chennireporters.com

கலைஞரின் அரசாணை நிறைவேற்ற வேண்டும் அரசு மருத்துவர்கள் வேண்டுகோள்;

கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கலைஞரின் அரசாணையை (GO 354) உடனே நிறைவேற்ற தமிழக முதல்வருக்கு அரசு மருத்துவர்கள் வேண்டுகோள்:

புதிய ஆட்சி அமைந்து இரண்டு ஆண்டுகள் கடந்த பிறகும் தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்ற வலி ஒவ்வொரு மருத்துவரிடத்தும் அதிகமாகவே இருக்கிறது.

கலைஞரின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும். டாக்டர் கலைஞருக்கு சிலை வைக்கப்படும். கிழக்கு கடற்கரை சாலைக்கு (ECR) முத்தமிழறிஞர் கலைஞர் பெயர் சூட்டப்படும், கலைஞரின் பேனாவுக்கு சிலை வைக்கப்படும், கலைஞர் பெயரில் கிண்டி மருத்துவமனை, மதுரையில் நூலகம் என  தமிழக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்கள்.

மேலும் கலைஞர் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட வருமுன் காப்போம், சமத்துவ புரம் போன்ற திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வரிசையில் கலைஞர் ஆட்சியில் வெளியிடப்பட்டு, 13 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள அரசாணை 354 க்கு உயிர் கொடுக்கும் வகையில், அதை உடனே செயல்படுத்துவதாக அறிவிப்பு வெளியிடுவார்கள் என நம்புகிறோம்.

தமிழகத்தில் முதன்முதலாக கலைஞர் ஆட்சியில் தான் DACP எனப்படும் காலம் சார்ந்த ஊதியம் தரப்பட்டது. மருத்துவர்களின் கடினமான, நீண்டகால படிப்பு, அரசுப்பணியில் எதிர்கொள்ளும் சவால்கள், உயிர்காக்கும் பணி போன்றவற்றை கருத்தில் கொண்டு தான், கலைஞர் அரசாணை 354 மூலம் 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு கிடைத்திட வழி வகை செய்தார். இருப்பினும் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பது போல கடந்த 13 ஆண்டுகளாக அந்த அரசாணையின் பலன்கள் அரசு மருத்துவர்களுக்கு முழுமையாக கிடைக்கவில்லை.

நம் நாட்டிலேயே தமிழகத்தில் தான் ஊதியக் கோரிக்கைக்காக மருத்துவர் ஒருவர் உயிரையே கொடுத்தார். மருத்துவர் லட்சுமி நரசிம்மன் உயிரிழந்த போது, நம் முதல்வர் உடனடியாக அதிர்ச்சியையும், வருத்தத்தையும் தெரிவித்ததோடு, முந்தைய அரசை கண்டித்தார்கள். இருப்பினும் இன்னமும் நம்முடைய கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்பது தான் வேதனையாக உள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் அரசு மருத்துவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்ட போதும், கொரோனா பேரிடரில் தங்கள் வருத்தத்தை வெளிக்காட்டாமல், களத்தில் நின்று பணியாற்றினார்கள். அதாவது உலகையே அச்சுறுத்திய கொரோனாவை எதிர்கொள்ள தமிழகத்தின் பலமாக 19 ஆயிரம் அரசு மருத்துவர்கள் இருந்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் கொரோனாவுக்கு பிறகு கூட உயிர்காக்கும் மருத்துவர்களின் சேவையை அங்கீகரிக்க மறுப்பதோடு மட்டுமன்றி, தொடர்ந்து வேதனைப்பட வைக்கும் ஒரே மாநிலம் தமிழகம் என்பது தான் வருத்தமான உண்மை.

நிதி நெருக்கடியாக இருந்தாலும்,
உயிர்காக்கும் துறை என்ற வகையில் சுகாதாரத் துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து, பல்வேறு திட்டங்களுக்காக, தாராளமாக நிதி ஒதுக்கீடு செய்கிறார்கள். இருப்பினும் இங்கு ஒவ்வொரு உயிரையும் காப்பாற்ற போராடி வரும் மருத்துவர்களுக்கு, உரிய ஊதியம் மறுக்கப்படுவது எந்த வகையிலும் நியாயம் இல்லை என்பது முதல்வருக்கு தெரியும்.

தமிழகத்துக்கு பெருமை சேர்த்து வரும் அரசு மருத்துவர்களுக்கு தொடர்ந்து இங்கு அநீதி இழைக்கப்படுவதை நம் முதல்வர் நிச்சயம் விரும்பமாட்டார்கள் என்று நம்புகிறோம். அதுவும் அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கையை நிறைவேற்ற, அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக 300 கோடி ரூபாய் மட்டுமே தேவைப்படுகிறது.

அதுவும் கொரோனா பரவலுக்கு பிறகு, இங்கு பொது சுகாதாரத் துறையின் முக்கியத்துவம் என்ன என்பதை அனைவரும் நன்றாகவே அறிந்து கொண்டனர்.எனவே நம் சுகாதாரத் துறையை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டும் முதல்வர், அதற்கு முதலில் அரசு மருத்துவர்களுக்கு, உரிய ஊதியத்தை அளிக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்வார்கள். மேலும் அரசு மருத்துவர்களின் நலன்களை புறக்கணித்து விட்டு சுகாதாரத் துறையில் நாம் நாம் அப்படி என்ன சாதிக்க முடியும் என்பதும் நம் முதல்வருக்கு தெரியும்.

இருப்பினும் வருகின்ற ஜூன் 3 ம் தேதி டாக்டர் கலைஞர் பிறந்த நாள் மற்றும் நூற்றாண்டு விழாவையொட்டி, பிறந்த நாள் பரிசாக, அரசு மருத்துவர்களுக்கு 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கை முதல்வர் வழங்க வேண்டுகிறோம்.

இது மக்களுக்கான அரசு மட்டுமல்ல மருத்துவர்களுக்கான அரசாகவும் இருக்கவேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்ட போராட்ட குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க.!