chennireporters.com

தட்டச்சு தேர்வு தேதியை மாற்றவேண்டும் மாணவர்கள் கோரிக்கை.

ஒரே நாளில் காவலர் தேர்வு மற்றும் தட்டச்சு தேர்வு நடைபெறுவதால் மாணவர்கள் குழப்பம் அடைந்து வருகின்றனர் எனவே தட்டச்சு தேர்வு தேதியை மாற்றி அமைக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் வரும் நவம்பர் 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு காவல்துறையின் இரண்டாம் நிலை காவலருக்கான எழுத்து தேர்வு நடைபெறுகிறது. அதே வேளையில் வரும் 26 மற்றும் 27ஆம் தேதிகளில் தொழில்நுட்ப கல்வி துறையால் நடத்தப்படும் தட்டச்சு தேர்வுகளும் நடைபெற இருக்கிறது. தட்டச்சு தேர்வு கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. பின்னர் நிர்வாக காரணங்களால் மாற்றம் செய்யப்பட்டு செப்டம்பர் 24, 25 தேதிகளுக்கு மாற்றம் செய்தார்கள்.

மேலும் இந்த ஆண்டு இத்தேர்வில் சில மாற்றங்கள் என்று தொழில்நுட்பக் கல்வித் துறை அறிக்கை வெளியிட்டிருந்தது. இதை எதிர்த்து தட்டச்சு பயிற்சிப் பள்ளி நடத்துபவர்கள் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார்கள். அந்த வழக்கின் தீர்ப்பில் நவம்பர் 13-ஆம் தேதிக்குள் தட்டச்சு தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.

இதனை அடுத்து நவம்பர் 12, 13-ஆம் தேதிகளில் கனமழை காரணமாக இந்த தட்டச்சு தேர்வு நவம்பர் 19,  20-ம் தேதிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டது. நவம்பர் 19ஆம் தேதி குரூப் 1 தேர்வு இருந்த காரணத்தினால் இத் தேர்வு வரும் நவம்பர் 26,  27 ஆம் தேதிகளுக்கு மீண்டும் மாற்றம் செய்யப்பட்டது. தற்போது வரும் 27ஆம் தேதி இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வும் நடைபெறுகிறது. ஒரே நேரத்தில் தட்டச்சு தேர்வுக்கும், காவலர் தேர்வுக்கும் தயாராகும் தேர்வர்கள் இதனால் குழம்பிப் போய் உள்ளார்கள்.

 

ஏற்கனவே பலமுறை தட்டச்சு தேர்வு தள்ளி வைக்கப்பட்ட காரணத்தினால் காவலர் தேர்வை ஓரிரு வாரங்கள் தள்ளி வைக்கப்படுமா என்று தேர்வர்கள் எதிர்பார்க்கின்றனர். இம்முறையும் தட்டச்சு தேர்வினை தள்ளி வைத்தால் தேர்வர்கள் மிகவும் அவதிப்படுவார்கள்.

1. ஏற்கனவே இரண்டு மாதம் கழித்துதேர்வு நடப்பதால் தட்டச்சு பயிற்சி பள்ளிக்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை.

2. தட்டச்சு பயிற்சி பள்ளி நகரங்களில் மட்டும் இருப்பதால் கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு வந்து செல்லும் மாணவ மாணவிகள் தட்டச்சு பயிற்சி பள்ளி கட்டணம் ரூ600 என்றால் கிராமங்களில் இருந்து வந்து செல்ல தினசரி 30 ரூபாய் வீதம் ரூ 800 வரை பஸ் கட்டணமாக செலுத்த வேண்டிய நிலை உள்ளது.

எனவே தட்டச்சு தேர்வில் உள்ள நடைமுறையை சிக்கலை கருத்தில் கொண்டு காவல்துறை இரண்டாம் நிலை காவலர் தேர்வு தள்ளி வைப்பதே சரியாக இருக்கும்.

இதற்கிடையில் தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தால் 16-11-2022 அன்று ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது அதில் வரும் நவம்பர் 26 27 ஆம் தேதிகளில் உங்களுக்கு வேறு ஏதேனும் தேர்வு இருப்பின் தேதி மாற்றம் வேண்டும் என்றால் அதை வேண்டுகோளாக எங்களுக்கு மெயில் அனுப்பலாம் என்று குறிப்பிட்டு உள்ளார்கள்.

அவ்வப்போது அரசு அனுப்பும் சுற்றறிக்கையை கவனிக்கும் தன்மை மாணவர்களிடமும் இல்லை, தட்டச்சு பயிற்சி பள்ளி நடத்துபவர்களிடமும் இல்லை.. இந்த அறிக்கையை கவனித்த சிலரோ மெயில்கள் அனுப்பும் அளவுக்கு அடிப்படை புரிதல்கள் இல்லாத காரணத்தினால் ஏதாவது ஒரு தேர்வை விட்டுவிடலாம் என்றும் இருக்கிறார்கள்.

இப்படியாக குழப்பத்தில் வரும் சனி, ஞாயிற்று கிழமைகளில் இரண்டு தேர்வுகளும் நடக்க இருக்கிறது.

எனவே தட்டச்சு தேர்வை மாற்றி அமைக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர் அரசு இதை கனிவுடன் மாணவர்களின் நலன் கருதி தேதியை மாற்ற மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்கின்றனர்.

இதையும் படிங்க.!