விழுப்புரம் எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13ஆக அதிகரித்துள்ளது. விஷ சாராயம் குடித்ததில் உடல்நிலை பாதிக்கப்பட்டு பலர் முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும், புதுச்சேரி பீம்ஸ் மற்றும் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் உயிர் பலி அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனிடையே கள்ளச்சாராயம் விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். விசஷ சாராயம் விற்பனை செய்தவர்கள் சப்ளை செய்தவர்கள் யார் யார் என போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
சாராய விற்பனை செய்த அமரன் கைது செய்யப்பட்டார்.அவரிடம் நடத்திய விசாரணையில் மரக்காணம் முத்து மற்றும் மரூர் ராஜா ஆகியோர் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டனர். திண்டிவனத்தை சேர்ந்த மரூர் ராஜா அமைச்சர் மஸ்தானுக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.
மரூர் ராஜா சாராய வழக்கில் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு திண்டிவனம் கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் . அவரிடம் போலீசார் நேற்று விசாரணை செய்தனர் இந்த நிலையில் மரூர் ராஜாவிடம் நடத்திய விசாரணையில் புதுச்சேரியில் வசிக்கும் ஆண்டியார் பாளையம் ராஜாவின் பெயரை சொல்லி அவர் தான் பெரிய சப்ளையர் என்று கூறியுள்ளார்.
இதை அடுத்து புதுச்சேரி முத்தியால்பேட்டை விஸ்வநாதன் நகர் சென்ற போலீசார் ராஜாவை கைது செய்தனர். ராஜா புதுச்சேரி மாவட்டத்தில் நட்டப்பாக்கம்,சேதுரப்பட்டு, மதுக்கரை, திருக்கானூர் போன்ற பகுதிகளில் பினாமி பெயரில் சாராயக்கடை நடத்தி வருவது விசாரணையில் தெரியவந்தது.
இதனிடையே இறந்தவர்களின் உடலை பரிசோதனை செய்ததில் அவர்கள் குடித்தது எத்தனாள் இல்லை என்றும் மெத்தனால் கலந்த சாராயத்தை குடித்துள்ளனர் என்றும் அரசு அறிக்கை கொடுத்துள்ளது. செங்கல்பட்டு விழுப்புரம் பகுதிகளில் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்த குடும்பங்களுக்கு அரசு தரப்பில் இருந்து நிதி வழங்கக் கூடாது என்று பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் 18 உயிர்கள் பலியானதற்கு காரணமாக அமைந்த கள்ளச்சாராய வியாபாரிகளிடமிருந்து லஞ்சம் வாங்கிய போலீஸ் அதிகாரிகளின் சம்பளப் பணத்தில் இருந்து அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்கிற குரல் தற்போது ஒலித்துக் கொண்டிருக்கிறது இதையே அரசு போலீஸ் அதிகாரிகளின் சம்பளப் பணத்தில் இருந்து கள்ளச்சாராயத்தில் உயிரிழந்தவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.