chennireporters.com

நாக்பூர் டெஸ்ட்: நடுவருக்கு தெரிவிக்காமல் விரலில் கிரீம் தடவிய ஜடேஜாவுக்கு ஐசிசி அபராதம்.

நாக்பூர்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது விரலில் கிரீம் தடவியதற்காக ரவீந்திர ஜடேஜாவுக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது.

நாக்பூரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்கள் வீழ்த்தினார். இரண்டாம் இன்னிங்ஸில் 2 விக்கெட்கள் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.

இந்நிலையில் இந்த ஆட்டத்தின் போது ரவீந்திர ஜடேஜா, மொகமது சிராஜிடம் இருந்து திரவம் போன்ற பொருளை வாங்கி தனது இடது ஆள்காட்டி விரலில் தடவினார். அந்த நேரத்தில் பந்தை கையில் வைத்திருந்தாலும், ஜடேஜா அதில் எதையும் தேய்க்கவில்லை.

இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதங்களில் வெளியானது. இதைத் தொடர்ந்து ஜடேஜா பந்தை சேதப்படுத்தியதாக சமூக வலைதளங்களில் பலர் குற்றசாட்டுகளை முன்வைத்தனர். இதுதொடர்பாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் உள்ளிட்ட சில வீரர்கள் கேள்விகளை எழுப்பினர். இதற்கிடையில், ஜடேஜா தனது பந்துவீச்சு கையின் ஆள்காட்டி விரலில் வலி நிவாரணி க்ரீம் தடவி வருவதாக இந்திய அணி நிர்வாகம் போட்டி நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட்டிடம் தெரிவித்தது.

 

இதனால் இந்த விவகாரம் பெரிய அளவில் பூதாகரமாகவில்லை என்று எண்ணிய நேரத்தில் ஜடேஜாவுக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது. கள நடுவர்களுக்குத் தெரிவிக்காமல் விரலில் கிரீம் தடவியதற்காக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் (ஐசிசி) அவருக்கு அபராதம் விதித்துள்ளது. அதன்படி, ஜடேஜாவின் ஆட்டக் கட்டணத்தில் 25 சதவீதம் அபராதமாக வசூலிக்கப்பட உள்ளது.

ஐசிசி தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில், “ஐசிசி நடத்தை விதிகள் 2.20-ஐ ரவீந்திர ஜடேஜா மீறியது கண்டறியப்பட்டது, இது விளையாட்டின் ஆன்மாவுக்கு முரணான நடத்தையை வெளிப்படுத்துவது தொடர்பானது. சுழற்பந்து வீச்சாளர் தனது கையின் ஆள்காட்டி விரலில் உள்ள வீக்கத்திற்கு கிரீம் தடவுவதாக இந்திய அணி நிர்வாகம் விளக்கியுள்ளது.

இது கள நடுவர்களிடம் அனுமதி கேட்காமல் செய்யப்பட்டது. போட்டி நடுவர், வீரர் பயன்படுத்திய க்ரீம் விரலில் முற்றிலும் மருத்துவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டதாக திருப்தி அடைந்தார். மேலும், கிரீம் பந்தில் செயற்கைப் பொருளாகப் பயன்படுத்தப்படவில்லை, அதன் விளைவாக, அது பந்தின் நிலையை மாற்றவில்லை.”

இதையும் படிங்க.!