chennireporters.com

காங்கிரஸ் கட்சியின் தலைவரானார் கர்நாடகத்தின் கருப்பு சிங்கம் மல்லிகார்ஜுன கார்கே.

கர்நாடகத்து கருப்பு சிங்கம் காங்கிரஸ் தலைவர் ஆனார் மல்லிகார்ஜூன கார்கே – 22 ஆண்டுகளுக்கு பின் நேரு குடும்பம் அல்லாத ஒருவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்கட்டுள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததால், காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகினார். இடைக்கால தலைவராக சோனியாகாந்தி பொறுப்பேற்றார்.

இதைத்தொடர்ந்து, கட்சிக்கு முழுநேர தலைவரை தேர்ந்தெடுக்க கடந்த 17-ந்தேதி தேர்தல் நடத்தப்பட்டது. மல்லிகார்ஜுன கார்கேவும், சசிதரூரும் போட்டியிட்டனர். நாடு முழுவதும் 68 இடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

9 ஆயிரத்து 915 மாநில காங்கிரஸ் கமிட்டி பிரதிநிதிகள் ஓட்டுப்போட தகுதி பெற்றிருந்தனர். அவர்களில் 9 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் வாக்களித்தனர். ஓட்டு பதிவு முடிவடைந்தது டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமையகத்துக்கு வாக்கு பெட்டிகள் நேற்று கொண்டு செல்லப்பட்டது. அங்கு ஓட்டுப்பெட்டிகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு, பாதுகாப்பு பெட்டக அறையில் வைக்கப்பட்டது.

இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் 7 ஆயிரத்து 897 வாக்குகள் பெற்று மல்லிகார்ஜுன கார்கே அபார வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சசிதரூர் 1000 வாக்குகள் பெற்று தேல்வியடைந்தார். 416 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன.

காங்கிரசின், 137 ஆண்டு கால வரலாற்றில் தலைவர் பதவிக்கு, ஆறாவது முறையாக நடந்த தேர்தலில் 22 ஆண்டுக்குப் பின், சோனியா குடும்பத்தைச் சாராத ஒருவர் தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.

இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள மல்லிகார்ஜுன கார்கேவுக்கு,கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்துளளார்.மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பூங்கொத்து கொடுத்து தனது வாழ்த்தை தெரிவித்தார்.

இதையும் படிங்க.!