சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தலில் வெற்றி கனியை பறித்து மகுடம் சூடப்போவது யார் என்ற கேள்வி இப்பொழுதே எழத்தொடங்கி உள்ளது.
இந்தியாவின் பழமையான வழக்கறிஞர்கள் சங்கங்களில் ஒன்றான சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் (M.H.A.A) சங்கத் தேர்தல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட்டு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். சில ஆண்டுகளாக தேர்தல் நடக்காமல் நீதிமன்றத்தில் தேர்தல் நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது.
அந்த வழக்கு தற்போது முடித்து வைக்கப்பட்டு தேர்தல் நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தற்போதைய தலைவராக இருக்கும் மோகன கிருஷ்ணன் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
வழக்கறிஞர் மோகன கிருஷ்ணன்.
இவரை எதிர்த்து பாஜக தரப்பில் வழக்கறிஞர் பால்கனகராஜ் போட்டியிடுகிறார். தமிழகத்தில் எந்த பதவிகளிலும் காலூன்ற முடியாத பாஜக வழக்கறிஞர்கள் சங்க தேர்தலில் முதல் முறையாக அனைத்து பதவிகளிலும் போட்டியிட முடிவு செய்துள்ளது. அதாவது தலைவர், துணை தலைவர் ,செயலாளர், பொருளாளர்,நூலகர் மற்றும் 11 செயற்குழு உறுப்பினர்கள்.
வழக்கறிஞர் பால்கனகராஜ்.
இதற்காக பல லட்ச ரூபாய் தேர்தல் செலவிற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள் வழக்கறிஞர்கள். தி.மு.க. கட்சியில் வக்கீல்கல் பலமான அணியாக இருப்பதைப்போல பாஜகவிலும் வழக்கறிஞர் அணியை கட்டியமைக்க வேண்டும் என்று பாஜக கருதுகிறது.
ஆனால் தமிழகத்தில் நாளுக்கு நாள் பா.ஜ.கவிற்கும் பா.ஜ.கவை சார்ந்த தலைவர்களுக்கும் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இதுவே அந்த கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்துகிறது.
சில தினங்களாக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தேர்தலுக்கான ஓட்டு வேட்டை வேகமாக தொடங்கியுள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருக்கும் நிலையில் அதன் கூட்டணியை சேர்ந்த வழக்கறிஞர்களும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தில் இணைந்து பாஜகவை வெற்றி பெறச் செய்யாமல் தடுக்க வேண்டும் என்ற முனைப்போடு இப்போதே வேலை செய்ய ஆரம்பித்து விட்டார்கள் என்கிறார்கள் சில வழக்கறிஞர்கள்.