சென்னை அடுத்த ஆவடியில் துக்க வீட்டில் போலீசார் 36 சவரன் நகைகளை திருடிய சம்பவம் தமிழக போலீசில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காக்கி சட்டை போட்ட சில கருப்பு ஆடுகள் நகை திருடிய சம்பவத்தால் தமிழக காவல் துறையினர் வெட்கி தலைகுனியும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக உயர் போலிஸ் அதிகாரிகள் நகை திருடர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள்.
சென்னை அடுத்த ஆவடி காமராஜர் நகர் மகிழம்பூ தெருவில் வசித்து வந்தவர் சுந்தரி பாய் இவர் கடந்த பிப்ரவரி மாதம் 17-ம் தேதி அவரது வீட்டுக்குள் இறந்து கிடப்பதாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆவடி காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
சுந்தரி பாய் மற்றும் அவரது தங்கை ஜானகி.
காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். சுந்தரி பாய் இறப்பதற்கு முன்பு அதே மாதம் 14-ம் தேதி அவரது தங்கை ஜானகி என்பவரும் உடல் நலம் சரியில்லாமல் இறந்த செய்தி தெரிய வந்தது . அவர்கள் இருவரும் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தனர். அதில் எங்களது மரணத்திற்குப் பிறகு நாங்கள் வைத்துள்ள நகை பணம் மற்றும் சொத்துக்கள் அனைத்தையும் காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா புற்றுநோய் மையத்திற்கு கொடுக்க வேண்டும் என்று எழுதி வைத்திருந்தனர்
ஆவடி போலீசார் அந்த வீட்டை சோதனை செய்தனர். அதில் 90 சவரன் தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது. அது தவிர அஞ்சல் அலுவலகத்தில் 30 லட்சம் ரூபாய் மற்றும் இந்தியன் வங்கியில் 30 லட்சம் ரூபாய் பணம் இருப்பதாகவும் குறிப்பு எழுதப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அவை அனைத்தையும் காஞ்சிபுரம் அண்ணா புற்றுநோய் மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைக்க வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு சென்றனர்.
சப்இன்ஸ்பெக்டர் பிரேமா.
அப்போது ஆவடி துணை தாசில்தார் செந்தில் முருகன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பொருட்களை சரிபார்த்து ஆவடி உதவி ஆய்வாளர் பிரேமா தலைமையிலான காவல்துறையினரிடம் 90 சவரன் நகை மற்றும் அனைத்து பொருட்களையும் ஒப்படைத்தனர்.
இந்த பொருட்களை பெற்றுக்கொண்ட சப் இன்ஸ்பெக்டர் பிரேமா கருவூலத்தில் கணக்கு காட்டும் போது 90 சவரன் நகையில் 54 சவரன் நகைகள் மட்டுமே கைப்பற்றப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். மீதமுள்ள 36 சவரன் தங்க நகை காணாமல் போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து இன்ஸ்பெக்டர் டில்லி பாபு தரப்பில் எந்த வித பதிலும் சொல்லாமல் தவிர்த்தார்.
இது குறித்து ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் அவர்கள் அதிகாரிகள் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
ஆவடி காவல் உதவி ஆணையர் (AC) புருசோத்தமன்
இந்த நகை திருட்டில் ஆவடி இன்ஸ்பெக்டர் டில்லி பாபு,சப் இன்ஸ்பெக்டர் பிரேமா மற்றும் ஆவடி காவல் உதவி ஆணையர் (AC) புருசோத்தமன் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக போலீஸ் வட்டாரத்தில் பேசுகின்றனர்.
இழவு வீட்டில் போலீசார் நகை திருடிய சம்பவம் ஆவடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திருட்டு குறித்து ஜெயா தொலைக்காட்சியில் வெளியான செய்தியில் போலீஸ் வேடத்தில் உள்ள வடிவேலு பிக் பாக்கெட் அடித்த திருடனிடம் பணம் பறித்த காமெடியை ஒப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தது.
அந்த செய்தி போலீசார் மத்தியில் பெரும் அவமானத்தையும், அசிங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பட்டப் பகலிலேயே துக்க வீட்டில் போலீசார் நகைகளை திருடிய சம்பவம் திமுகவினரிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் விதத்தில் நடந்து கொண்ட இவர்கள் மீது முதலமைச்சரின் கவனத்திற்கும் டிஜிபி கவனத்திற்கும் எடுத்துச் சென்று இருப்பதாக சொல்கின்றனர் திமுக ஐடி விங் நிர்வாகிகள் சிலர். ஆவடிப்பகுதியில் இந்த செய்தி சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த 36 சவரன் நகைகள் ஆவடியில் உள்ள ஒரு நகைக்கடையில் கொடுத்து உருக்கி விற்கப்பட்டது அந்த பணம் ஏசி புருஷோத்தமனுக்கு கொண்டு சேர்க்கப்பட்டது. என்று உளவுத்துறையினர் உயரதிகாரிகளுக்கு உரக்க சொல்லி விட்டனர்.
ஆவடி காவல் உதவி ஆணையர் (AC) புருசோத்தமன்
இதேபோன்று வெள்ளானூரை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார் அவர் அம்பத்தூரில் உள்ள மருத்துவமனையில் ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அவர் கையில் இருந்த 5 சவரன் தங்க காப்பு காணாமல் போனது அது குறித்து அவரது மகன் கெளவுத்தம் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இந்த நிலையில் அந்த காப்பை எடுத்த மருத்துவமனை ஊழியர் இடம் விசாரித்த ஏசி புருஷோத்தமன் அதை மிரட்டி மீட்டு காப்பை பெற்றதாக ஒரு புகார் எழுந்துள்ளது.
மிடுக்கான பெண் காவலர்களை பார்த்தாலே உற்சாகமாகி விடுவார் ஏசி புருஷோத்தமன். அதிலும் அழகான பெண் காவலர்கள் என்றால் அவருக்கு கொள்ளை பிரியமாம். தன் கீழ் பணியாற்றும் பெண் காவலர்களை அசிங்கமாகவும் அவமரியாதையுடன் தான் நடத்துவார் என்கிறார்கள் புருஷோத்தமனால் பாதிக்கப்பட்ட பெண் காவலர்கள்.