chennireporters.com

தமிழர்கள் போற்றும் பென்னிகுக்.

பென்னிகுக் 182வது பிறந்த நாள் விழா தேனி மாவட்டத்தில் பொங்கல் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.  தென்தமிழக மக்களின் தாகம் தீர்த்தவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஆண்டு தோறும் கொண்டாடி வருகிறார்கள்.

பெரியாறு அணை கட்டி தென் தமிழக மக்களின் தாகம் தீர்த்த கர்னல் ஜான் பென்னிகுக்கின் 182வது பிறந்தநாளை தென் தமிழக விவசாயிகளும், மக்களும்  கொண்டாடி வருகின்றனர். ஒரு ஆங்கிலேய பொறியாளரின் படத்தை வீடுதோறும் வைத்து தெய்வமாக கொண்டாட காரணம் என்ன? தைத்திருநாள் பொங்கலை பென்னிகுக் பொங்கலாக கொண்டாட காரணம் என்ன? இதற்கு ஒரே பதில் ‘‘பெரியாறு அணை’’. கர்னல் ஜான் பென்னிகுக் கட்டிய பெரியாறு அணைதான் இன்று தென் தமிழகத்தை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. 18ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தென் தமிழகத்தை வளப்படுத்தி வந்த வைகை ஆறும் பொய்த்துப் போனது.

இதனால் மதுரை, ராமநாதபுர மாவட்டங்களில் (தற்போது தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம்) விவசாயம் சீர்குலைந்தது. விவசாயத்தை மட்டுமே நம்பியிருந்த இப்பகுதி மக்கள் பசி, பஞ்சம், பட்டிணியால் சொந்த நிலத்தை விட்டு புலம் பெயர்ந்தனர். அப்போது சுந்தர மலையில், சிவகிரி சிகரத்தில் உருவாகி, 300 கிலோமீட்டர் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் வடமேற்கு திசையில் பாய்ந்து, அரபிக்கடலில் கலக்கும் ஆற்றுநீரை தென்தமிழகம் நோக்கி திருப்பி கொண்டுவர, முல்லைப்பெரியாறு அணைகட்டி தென்தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியவர் பென்னிகுக்.

இந்தியாவில் ராணுவஜெனரலாக பணியாற்றிய லண்டனைச்சேர்ந்த பிரிகேடியர் ஜெனரல் ஜான்-சாரா தம்பதிகளின் மகனாக, 1841ம் ஆண்டு ஜன.15ல், இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலம் புனேயில் பென்னிகுக் பிறந்தார். ஆரம்ப கல்வியை இந்தியாவில் முடித்த அவர் லண்டன் பொறியியல் கல்லூரியில் ராயல் என்ஜினியர் பட்டப்படிப்பும், ராணுவக் கல்லூரியில் மேற்படிப்பும் முடித்தார். நவம்பர் 11, 1860ல் இராணுவப் பொறியாளராக இந்தியா வந்தார் பென்னிகுக். 1874ல் பெரியாறு அணை சர்வே திட்ட அதிகாரியாக பதவியேற்றார். பெரியாறு அணைகட்டவேண்டிய இடம், நீர்வழிந்தோட சிற்றணை (பேபிஅணை), நீரில் மூழ்கும் வனப்பரப்பு, அணையின் உயரம், தண்ணீர் தேங்கும் அளவு, திறந்தவெளி கால்வாய், தமிழகப்பகுதிக்கு தண்ணீர் கொண்டுவர சுரங்கம் தோண்டவேண்டிய பகுதி என சர்வே செய்து அரசிடம் ஒப்படைத்தார்.

பின் லண்டன் சென்ற அவர் 1879ல் தனது 38 வது வயதில் லண்டனைச் சேர்ந்த செல்வசீமாட்டி கிரேஸ் ஜார்ஜினாவை மணம்முடித்தார். 1885ல் சென்னை ராஜதானி மற்றும் திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கிடையே பெரியாறு அணை தொடர்பாக 999 ஆண்டு காலத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதைத்தொடர்ந்து ரூ.43 லட்சம் திட்ட மதிப்பீட்டில் பெரியாறு அணைக்கட்டும் பொறுப்பை பென்னிகுக்கிடம் ஒப்படைத்தது ஆங்கிலேய அரசு. பென்னிகுக் தலைமையில் பிரிட்டீஷ் ராணுவத்தின் கட்டுமானத்துறை பெரியாறு அணைகட்டும் பணியினை மேற்கொண்டது.

