chennireporters.com

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நீடிப்பாரா?

தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்படுவார் என்ற செய்தி பாஜக தரப்பிலிருந்து காட்டுத்தீயாய் பரவி வருகிறது இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பாஜகவை சேர்ந்த ராம சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாஜக மாநிலத் தலைவராக பொறுப்பு வகித்து வரும் அண்ணாமலை, அந்தப் பதவியில் இருந்து மாற்றப்பட இருப்பதாக சமீப சில நாட்களாக ஒரு தகவல் தீயாகப் பரவி வருகிறது. அண்ணாமலையின் சில நடவடிக்கைகள் பற்றி பாஜக மேலிடத்திற்கு புகார்கள் பறந்துள்ளதாகவும், அதனால் அவர் மீது தலைமை அதிருப்தியில் இருப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வந்தது.

இதனால், அண்ணாமலையை பதவியில் இருந்து நீக்கிவிட்டு வேறொருவரை நியமிக்க பாஜக தலைமை திட்டமிட்டு வருவதாக சில யூகங்கள் றெக்கைகட்டிப் பறந்தன. இந்நிலையில், பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன், இதுகுறித்து விளக்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ் அதிகாரியாகி, கர்நாடகாவில் பணியாற்றி வந்தார்.  அண்ணாமலை  2019ல் தனது வேலையை உதறிவிட்டு, சொந்த ஊரான கரூர் மாவட்டம் தொட்டம்பட்டிக்கு வந்து தற்சார்பு விவசாயத்தில் இறங்கினார். சில மாதங்களிலேயே பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரிரைச் சந்தித்தார். பின்னர் பாஜகவில் இணைந்து தீவிரமாகப் பணியாற்றத் தொடங்கினார். அதைத்தொடர்ந்து, கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன், மத்திய அமைச்சரான பிறகு மாநில தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார். அப்போது முதல், தமிழக பாஜகவின் அரசியல் வேகமெடுத்தது. திமுக அரசு, அமைச்சர்கள் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைப்பது, திமுக அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்துவது, அமைச்சர்களின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பது என தீவிரமாக களமாடி வருகிறார் அண்ணாமலை. இதனால், கடந்த ஆண்டு முதல், பாஜக நாள்தோறும்  வேகமாக இயங்கி வருகிறது.

 

சிக்கல் கொடுத்த சீனியர்கள் அண்ணாமலையின் வேகமான ஆக்‌ஷன்களால் மேலிடத்திலும் வெகுசீக்கிரமாகவே நல்ல பெயரை பெற்றார். சீனியர்கள் சிலரை ஓரங்கட்டி விட்டு, தனக்கு சாதகமானவர்களை நியமிக்கும் அளவுக்கு டெல்லியிலும் செல்வாக்கு செலுத்தத் தொடங்கினார். இதனால், அண்ணாமலை பாஜக மாநில தலைவர் பொறுப்புக்கு வந்ததை விரும்பாத தமிழக பாஜக சீனியர்கள் சிலர் அண்ணாமலையின் நடவடிக்கைகளை ரசிக்கவில்லை என்று கூறப்பட்டு வந்தது. இதனால், சிலர் மூலம் டெல்லிக்கு அண்ணாமலை பற்றிய குறைகளும் பறந்து வந்ததாக கூறப்படுகிறது.

 

சர்ச்சைகளில் கட்சியின் மாநில தலைமை பொறுப்புக்கு அண்ணாமலை இந்த 15 மாத காலத்தில் அவர் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார். திமுகவுக்கு எதிரான அரசியலை முன்னெடுப்பதற்காக அவர் மேற்கொண்ட சில நடவடிக்கைகள் அரசியல் களத்தில் அம்பலமாகின. இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்தனர். இதையும் சிலர் மேலிடத்துக்கு அவ்வப்போது தெரிவித்து வந்ததாகவும் பாஜக வட்டாரத்திலேயே கூறப்படுகிறது.

அண்ணாமலை நீக்கம்? இந்நிலையில் தான், அண்ணாமலை பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட இருப்பதாக ஒரு தகவல் தாறுமாறாகப் பரவியது. இந்தி திணிப்பு உள்ளிட்ட விஷயங்களில் அண்ணாமலையின் பேச்சு பாஜகவின் நோக்கத்திற்கு எதிராக இருப்பதாகவும், கட்சியினரை அவர் மதிக்கவில்லை என தொடர்ந்து புகார்கள் வந்ததாலும், சமீபத்தில் ஜேபி நட்டா கலந்துகொண்ட நிகழ்ச்சியில் சிறப்பு அனுமதி பெற்று அண்ணாமலை அசைவ உணவு ஏற்பாடு செய்தது கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தியதாகவும் அதனால் அண்ணாமலை பதவியில் இருந்து நீக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் பரபரத்தன.

அடுத்த தலைவர் சரியாக, அண்ணாமலை அமெரிக்கா சென்றுள்ள நேரத்தில் இந்த தகவல்கள் றெக்கை கட்டி பரவியதும், இந்த வதந்திகளுக்கு சாதகமாக அமைந்தன. அண்ணாமலைக்கு பதிலாக, பாஜக தேசிய செயலாளரும், எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன், பாஜக மாநில பொதுச் செயலாளர் மதுரையைச் சேர்ந்த பேராசிரியர் ராம.சீனிவாசன் ஆகியோரில் ஒருவர் அடுத்த தலைவராக வர இருப்பதாகவும் கூறப்பட்டது.

ராம.சீனிவாசன் விளக்கம் இந்நிலையில் பாஜக மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் ராம.ஸ்ரீனிவாசன் அண்ணாமலைக்கு ஆதரவாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘தற்போது சில ஆன்லைன் ஊடகங்களில் ஒரு விஷமச் செய்தி வலம் வந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாடு பாஜகவின் மாநில தலைவராக இருக்கும் அண்ணாமலை விரைவில் மாற்றப்படுவார் என்றும் புதிய தலைவர் பொறுப்பேற்பார் என்றும் சில விஷமிகள் செய்து வெளியிட்டு வருகிறார்கள்! இது போன்ற செய்திகள் தீய நோக்கத்துடன் வெளியிடப்படுகின்றன.

சதி வேலை தமிழகத்தில் அண்ணாமலை தலைமையில் வீச்சாகவும்! வீரியமாகவும்! விரைவாகவும்! வளர்ந்து வரும் பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாத சிலர் இது போன்ற சதி வேலைகளில் ஈடுபடுகிறார்கள்! லட்சக்கணக்கான பாஜக தொண்டர்கள் மனதில் குழப்பத்தை விளைவிக்கவும் பாரதிய ஜனதா கட்சியை பலவீனப்படுத்துவதற்கான முயற்சி இது. பாஜகவில் காங்கிரஸ் கட்சி போன்று தலைவர்களை நியமிக்கும் வழக்கம் கிடையாது.

சந்தேகமே இல்லை திமுக போன்று ஒரு குடும்பத்துக்குள் மட்டுமே தலைவரை தேடுகிற தகுதியற்ற கட்சியும் கிடையாது. அண்ணாமலை தலைமையில் பாரதிய ஜனதா கட்சி வரும் பாராளுமன்றத் தேர்தலில் மிகப் பெரும் வெற்றியை குவிக்கும் என்பதில் ஐயமில்லை. அண்ணாமலை அவர்கள் பாஜகவின் தலைவர் மட்டுமல்ல தமிழக மக்களின் மனம் கவர்ந்த தலைவர் என்பதை எதிரிகளுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்!’ எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க.!