chennireporters.com

திருவள்ளூர் அருகே வெடிக்காத ராக்கெட் குண்டுகள்.

திருவள்ளூர் அருகே ராக்கெட் லாஞ்சர் குண்டுகள் கைப்பற்றப்பட்டன இதனால் அந்த கிராமப் பகுதியில் பெரும் பதட்டம் நிலவி வருகிறது. 

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல்  அடுத்த மாளந்தூர் பகுதியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்த போது சுமார் ஒன்றரை அடி நீளம் கொண்ட ராக்கெட் லாஞ்சர் ஒன்று பூமிக்கு அடியில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.  இது குறித்து பெரியபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் ராக்கெட் லாஞ்சரை சோதனை செய்து திருவள்ளூர் அடுத்த மணவாள நகர் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பாதுகாப்பாக வைத்தனர்.

இந்த நிலையில் இன்று மாளந்தூர் அடுத்த  ஆவாஜி பேட்டை என்னும் கிராமத்தில் குப்பன் என்கிற விவசாயி தனது வீட்டின் மாட்டு தொழுவத்தில் பள்ளம் தோன்றினார். அப்போது சுமார் இரண்டு அடி உயரம் கொண்ட ராக்கெட் லாஞ்சர் வெடிக்காத குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  கிராமத்தில் ஒதுக்குப்புறமாக உள்ள மைதானத்தில் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து அதற்கு நடுவில் அந்த குண்டை வைத்து பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அதன் தன்மை குறித்து ஆய்வு செய்யப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

திருவள்ளுவர் அருகே அடுத்தடுத்து ராக்கெட் லாஞ்சர் குண்டுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆவடியில்  உள்ள பீரங்கி தொழிற்சாலையில் இருந்து பயிற்சிகள் மேற்கொள்ளப்படும்.

அப்போது டம்மி குண்டுகள் போடப்பட்டு பயிற்சி செய்யப்படும் அதன் அடிப்படையில் இந்தப் பகுதிகளில் பல ஆண்டுகளுக்கு முன்பு பயிற்சி செய்த போது குண்டுகள் அந்தப் பகுதியில் விழுந்திருக்கலாம் என்று பீரங்கி தொழிற்சாலையில்  வேலை பார்க்கும் ஊழியர்கள் தெரிவித்தனர்.

ஏற்கனவே  சில மாதங்களுக்கு முன்பு பூண்டி அடுத்த ஆற்றம்பாக்கம் என்னும் கிராமத்தில்  இரண்டு அடி நீளம் கொண்ட ராக்கெட் லாஞ்சர் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேற்படி கிராமத்தில் இது போன்ற வேறு ஏதாவது குண்டுகள் இருக்கின்றதா என்று மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் சோதனை நடத்த வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட எஸ்பி செபாஸ் கல்யாண் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். அசம்பாவிதங்கள் ஏற்படாத வண்ணம் 24 மணி நேரமும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க.!