chennireporters.com

ஒன்றாம் வகுப்பு மாணவிக்கு கால் உடைந்தது எப்படி மூடி மறைக்கும் பள்ளி நிர்வாகம்.

ஆவடி அடுத்த திருமுல்லைவாயலில் உள்ள தனியார் பள்ளி முதலாம் வகுப்பு மாணவிக்கு கால் எலும்பு முறிந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தை பாதிப்பு குறித்து பள்ளி நிர்வாகம் அலட்சியமாக இருப்பதாக தந்தை ஆடியோ வெளியீட்டு  தனது குமுறலை வெளிபடுத்தியுள்ளார்.

ஆவடி அடுத்த  அம்பத்தூர் பகுதியில் ஜி.கே ஷெட்டி விவேகானந்தா வித்யாலயா பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு அதே பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவரின் குழந்தை ஒன்றாம் வகுப்பு பயின்று வருகிறார்.நேற்று முன்தினம் திடீரென பள்ளி நிர்வாகம் சார்பில் தன்னை அழைத்து உங்கள் மகளுக்கு சிறு பாதிப்பு ஏற்பட்டுள்ளது,மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம் என கூறியுள்ளனர். இதனையடுத்து அம்பத்துரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது குழந்தைக்கு கால் தொடையில் எலும்பு முறிவு ஏற்பட்டு அனுமதிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதுபற்றி தந்தை பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது குழந்தை கழிவறைக்கு செல்லும்போது விழுந்து காயம் அடைந்துள்ளது என அலட்சியமாக பதிலளித்துள்ளனர்.மேலும் ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் வகுப்பறை 2 வது மாடியில் உள்ளது.  அவர்களின் கழிவறை தரை தளத்தில் உள்ளது. இதனால் மாணவி கழிவறைக்கு செல்லும்போது கால் முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், பள்ளியின் சிசிடிவி காட்சிகள் குறித்து பெற்றோர்கள் கேட்டதற்கு ஒயரை எலி கடித்ததால் சிசிடிவி வேலை செய்யவில்லை என்று அலட்சியமாக கூறியுள்ளனர். இதுமட்டுமின்றி, பள்ளி நிர்வாகம் சார்பில் பேசிய ஒருவர், அரசியல் பின்புலத்தை பயன்படுத்தி, அந்த பெற்றோரை மிரட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஒரு வருஷம் சீக்கிரம் ஓடிடும். குழந்தைக்கு பெரிய பிரச்சனை இல்லை.

ஆயிரம் குழந்தைகள் படிக்குற இடத்துல, ஒண்ணு ரெண்டு பேருக்கு இப்படி நடக்க தான் செய்யும் என்று ஆணவத்துடன் அவர் பேசியுள்ளார். குழந்தையை தனியாக எப்படி கழிவறைக்கு அனுப்பினீர்கள் என்று மாணவியின் தந்தை கேட்டதற்கு துணைக்கு இன்னொரு 5 வயது குழந்தையை அனுப்பினேன் என்று பள்ளியின் ஆசிரியர் ஒருவர் பேசியுள்ளார்.

ஆயம்மாவை கூடவா மாணவிக்கு துணையாக அனுப்ப மாட்டீர்களா என்று திரும்பி கேட்டதற்கு “ எத்தனை ஆயம்மாவை வைத்திருக்க முடியும் சார் என்று சாதாரணமாக அந்த ஆசிரியர் கூறியுள்ளார். இந்த அளவிற்கு பள்ளி நிர்வாகம் மெத்தனமாக இருந்தது, பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் மாணவி காயம் அடைந்தபோது, முறையாக முதலுதவி அளிக்காமலும் பைக்கிலேயே மருத்துவமனைக்கு அழைத்து சென்று, பாதிப்பை இன்னும் தீவிரமாக்கியுள்ளனர். எனவே பள்ளி நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த குழந்தையின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

சமீபகாலமாக, பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு கேள்வி குறியாக உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு கூட, ஸ்ரீமதி என்ற மாணவி பள்ளியின் வளாகத்திலேயே உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்றாம் வகுப்பு சிறுமிக்கு கால் உடைந்த தகவல் குறித்து பள்ளி நிர்வாகத்தை தொடர்பு கொண்டோம்.  அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை பள்ளி நிர்வாகம் தனது கருத்தை தெரிவித்தால் நாம் பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்.

இதையும் படிங்க.!