காஞ்சிபுரம் தொல்லியல் கழக கருத்தரங்கை துவக்கி வைத்து நீதிபதி அ. முகமது ஜியாவுதீன் பேச்சு! காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொல்லியல் கழகத்தின் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் மேனாள் மாவட்ட நீதிபதியும் தமிழ்நாடு அரசின் மாநிலச் சட்ட ஆட்சிமொழி ஆணையத்தின் முழு நேர உறுப்பினருமான அ. முகமது ஜியாவுதீன் சிறப்புரை ஆற்றும்போது வரலாறு படிப்பவர்கள் மட்டும்தான் வரலாறு படைக்க முடியும்! என்று கூறினார். மேலும் அவர் பேசியதாவது:-
எந்த ஒரு செயலும் மக்கள் இயக்கமாக மாறும் போது தான் அது
வெற்றி பெறும். தொல்லியல் கழகத்தின் சார்பில் நமது அடையாளங்களை மீட்டெடுக்கும் நிகழ்வை மக்கள் இயக்கமாகவே கொண்டு செல்லுகிற உங்களை நான் மனதார போற்றுகிறேன். தொல்லியல் கழகத்தின் சார்பில் நடைபெறும் நிகழ்வில் இவ்வளவு திரளாக பார்வையாளர்களும், திறனாளர்களும், பேராளர்களும் கலந்து கொண்டிருப்பது மகிழ்ச்சியை தருகிறது.
உலகம் முழுவதும் அகழ்வாய்வின் மூலம் ஒவ்வொரு சமூகமும் தனது பாரம்பரிய அடையாளங்களையும் உயரிய மரியாதையையும் மீட்டெடுத்துக் கொண்டிருக்கின்றன. உலகம் முழுவதும் மூழ்கிப் போன நகரங்களில் இருக்கும் கட்டிடங்கள் ஒரு சமூகம் எவ்வாறு வாழ்ந்திருக்கிறது என்பதை காட்டுகிறது. தமிழ்நாட்டில் தொல்லியல் அகழ்வாய்வுகள் கிடைக்கக்கூடிய விஷயங்கள் தமிழர்கள் பன்னெடுங்காலமாக கல்வியில் உயர்ந்து இருக்கிறார்கள் என்பதையும் தமிழர்களின் உயரிய வாழ்க்கை நெறிகளையும் வெளிக்காட்டுகிறது.
நமது அடையாளங்களை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் வரலாறு படைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வரலாறு படிப்பவர்களாக இருக்க வேண்டும். வரலாற்றை படிப்பவர்கள் மட்டும்தான் வரலாறு படைக்க முடியும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
மாவட்ட நீதிபதி ப.உ. செம்மல்:
———————————————-
அரசு அதிகாரிகள் நேர்மையாக இருக்க வேண்டும் என்கிற அதே நேரத்தில் அடித்தட்டு மக்களின் மீது அன்புள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருக்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் முதன்மை மாவட்ட நீதிபதி ப.உ. செம்மல் அவர்கள் நேர்மையான நீதிபதி மட்டுமல்ல, மனிதநேயமிக்க நீதிபதியும் ஆவார்.
