுமக்கள் இந்தாண்டு மா விவசாயத்தில் நல்ல மகசூல் பெறலாம் என மா விவசாயத்தை நம்பி பல்வேறு கடன்களை பெற்று மா விவசாயம் செய்து வந்த நிலையில் இந்த ஆண்டும் மா விவசாயம் இப்பகுதியில் பொய்த்து போனது. மாங்காய் விளைச்சளை ஏற்றுமதி செய்து லாபம் பார்த்து பெற்ற கடன்களை அடைத்து நிம்மதியாய் வாழலாம் என எண்ணியிருந்த பெரியகுளம் பகுதி மாங்காய் விவசாயிகளுக்கு இந்த வருடமும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.

இதனால் மா விவசாயிகள் மிகுந்த மன வேதனை மற்றும் கவலை கொண்டுள்ளனர். அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு பெரியகுளம் பகுதியில் மா விவசாயம் செய்யப்பட்டு வரும் மா தோப்புகளில் களப்பணி மற்றும் கள ஆய்வு மேற்கொண்டு மா விவசாயத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டுமாய் இப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுகின்றனர்.

இதையும் படிங்க.!