திருவள்ளூர் மாவட்டத்தில் திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் திருத்தணி பூபதி என்பவர் மாணவர்களுக்கு இலவசமாக ஜெராக்ஸ் எடுத்து தரும் செயல் மிகவும் பாராட்டுக்குரியது என்று பள்ளி மாணவர்கள் பலர் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும், வாட்ஸ் அப் மூலமும் மாணவர்களுக்கு பகிர்ந்து வரும் செய்தி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக இருந்து வந்தவர் திருத்தணி பூபதி இவர் தற்போது தலைமை செயற்குழு உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். இவர் திருத்தணியில் மா.போ.சி சாலையில் 3 ஜெராக்ஸ் மிஷின்கள் வைத்து மாணவர்களுக்கு இலவசமாக பள்ளி பாடம் தொடர்பான ஜெராக்ஸ்களை இலவசமாக எடுத்து தருகிறார்.
இதனால் பள்ளி மாணவர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கிறது என்று சொல்லுகிறார் திருத்தணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர் சுரேஷ் . திருத்தணியை சுற்றியுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவிகள் தினமும் நூற்றுக்கணக்கில் இந்த தளபதி இலவச ஜெராக்ஸ் சென்டருக்கு வந்து தனது பள்ளி பாடம் தொடர்பான நகல்களை இலவசமாக எடுத்துச் செல்கின்றனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பூபதி தளபதி இலவச ஜெராக்ஸ் சென்டர் என்ற இந்த திட்டத்தை தொடங்கினார். தற்போது வரை ஒரு லட்சத்து 50 ஆயிரம் பிரதிகள் எடுத்து சாதனை படைத்துள்ளது. இது குறித்து அரசு பள்ளி மாணவி மணிமேகலை கூறியதாவது.
நான் தற்போது பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறேன். எனக்கு பாடங்கள் தொடர்பாக பல ஜெராக்ஸ் காபிகள் எடுக்க வேண்டி உள்ளது. இதனால் ஜெராக்ஸ் எடுப்பதற்கு மட்டும் சில சமயம் நூறு ரூபாய் முதல் இருநூறு ரூபாய் வரை செலவாகும் தற்போது தளபதி இலவச ஜெராக்ஸ் சென்டரில் இலவசமாக ஜெராக்ஸ் எடுப்பதால் எனக்கு நிறைய பணம் மிச்சமாகிறது. இந்த திட்டம் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்று தெரிவித்தார்.
அரசு செய்ய வேண்டியதை தனி மனிதனாக திமுக பிரமுகர் பூபதி செய்து வரும் இந்த செயல் பெற்றோர்களின் மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டம் தமிழ்நாட்டில் முதல்முறையாக இவர் மட்டுமே செய்து வந்துள்ளார் என்பதே குறிப்பிடத்தக்கது.
அது தவிர திருவள்ளூர் மாவட்டத்திலும் இதுதான் முதல் முறை என்கின்றனர். மேலும் பூபதி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மீது உள்ள பற்றால் தமிழ்நாட்டில் முதன் முதலில் தளபதி உணவகம் அமைத்தவர். கொரோனா ஊரடங்கு காலத்தில் 38 நாட்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு இலவசமாக உணவு வழங்கியவர்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு வெள்ளி வேல் வழங்கியவரும் இவர்தான் தமிழ்நாட்டில் உள்ள கடைக்கோடி மூத்த கட்சி தொண்டர்களை முதல் முறையாக அறிவாலையும் வரவழைத்து ரூபாய் 10,000 பணமும், பொற்கிழியும் திமுக தலைவர் கையால் கொடுத்தவர் என்ற பெருமையை பெற்றவர்.
அது தவிர தமிழ்நாட்டில் முதல்முறையாக தளபதி இன்டர்நெட் சென்டர் என்னும் பெயரில் மாணவர்களுக்கு ஏற்படுத்தித் தந்தவர். நீண்ட காலமாக அதிமுகவின் தொகுதியாக இருந்த திருத்தணியை திமுக கோட்டையாக மாற்றியவர் என்று புகழாரம் சூட்டுகிறார்கள்.
திருத்தணி உடன் பிறப்புக்கள். கட்சித் தொண்டர்களுக்கு தேவையான உதவிகளை எந்த நேரத்திலும் தயங்காமல் செய்து தருபவர் என்கிறார்கள் திருத்தணி திமுகவினர். அது தவிர பல மாணவ, மாணவிகளுக்கு பள்ளி கட்டணம் கட்ட வசதி இல்லை என்று போய் உதவி கேட்டால் உடனடியாக செய்தி தரும் பண்பு கொண்டவர் என்கின்றனர் பொதுமக்கள்.