தொடர் மழை காரணமாக திடீரென உருவான காட்டாற்று வெள்ளம், அடித்தறையிலிருந்த 52 அடி உயரத்தில் கட்டிய அணையினை அடித்துச்சென்றது. இதனால் மீண்டும் இத்திட்டத்திற்கு பணம் ஒதுக்கீடு செய்ய மறுத்தது ஆங்கிலேய அரசு. இதனால் லண்டனிலுள்ள சொத்துக்களை விற்று அணை கட்ட பென்னிகுக்கிற்கு உதவினார் அவரது மனைவி. இதையடுத்து 1895ல் பென்னிகுக் முல்லைப்பெரியாறு அணையையும், சுரங்க வாய்க்காலையும் கட்டி முடித்தார். 1895 அக்.10ல் மதராஸ் கவர்னர் வென்லாக் தமிழகப்பகுதிக்கு தண்ணீர் திறந்து வைத்தார். பெரியாறு அணை தண்ணீரால் தென்தமிழகத்திலுள்ள 2 லட்சத்து 8 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனவசதி பெற்றதுடன் 5 மாவட்ட குடிநீராகவும் பயன்படுகிறது.

முல்லைப்பெரியாறு அணையைக் கட்டி தென் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திய கர்னல் ஜான் பென்னிகுக் தென் தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளார். இவரது பிறந்த நாளான ஜன. 15 தமிழர் திருநாளான பொங்கல் தினத்தன்று இருப்பதால், தென் தமிழக மக்கள் பொங்கல் விழாவை பென்னிகுக் பொங்கலாக கொண்டாடி வருகின்றனர்.

தமிழக அரசும் கடந்த 2019 முதல், பென்னிகுக்கின் பிறந்தநாள் விழாவை அரசு விழாவாக கொண்டாடி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தேனி மாவட்டத்தில் ஜூன் மாதம் விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் போதும், நாற்று நடவு, கதிர் அறுப்பின் போதும் இப்பகுதி மக்கள் பென்னிகுக்கின் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செய்கின்றனர். அவரது தியாகத்தை போற்றும் விதமாக இப்பகுதி மக்கள் அவரின் உருவப் படத்தில் ‘‘நீர் இருக்கும் வரை நீர் இருப்பீர்’’ என்ற வாசகத்தோடு வீடுகள் தோறும் வைத்து வழிபடுவதில் வியப்பேதும் இல்லை

 

முல்லைப் பெரியாறு அணை கட்டும் ஒப்பந்தத்தை 1886 அக்.29ல் திருவிதாங்கூர் சமஸ்தானமும், சென்னை ராஜதானியும் செய்துகொண்டாலும், 1887ல் செப்டம்பர் மாதம் பெரியாறு அணை கட்டும் வேலைக்கான முதல் கல்லை நட்டார் பென்னிகுக். அணை கட்டும் பணியில் 5000 தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். 1895 பெரியாறு அணை கட்டி முடிக்கப்பட்டது. பெரியாறு அணைக்கட்டு முகாமில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ள ஆவணங்களின்படி 1892 முதல் 1895 வரை 442 பேர் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபொழுது மரணமடைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பெரியாறு அணை கட்ட அன்றைய கணக்கின்படி 81.30 லட்சம் ரூபாய் செலவாகி உள்ளது.

 

பென்னி குக்குடன் பணியாற்றிய பொறியாளர் எ.டி.மெக்கன்சி எழுதிய ‘‘ஹிஸ்டரி ஆப் தி பெரியார் ரிவர் பிராஜெக்ட்’’ என்னும் நூலில், அணை கட்டும்போது ஏற்பட்ட சிரமங்கள் பற்றியும் கூறியுள்ளார். அதில், கருங்கல்லை ஆறங்குல கனத்தில் உடைத்தெடுத்து அடுக்கி வைத்து சுர்க்கியும் கலவையும் உபயோகித்து அணை கட்டப்பட்டுள்ளது. வெளியில் காணப்படுகின்ற கருங்கற்கள் கீழிருந்து 120 அடி உயரம் வரை சிமென்ட் பூசப்பட்டுள்ளது. இறக்குமதி செய்த சிமென்ட்டைத்தான் இதற்கு உபயோகப்படுத்தப்பட்டள்ளது.

இதையும் படிங்க.!