chennireporters.com

எடப்பாடிக்கு தமிழக பாஜக கடும் கண்டனம்:

பாஜ தலைவர் விவகாரம் எடப்பாடிக்கு அண்ணாமலை ஆதரவாளர் கடும் கண்டனம்: அதிமுக, பாஜ மோதல் விஸ்வரூபம் எடுக்கிறது

எடப்பாடிக்கு அண்ணாமலை ஆதரவாளர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பாஜவின் ஐடி விங்க் தலைவர் நிர்மல் குமார் நேற்று முன்தினம் பாஜவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இது பாஜவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஒரு கூட்டணி கட்சியில் உள்ள நிர்வாகி ஒருவர், கூட்டணியில் இருக்கும் மற்றொரு கட்சியில் தங்களை இணைத்து கொள்வதை எந்த கட்சியும் விரும்பாது. இணைந்தால் ஏற்று கொள்ள மாட்டார்கள். இதுதான் காலம் காலமாக தமிழக அரசியலில் இருந்து வருகிறது.

இந்த நடைமுறையை அதிமுக நேற்று முன்தினம் உடைத்தது. அதாவது, பாஜ ஐடி விங் மாநில தலைவர் நிர்மல் குமாரை அதிமுகவில் இணைத்து கொண்டது.  அதுவும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடியை நேரில் சந்தித்து அதிமுகவில் நிர்மல்குமார் இணைந்தார்.

பாஜ தலைவர் அண்ணாமலையுடன் நெருக்கமாக இருந்தவரும்,  ஐடி பிரிவின் மாநில தலைவராக இருந்த நிர்மல் குமார், அதிமுகவில் இணைந்தது பாஜவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  அதே நேரத்தில் பாஜ தலைவர் அண்ணாமலை, ‘சி.டி.ஆர்.நிர்மல் குமார், நீங்கள் எங்கு சென்றாலும் உங்களது பணி சிறக்கட்டும்’ என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கிடையில், தமிழக பாஜ விளையாட்டு திறன் மேம்பாட்டு பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டி தனது டிவிட்டர் பதிவில்  எடப்பாடிக்கு கடும் கண்டனம் தெரிவித்து டுவீட் செய்திரருந்தார்.

நான்கு ஆண்டு காலம் ’420க்களாக’ வலம் வந்தவர்கள் கதையெல்லாம் ஊரறிந்த விவகாரம். அப்படி இருக்கையில், கொள்கையற்ற கட்சி மாறி-பிழைப்புவாதிகளை வைத்து, அடுத்தவரை கேவலப்படுத்தி ரசிக்கும் கேவலமானவர்கள் தலைமைப் பொறுப்புக்கு தகுதியானவரா?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஜனநாயக மரபுகளை காலில் போட்டு மிதித்து, ஜனநாயகம் குறித்து வாய் கிழிய பேசலாமா. இனி, அந்தச் சொல்லை பயன்படுத்தாமல் இருப்பதே அச்சொல்லுக்கான மரியாதை என்று தெரிவித்துள்ளார்.

பாஜ தலைவர் அண்ணாமலையின் நெருங்கிய ஆதரவாளரான அமர் பிரசாத் ரெட்டி, அதிமுகவின் இடைக்கால பொது செயலாளர் எடப்பாடியை தான் மறைமுகமாக கடுமையாக விமர்சித்துள்ளார்.  அண்ணாமலையின் நெருங்கிய ஆதரவாளர் இப்படி பதிவிட்டுள்ளது, அதிமுக-பாஜ கூட்டணியில் மீண்டும்  மோதலை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க.!