பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ள இலங்கை மக்களுக்கென நிதி ஒதுக்கீடு செய்து உதவி செய்வது அவரவரின் தனிப்பட்ட விருப்பம்.
அதே சமயத்தில் இப்படி ஒரு சூழல் உருவாக வேண்டும் என்பதற்காகத்தான் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இலங்கைத்தீவின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என அனைத்துத் கட்சிகளின் ஒத்துழைப்போடு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இன்றைய சூழலை பயன்படுத்தி ஈழத் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் என்பதுதான் நமது அவாவாக இருக்க வேண்டுமே தவிர நிதி உதவி செய்து கொடுங்கோல் ஆட்சியாளர்களை பாதுகாப்பது நமது வேலை அல்ல.
கடும் பொருளாதார நெருக்கடிகளில் சிக்கி உள்ள போதும் கூட வடக்கு கிழக்கு பகுதிகளில் வலிந்து காணாமல் ஆக்கப் பட்டவர்கள் தொடர்பிலான உரிமைக்கான போராட்டங்களை முன்னெடுத்த தமிழர்கள்
மீது ராணுவ அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டதை எண்ணுகிற போது இந்த சிங்கள பேரினவாத அரசு தமிழர்களுக்கு எதிரான மனநிலையில் இருந்து சிறிதும் மாற வில்லை என்பது புரிந்துகொள்ள முடிகிறது.
இனப்படுகொலை, இன அழிப்பு தொடர்ந்து நடக்கும் சூழலில் யாருக்காக நிதி வழங்குகிறோம் என்பது கேள்விக்குறி ஆகிறது. அங்கு நிலவும் சூழலுக்கு தீர்வு நிதியா அல்லது நீதியா என்பதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.
குறைந்த பட்சம் தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு கிழக்கு பகுதிகளில் இருந்து இராணுவத்தை வெறியேற்ற வேண்டும் என்ற நிர்பந்தத்தின் அடிப்படையிலாவது தமிழ்நாட்டுத் தமிழர்கள் நிதி உதவிகளை மேற்கொண்டால் நலம்.
இன்றைய பொருளாதார நெருக்கடி சூழலில் கூட சிங்கள பேரினவாத அரசுக்கு எந்த நிபந்தனையும் இன்றி பொருளுதவி செய்தால் அது ஈழத் தமிழரை பாதுகாக்கும் செயல்பாடாக அமையாது என்பதை தமிழ்நாட்டு அரசும், அரசியல் சக்திகளும் உணர்ந்து ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு கோரிக்கை விடுக்கிறது.