chennireporters.com

உழைக்கும் மக்களின் பண்பாட்டுத் திருவிழா “தைப்பொங்கல்”.

 

 

உலக நாகரீகங்கள் தோன்ற வேளாண்மையே முதன்மையாக இருந்துள்ளது. “உழவே தலை” என்ற திருவள்ளுவரின் மொழிக்கேற்ப தமிழரின் கலை, பண்பாடு மற்றும் இலக்கியங்கள் “தைத் திருநாளை” உழவர்களின் திருநாளாக பறைசாற்றுகின்றன.

வேளாண்மை செழிக்க காரணமாக இருக்கும் இயற்கை, விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், விலங்குகள் உட்பட அனைத்துக்கும் நன்றி தெரிவிப்பதற்காக கொண்டாடப்படும் விழாவாக பொங்கல் விழா விளங்குகிறது.

பழையன கழிக்கும் போகி, இயற்கையைப் போற்றும் பொங்கல், உழவுக்கு உதவிய கால்நடைகளுக்கு நன்றி சொல்லும் மாட்டுப் பொங்கல் என உழைப்பின் உயர்வை உரக்கச் சொல்லும் மக்களின் விழா இது. இதில் சாதி, மத, பிற்போக்குகளை விடுத்து, சுரண்டல் வாதம் தவிர்த்து சமத்துவம், சமூக நீதியை முன்னிறுத்தி அனைத்து மக்களும் கொண்டாடுவோம்.

தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா (மகர விளக்கு நாள்), குஜராத் (உத்தராயண), பஞ்சாப், அரியானா (லோகிரி), அஸ்ஸாம் (மகா பிஹு), வடமாநிலங்களில் (மகர சங்கராந்தி) என இந்திய துணைக் கண்டம் முழுவதும் அறுவடைத் திருநாளாக பொங்கல் விழா கொண்டாடப்படுவது சிறப்புக்குரியது.

அண்மைக் காலமாக தைத் திருநாளை மதம் சார்ந்த நிகழ்வாக மாற்றிட மக்கள் விரோத சக்திகள் முனைப்புடன் செயல்படுகின்றன. இந்திய சமூகத்தின் இறையாண்மையை சீரழிக்கும் நோக்குடன் மோடி வித்தை காட்டி மக்களின் வாழ்வை சூறையாடி வரும் கார்பரேட் காவி பாசிச கும்பலின் சூழ்ச்சியிலிருந்து மக்களை மீட்டெடுக்கும் போராட்டத்தின் முக்கிய அம்சமாக இவ்விழா அமைந்துள்ளது.

பொங்கல் விழா மதவாத சக்திகளின் கூப்பாடு அல்ல; “உழைக்கும் மக்களின் பண்பாட்டுத் திருவிழா” எனவே, தைத் திருநாளை, பொங்கல் விழாவை, தமிழ்ப் புத்தாண்டு தொடக்கத்தை மகிழ்வோடு கொண்டாடுவோம். தமிழர்கள் அனைவருக்கும் தை திருநாள் வாழ்த்துகள்.

 

இதையும் படிங்க.!