Chennai Reporters

விவசாயிகள் சங்கத்தின் சார்பில் அரசியல் கட்சி தலைவர்களுக்கு நன்றி.

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி. ஆர். பாண்டியன் அரசியல் கட்சி தலைவர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஹைட்ரோ கார்பன் எரிவாயு தடுத்து பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை மீட்டெடுக்க துணை நின்ற அரசியல் கட்சிகளுக்கு நன்றி. பி.ஆர்.பாண்டியன் அறிக்கை.

காவிரி டெல்டாவில் பேரழிவு ஏற்படுத்தும் நாசக்கார ஓஎன்ஜிசி தொடர்ந்து கச்சா எடுக்கிறோம் என்ற பெயரில் விளை நிலங்களை நாசம் செய்து வந்தது. நிலத்தடி நீர் பறிபோனது. காற்று மாசு அடைந்தது. மருந்தில்லா உயிர்க் கொல்லி நோய் தாக்குதலுக்கு மக்கள் ஆளாகி வந்தனர்.

இதை எதிர்த்து தீவிரமான போராட்டத்தில் ஈடுபட்டோம். நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடர்ந்து தடைபெற்றோம். இதற்கிடையே 2020 ஆம் ஆண்டு தமிழக அரசு காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து அரசாணைகள் வெளியிட்டது.

இதற்கு முன் 2016 ஆம் ஆண்டு முதல் கச்சா எடுப்பதற்கு தமிழக அரசு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நிலத்தை துளையிட்டு சக்திவாய்ந்த வெடிப்பொருட்களை நிரப்பி 12000ம் அடி ஆழம் வரை வெடிக்க செய்து கச்சா ஆய்வு செய்வதற்கான அனுமதிக்கும் தடை விதித்தது.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அறிவிக்கப்பட்ட பிறகு ONGC யின் செயல்பாடுகள் அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட்டது. புதிய கிணறுகள் அமைக்க அனுமதி மறுக்கப்பட்டு அமைதி பூங்காவாக திகழ்ந்து வருகிறது.

ஏற்கனவே 2011 இல் திருவாரூர் மாவட்டம பெரியகுடி கிராமத்தில் கச்சா எடுப்பதற்கு அனுமதி பெற்று கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டது. 2013ஆம் ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி எதிர்பாராத விதமாக அக்கிணற்றிலிருந்து கட்டுக்கடங்காத ஹைட்ரோ கார்பன் எரிவாயு குழாயை உடைத்துக் கொண்டு வெளியேறி எரிய துவங்கியது. நீண்ட போராட்டத்திற்கு பிறகு தற்காலிகமாக மூடப்பட்டது.

இக்கிணற்றில் ஆசியா கண்டத்திலேயே இதுவரையிலும் இல்லாத அளவில் பெருமளவு ஹைட்ரோ கார்பன் எரிவாயு இருந்ததாகவும் அதை முன்கூட்டியே அறிய முடியாததால் வெடித்து சிதறியாகவும் தெரிவிக்கப்பட்டது.

மீண்டும் இக்கிணற்றை திறக்க வேண்டுமானால் இதனை சுற்றி எட்டு இடங்களில் புதிய கிணறுகள் அமைத்து அடர்த்தியை குறைப்பதற்கான அனுமதியை தமிழக அரசிடம் ONGC கோரியது.

அது குறித்தான கருத்துக் கேட்பு கூட்டம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் 2014 இல் நடத்தப்பட்டது. அக்கூட்டம் முழுமையாக புதிய ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைப்பதற்கு தடைவிதித்திட முடிவெடுத்தது.

இந்நிலையில் இக் கிணற்றை மீண்டும் வணிக நோக்கோடு எரிவாயு எடுத்து பயன்படுத்திக் கொள்வதற்கு ஓஎன்ஜிசி மறைமுக நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. சில நாளிதழ்களில் வெளிப்படையான கட்டுரைகளையும் இடம் பெற செய்தது

அரசியல் கட்சி தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் மூலமாக நலத்திட்ட உதவிகள் சமூக மேம்பாட்டு நிதி மூலம் வழங்குகிறோம் என்கிற பெயரில் மறைமுக ஆதரவு பெறுவதற்கான உள் நோக்கத்தோடு மோசடி நடவடிக்கையிலும் ஈடுபட்டது. இதுகுறித்து அவ்வபோது எச்சரிக்கை செய்து வந்தோம்.

இந்நிலையில் கடந்த ஜூலை 26 ஆம் தேதி மன்னார்குடி வட்டாட்சியர் பெரியகுடி கிணறு செயல்படுத்துவது குறித்து கலந்தாலோசனை கூட்டம் ஆர்டிஓ ஆலோசனைப்படி கூட்டம் ஏற்பாடு செய்துள்ளதாக அழைப்பு அனுப்பி வைத்தார்.

இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த நாங்கள் ஆர்டிஓவை சந்தித்து கூட்டம் நடத்தக்கூடாது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அறிவித்த பிறகு எந்த ஒரு கிணறையும் செயல்படுத்துவதற்கு கருத்து கேட்பு நடத்துவது சட்டவிரோதமானது என எடுத்துக் கூறினோம். கூட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்திலும் நடத்தினோம்.  இதனையடுத்து கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

பிறகு ஆகஸ்ட் 3ஆம் தேதி இது குறித்து தமிழக அரசின் சுற்றுசூழல் துறை அமைச்சர் மாண்புமிகு மெய்யநாதன் அவர்களை சந்தித்து பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை மீட்டெடுக்க ஹைட்ரோ கார்பன் எரிவாயு திட்டம் எடுப்பதற்கான வகையில் ஓஎன்ஜிசி மறைமுக நடவடிக்கையை தடுத்து நிறுத்த வலியுறுத்தினோம்.

முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார். காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. முதலமைச்சர அனுமதி பெற்று உடன் முழுமையாக மூட உத்தரவிடப்படும் என உத்தரவாதம் அளித்ததோடு, உடன மாவட்ட ஆட்சியரை அலைப்பேசியில அழைத்து உடனடியாக மூடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்திரவிட்டார்.

மேலும் அக்கிணறு மூடப்படாவிட்டால் வெடித்து சிதறி பேரழிவு ஏற்படும் என தெரிவித்தார். கிணற்றை மூடுவதற்கு விவசாயிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஊடகம் மூலமாகவும் அறிவிப்பு செய்தார்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஆர்டிஓ மூலமாக கூட்டம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்தார். அக்கூட்டத்தில்  விவசாயிகள், ஓஎன்ஜிசி அதிகாரிகள், காவல்துறையினர் உட்பட அனைவரும் பங்கேற்றோம். முதலமைச்சரின் உத்தரவின் படி முழுமையாக மூடுவதற்கு அதிகாரிகள் உத்தரவிட மறுத்தனர். இதனை எதிர்த்து  வெளியேறினோம்.

பின்னர் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் இத்திட்டத்தை கைவிட வலியுறுத்தி ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று மன்னார்குடியில் உண்ணாவிரதம் இருக்க அறிவிப்பு செய்து போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்திப்பதற்கு முடிவெடுத்தோம்.

முதற்கட்டமாக தமிழக முதலமைச்சரின் செயலாளர் திரு, சண்முகம் ஐஏஎஸ் அவர்களை சந்தித்து விளக்க கடிதம் அளித்து எடுத்துரைத்தோம்முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று தொடர் நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார்.

திமுக பொதுச் செயலாளர் மாண்புமிகு துரைமுருகன் அவர்களை சந்தித்து பேசினோம். அவரும் காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் பாதுகாப்பதற்கு தமிழக அரசு துணை நிற்கும் என்று உறுதி அளித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களை சந்தித்து பேசினோம்.அவர்தடுத்து நிறுத்த ஆதரவளிப்போம் எனவும், தேவையானால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என்றார்.

மதிமுக தலைமை நிலைய செயலாளர் திரு, துரைவைகோ அவர்களை சந்தித்து பொது செயலாளர் வைகோ அவர்களுடைய பங்களிப்பு குறித்து எடுத்துரைத்தோம். அவர் வழியை பின்பற்றி இத் திட்டத்தை தடுத்து நிறுத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கோரினோம்.

அவர் உடனடியாக மதிமுக விவசாய பிரிவு தலைவர் முருகனை அலைபேசியில் அழைத்து நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க கேட்டுக்கொண்டார்.அதனை தொடர்ந்து முருகன் தலைமையிலான குழு ஆய்வு செய்து அறிக்கை கொடுத்துள்ளதற்கும்,தொடர் நடவடிக்கை மேற்கொண்டதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

பாஜக தலைவர் திரு. அண்ணாமலை,காங்கிரஸ் கட்சி மாநில துணைத்தலைவர் பொன். கிருஷ்ணமூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்களையும் நேரில் சந்தித்து ஆதரவு கோரினோம்.

அனைவருமே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் மீட்பு போராட்ட களத்தில் முழுமையாக ஆதரவு அளிப்போம் என்று உத்தரவாதம் அளித்தனர்.
சில தலைவர்கள் சென்னையில் இல்லாததால் நேரில் சந்திக்க முடியாமல் அவர்களுக்கு கடிதத்தை சென்னை மண்டல செயலாளர் சைதை சிவா மூலமாக அனுப்பி வைத்தோம்.

போராட்டம் தீவிரமடைந்ததை உணர்ந்த தமிழக அரசு மாவட்ட ஆட்சியர் மூலமாக கடந்த 13 ஆம் தேதி சமாதான கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அரசு அனுமதி பெறாத கிணறுகளை திறப்பதற்கு அனுமதி இல்லை என்றும்,காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த பிறகு கொள்கை நிலைக்கு புறம்பாக எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் தமிழக அரசு அனுமதிக்காது என உறுதிபட தெரிவித்தார்.

உடனடியாக பெரியகுடி கிணறை நிரந்தரமாக மூட உத்தரவிட்டார்.
இதுகுறித்தான ஆய்வு குழு ஆய்வு செய்து அளிக்கும் அறிக்கையை முழுமையாக ஓஎன்ஜிசி ஏற்க வேண்டும் என தெரிவித்தார்.

இதனை ஏற்று உரிய கால அவகாசத்தில் ஜனவரி துவங்கி ஜூன் 2023க்குள் மூடுவதற்கு ஓஎன்ஜிசி ஒப்புக்கொண்டது.இதுகுறித்து எழுத்துப்பூர்வமான ஒப்பந்தம் மாவட்ட ஆட்சியர் கையொப்பமிட்டு வழங்கப்பட்டது.

இதனை ஏற்று விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட வேண்டும் என ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.அவரது உத்தரவை ஏற்று உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டோம்.

தொடர்ந்து எங்களுக்கு நல் ஆதரவளித்த அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக அமைப்புகள்,  பத்திரிக்கை ஊடக செய்தியாளர்கள், அரசு அலுவலர்கள், உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி கூறுகிறோம். தொடர்ந்து காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம், விவசாயத்தை காக்க ஒன்றினைந்து செயல்பட சபதம் ஏற்போம்.

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!