பொன்னாடை:
———————-
இந்த நிகழ்ச்சியில் அனைத்து விசயங்களையும் சிறப்பான கவனத்தோடு ஒருங்கிணைத்திருப்பது மகிழ்ச்சியை தருகிறது. அதற்காக இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு நான் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக இங்கே பொன்னாடை அணிவிக்கிற போது பயன்படும் பயனாடையாக அறிவித்திருக்கிறீர்கள். இந்த காஞ்சிபுரத்தில் பிறந்து உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் வாழ்வு உயர்வதற்காக வாழ்நாள் முழுவதும் உழைத்த பேரறிஞர் அண்ணா அவர்கள் தொடங்கிய இயக்கத்தில் தான் மேடைகளில் துண்டு அணிவிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அதற்கு ஒரு வரலாறு உண்டு. நெசவாளர்கள் வறுமையில் இருந்த போது அவர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக கைத்தறி ஆடைகளை வாங்கி அவர்களை ஊக்கப்படுத்தவும் அதுவரை இடுப்பில் துண்டு அணிந்து நடந்தவர்களை தோளில் துண்டு அணிவித்து மரியாதை உருவாக்க வேண்டும் என்பதற்காக மேடைகளில் துண்டு அணிவிப்பதற்கு பேரறிஞர் அண்ணாவின் இயக்கம் முக்கியத்துவம் கொடுத்தது. இன்றைக்கு பல மேடைகளில் எதற்கும் பயன்படாத துணிகளை பொன்னாடைகளாக அணிவிக்கிறார்கள். ஆனால் நீங்கள் பயன்படும் சால்வை அணிவித்துள்ளீர்கள். அதற்காகவும் உங்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நமது ஒவ்வொரு செயலும் பிறருக்கு பயனடையும் வகையில் அமைய வேண்டும். இங்கே மரம் நடுவது பற்றி பேசினார்கள். நான் தேனியில் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் தலைவர் / மாவட்ட நீதிபதியாக பணியாற்றிய போது தேவையில்லாமல் ஐந்து மரங்களை வெட்டிய ஊராட்சிக்கு 100 மரங்களை நட்டு வளர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டேன். மரம் வளர்க்க வேண்டும் என்கிற உணர்வு நம் எல்லோருக்கும் வர வேண்டும். இஸ்லாமியர்களோடு பேரீச்சம் மரமும், கிருத்தவர்களோடு ஒலிவ மரமும், இந்து மதம் மற்றும்
தமிழ் மரபில் ஆலமரமும், அரச மரமும் இணைத்திருப்பது மரம் வளர்க்க வேண்டும் என்பதன் அவசியத்தை வெளிக்காட்டுகிறது. ஒரு காகம் தனது வாழ்நாளில் அதனுடைய எச்சத்தின் மூலம் ஆயிரக்கணக்கான மரங்களை
நடுகிறது. நாம் ஒவ்வொருவரும் மரம் வளர்க்க வேண்டும் என்பதன் முக்கியத்துவத்தை உணர வேண்டும் என்று பேசினார்.
பங்கேற்றோர் :
————————
தொல்லியல் கழகத்தின் சார்பில் காஞ்சிபுரம் ஏனாத்தூரில் அமைந்துள்ள
ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற 32 ஆம் ஆண்டு கருத்தரங்கு மற்றும் 34வது ஆவணம் இதழ் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் தொல்லியல் கழகத்தின் தலைவர் பி. மங்கையர்க்கரசி தலைமை தாங்கினார். தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் கல்வெட்டியல் துறை, முன்னாள் தலைவர் பேராசிரியர் சுப்பராயலு கருத்தரங்க நோக்க உரை நிகழ்த்தினார். அதனை தொடர்ந்து கருத்தரங்கை தொடங்கி வைத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்து மேனாள் மாவட்ட நீதிபதியும் தமிழ்நாடு அரசின் மாநிலச் சட்ட ஆட்சிமொழி ஆணையத்தின் முழு நேர உறுப்பினருமான நீதிபதி முகமது ஜியாவுதீன் சிறப்புரை ஆற்றினார்.
“ஆவணம்” இதனை வெளியிட்டு காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி ப.உ. செம்மல் சிறப்புரையாற்றினார். ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் ராம வெங்கடேசன், “ஆவணம்” இதழை
பெற்றுக் கொண்டார். முன்னதாக தொல்லியல் கழகத்தின் செயலாளர் முனைவர் வி. செல்வகுமார் வரவேற்புரை ஆற்றினார். முடிவில் உள்ளூர் செயலாளர் வீரராகவன் நன்றி கூறினார்.
தொடர்ந்து நடந்த கருத்தரங்கில் முனைவர் கா. ராஜன், சு. உமா சங்கர், பொறியாளர் இரா. கோமகன், மருத்துவர் சிதம்பரம்பொன்னம்பலம்,
சோழர் சிவப்பிரகாஷ், பொன். வெங்கடேசன், வேதாச்சலம், அஜய் குமார்,
புலவர் செந்தீ நடராசன், முனைவர் மா. பவானி, மணியன் கலியமூர்த்தி, உள்ளிட்ட பலர் உரையாற்றினார்கள். மாலை சென்னை நாடகக் குழுவின் சார்பில் “மகேந்திர பல்லவனின் மந்த விலாச பிரகசனம்” என்ற கலை நிகழ்ச்சி நடைபெற்றது. கலை நிகழ்ச்சியை பிரளயம் நெறியாளுகை செய்தார்.