அதிமுக ஆட்சியில் மதுரை ஆவினில் முறைகேடாக பணி: 47 பேரை நீக்கம் செய்ய ஆணையர் சுப்பையன் அதிரடி உத்தரவு.
மதுரை: அதிமுக ஆட்சியில் மதுரை ஆவினில் முறைகேடாக பணியில் சேர்ந்த 47 பேரை நீக்கம் செய்ய ஆணையர் சுப்பையன் உத்தரவிட்டுள்ளார். மதுரை ஆவினில் அதிமுக ஆட்சியில் மேலாளர், உதவி பொது மேலாளர் உட்பட 61 பணியிடங்கள் நேரடியாக நிரப்பப்பட்டன.
2020,2021ம் ஆண்டுகளில் நடந்த பணி நியமனங்களில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. விண்ணப்பிக்காமல் நேரடி தேர்வு, தகுதியுள்ளோரை நேர்காணலுக்கு அழைக்காதது உட்பட பல முறைகேடுகள் நடந்ததாக கூறப்பட்டது.
இது தொடர்பாக ஆவின் லஞ்ச ஒழிப்பு பிரிவு, பால்வளம் துணை பதிவாளர் தலைமையில் விசாரணை நடைபெற்று ஆணையருக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் மேலாளர் உட்பட நேரடியாக நியமிக்கப்பட்ட 47 பேரின் நியமனங்களில் முறைகேடு நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் மதுரை ஆவினில் முறைகேடாக பணியில் சேர்ந்த 47 பேரை நீக்கம் செய்ய ஆணையர் சுப்பையன் உத்தரவிட்டுள்ளார். மேலும் மதுரை ஆவினில் முறைகேடாக பணி நியமனம் நடக்க காரணமான தேர்வுக்குழு மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.