ஐ.நா. மனித உரிமை ஆணையம் ;சிங்கள அரசுக்கு எதிரான தீர்மானம் – இந்தியா புறக்கணிப்பு! தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள கண்டன அறிக்கை :
இலங்கையில் அனைத்து மக்களிடையே நல்லிணக்கத்தை நிலவச் செய்தல், தமிழர்களின் உரிமைகளை காத்தல், 13ஆவது சட்டத்திருத்தத்தை நிறைவேற்றல், விரைவில் மாகாண சபைக்கான தேர்தல்களை நடத்தி போதுமான அதிகாரங்களை அளித்தல் ஆகியவற்றை ஏற்றுக்கொண்ட இலங்கை அரசு அவற்றை நிறைவேற்றத் தவறியதைக் கண்டித்து ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை ஆதரிக்காமல் இந்திய அரசு புறக்கணித்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
2012ஆம் ஆண்டிலிருந்து 2021 ஆம் ஆண்டு வரை ஏழு முறை நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டங்களில் இலங்கைக்கு எதிராகக் கொண்டவரப்பட்ட தீர்மானங்களை ஆதரித்து வாக்களிக்காமல் இவ்வாறே இந்தியா புறக்கணித்திருக்கிறது.
கடந்த கால காங்கிரசு அரசு கையாண்ட நடைமுறையையே தற்போதைய பா.ச.க. அரசும் பின்பற்றுவது தமிழர்களுக்கு எதிராகச் செயல்படுவதில் இரு கட்சிகளுக்குமிடையே எத்தகைய வேறுபாடும் இல்லை என்பது நிறுவப்பட்டுள்ளது.
இத்தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு ஆதரவளித்த 20 நாடுகளைப் பாராட்டுகிறேன். நியாயமாக இத்தகைய தீர்மானத்தை அண்டை நாடான இந்தியா கொண்டுவந்திருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால் மேலும் பல நாடுகள் ஆதரவளித்திருக்கும்.
இதன்மூலம் இலங்கை அரசுக்கு உலக நாடுகளின் அழுத்தம் அதிகமாகி அதன் விளைவாக ஈழத் தமிழர்களின் துன்பம் ஓரளவு குறைக்கப்பட்டிருக்கும்.
இலங்கை அரசை திருப்திப்படுத்த இந்திய அரசு ஈழத் தமிழர்களைக் கைக் கழுவியிருக்கிறது. ஆனால், இலங்கை அரசு சீனாவுடன் மேலும் நெருக்கமான உறவு கொள்ளுமே தவிர, ஒருபோதும் இந்தியாவுக்கு உண்மையான நட்பு நாடாக இருக்காது.
இந்த உண்மையை இந்திய அரசு உணரவேண்டும். இல்லையேல் வட எல்லையில் மட்டுமல்ல, தென் எல்லையிலும் சீனாவின் அபாயம் இந்தியாவை அச்சுறுத்தும் என்பதில் ஐயமில்லை.