தில்லியில் நடை பெறவிருந்த ஈழத்தமிழர் ஆதரவு மாநாட்டிற்குத் தடை விதித்து மோடி அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்திய அரசின் இந்த போக்கிற்கு ஐயா பழ. நெடுமாறன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பின் சார்பில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் வகையில் தில்லியில் 30.07.2022 சனிக்கிழமை அன்று நடை பெறவிருந்த ஈழத் தமிழர் பிரச்சனைக் குறித்த மாநாட்டிற்கு இந்திய அரசு தடை விதித்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
மாநாடு நடை பெறவிருந்த மண்டபத்தை காவல்துறையினர் பூட்டியதையும், தமிழ்நாட்டிலிருந்து கலந்துகொள்ள சென்ற மாணவர்கள் தங்கியிருந்த இடத்தைச் சுற்றி வளைத்து மத்திய காவல்படை நிறுத்தப்பட்டு அவர்கள் சிறை வைக்கப்பட்டது போன்ற சூழ்நிலை உருவாக்கப்பட்டது அப்பட்டமான மனித உரிமை மற்றும் கருத்துரிமை மீறலாகும்.
பல்வேறு நாடுகளில் நடைபெறும் இனப்படுகொலைகளைக் கண்டித்துப் பல மாநிலங்களில் கட்சிகள் ஆர்ப்பாட்டங்கள், மாநாடுகள் நடத்துகின்றன.
ஆனால், ஈழத் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட பிரச்சனைக் குறித்து நடத்தப்பெறும் நிகழ்ச்சிகளுக்கு மட்டும் தடைவிதிக்கப்படுவது தமிழின எதிர்ப்போக்காகும்.
இதற்கு எதிராக மனித உரிமை அமைப்புகளும், கட்சிகளும் கண்டனக் குரல் எழுப்ப வேண்டுமென வேண்டிக்கொள்கிறேன். என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.