முதல்வரின் குட்புக்கில் பி.டி.ஆர் விரும்பிய முருகானந்தம் ஐ.ஏ.எஸ்.

May 16, 2023

By இரா. தேவேந்திரன்.

முதல்வரின் குட் புக்கில் பி டி ஆர் விரும்பிய முருகானந்தம் ஐஏஎஸ் எப்படி முதல்வரின் கவனத்தை ஈர்த்தார் என்பதுதான் தமிழகத்தில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகளின் கேள்வியாக இருக்கிறது. முருகானந்தம் ஐஏஎசின் பயணம் எப்படிப்பட்டது யார் இந்த முருகானந்தம் ஐஏஎஸ்.!

முதலமைச்சரின் தனிச் செயலாளரான உதயச்சந்திரன், நிதித்துறை செயலாளராக மாற்றப்பட்ட நிலையில், அவர் வகித்து வந்த இடத்திற்கு ஐஏஎஸ் அதிகாரி முருகானந்தம் நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் பின்னணி என்ன?

 

கணினி அறிவியலில் இளங்கலைப் பொறியியல் பட்டப்படிப்பை முடித்த என்.முருகானந்தம், ஐஐஎம் லக்னோவில் எம்.பி.ஏ பட்டம் பெற்றவர். 1991ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் பேட்சை சேர்ந்த இவர், தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் முக்கிய பொறுப்புகளை வகித்திருக்கிறார்.

கொரோனா காலத்தில், அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமிக்கப்பட்டனர். அதில், விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளராக என்.முருகானந்தம் நியமிக்கப்பட்டார். அந்த சமயத்தில், நிவாரணப் பணிகளை மேற்கொண்டு, கொரோனா பரவலை தடுக்க கட்டுப்பாட்டு மண்டலங்களை அமைத்து, தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டு சிறப்பாக செயல்பட்டவர் முருகானந்தம்.

 

கடந்த அதிமுக ஆட்சியில் தொழிற்துறையின் முதன்மை செயலாளராக பதவி வகித்தார். திமுக அரசு அமைந்தவுடன் நிதித்துறை முதன்மை செயலாளராக என்.முருகானந்தம் நியமிக்கப்பட்டார். கடந்த 20 ஆண்டுகளாக நிதித்துறையில் அனுபவம் பெற்றவர்களே நிதித்துறை செயலாளர்களாக நியமிக்கப்பட்டு வந்துள்ளனர்.

ஆனால், முதல்முறை நிதித்துறையில் அனுபவம் இல்லாத முருகானந்தம் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இவர் உள்துறையின் முதன்மை செயலாளராக வர விரும்பியதாக கூறப்படுகிறது. ஆனால், பல்வேறு காரணங்களால், அவரால் உள்துறை முதன்மை செயலாளராக வர முடியவில்லை.

 

கடந்த 2021ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் கூடுதல் தலைமை செயலாளராக பதவி உயர்வு பெற்றார். முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் முழு பட்ஜெட் தயாரிப்பில் என்.முருகானந்தம் முக்கிய பங்களிப்பை செலுத்தியதற்கு பலரால் பாராட்டப்பட்டார். பட்ஜெட் தயாரிப்பில் முருகானந்தம் சிறப்பாக பணியாற்றினார் என்று பி டி ஆர் அவரை வெகுவாக பாராட்டினார். பி டி ஆர் விரும்பிய முருகானந்தத்தை தற்போது முதல்வரின் தனி செயலாளராக மாற்றி இருக்கிறது தமிழக அரசு.

Share:

இரா. தேவேந்திரன்.

May 16, 2023

Leave a Comment