பொதுமக்களின் பல்லை உடைப்பதற்கு காரணமாய் இருந்த போலீஸ் அதிகாரிகளை காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்து திருநெல்வேலி டிஐஜி பிரவேஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
டிஐஜி பிரவேஷ் குமார்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் ஏஎஸ்பியாக பல்வீர் சிங் என்பவர் வழக்கு விசாரணைக்கு அழைத்து வருபவர்களின் பற்களை உடைத்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கல்லிடைகுறிச்சி, விகேபுரம், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட காவல் நிலையங்களுக்கு விசாரணைக்கு அழைத்து வந்த நபர்களின் பற்களை அடித்து உடைத்து பிடிங்கியதாக புகார் எழுந்தது.
இதை அடுத்து நெல்லை ஆட்சியரின் உத்தரவின் பேரில் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முகமது சபீர் ஆலம் என்பவர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். பாதிக்கப்பட்டதாக கூறப்படும் செல்லப்பா, இசக்கி முத்து, ரூபன் ,அந்தோணி, மாரியப்பன், சூர்யா லட்சுமி, சங்கர், மாரியப்பன், வேத நாராயணன் ,சுபாஷ் ஆகிய 9 பேரிடம் சப் கலெக்டரிடம் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். இதில் லட்சுமி சங்கர் மற்றும் சூர்யா இருவரும் போலீஸ் அதிகாரி தனது பல்லை பிடுங்கவில்லை என விசாரணையில் கூறியுள்ளதாக தெரிகிறது.
அதே சமயம் மீதமுள்ள ஏழு பேரும் ஏஎஸ்பி பல்வீர் சிங் தான் எங்களுடைய பற்களை அடித்து கொடூரமான முறையில் உடைத்து பிடுங்கியதாக தெரிவித்தனர். எங்களுக்கு உரிய நீதி வேண்டும் என்றும் சப்கலெக்டரிடம் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து மாநில மனித உரிமை ஆணையத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் இச்சம்பவம் தொடர்பாக ஏற்கனவே புகாருக்கு உள்ளான ஏஎஸ்பி பல்வீர் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து நெல்லை மாவட்ட எஸ்பி சரவணனும் அதிரடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். மேலும் கல்லிடைக்குறிச்சி விகேபுரம் காவல் நிலைய தனி பிரிவு காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.
இருப்பினும் பல் பிடுங்கும்போது ஏஎஸ்பிக்கு உதவியாக இருந்த சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களின் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் என அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பினர் வலியுறுத்தி வந்தனர்.
இதுபோன்ற சூழ்நிலையில் அம்பாசமுத்திரம் காவல் சரகத்தில் உள்ள காவல் நிலையங்களில் ஆய்வாளர்கள் மற்றும் தனிப்பிரிவு உதவி ஆய்வாளர்கள் தற்போது அதிரடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதாவது அம்பாசமுத்திரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் விக்கிரமசிங்கபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பெருமாள் கல்லிடைக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி அம்பாசமுத்திரம் உட்கோட்ட தனிப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் சக்தி நடராஜன் அம்பாசமுத்திரம் தனிப்பிரிவு காவலர் சந்தானகுமார் கூடுதல் தனிப்பிரிவு காவலர் மணிகண்டன் ஆகிய ஆறு பேர் அதிரடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சேரன்மகாதேவி சப் கலெக்டர் விசாரணை அதிகாரியான முகமது சபீர் ஆலம் அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், கல்லிடைக்குறிச்சி காவல் நிலையங்களில் ஆய்வு செய்த நிலையில் டிஐஜி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக சப் கலெக்டர் மற்றும் மனித உரிமை ஆணைய விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் மறுபுறம் அடுத்தடுத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.