chennireporters.com

தமிழைக் காத்த அண்ணல் தங்கோ அவர்களின் பிறந்தநாள்.

அண்ணல் தங்கோ

இன்று திரு.அண்ணல் தங்கோ அவர்களின் 119 பிறந்தநாள் தமிழ் மொழி காப்பு போராட்டம்,ஆங்கில அரசுக்கு எதிரான போராட்டம்,திராவிடத்தை மறுத்த , தமிழர் என அழைக்க போராட்டம்.

தமிழக எல்லை மீட்பு போராட்டம் என்று தன் வாழ்நாளில் , பல போராட்டங்களை நடத்திய தலைவர் திரு.அண்ணல் தங்கோ அவர்களின் சீறிய பணியை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வோம்.

தமிழகத்தில் முதல்முறையாக 1927 லேயே, தமது திருமணத்தை தாமே தலைமையேற்று நடத்தி, புரோகிதத்தை மறுத்து திருக்குறளை முன்மொழிந்து, சிவமணி அம்மாளை திருமணம் செய்துகொண்டார்.

புரோகித மறுப்புத் திருமண வரலாற்றில் முதன்மையான செயல் ஐயாவினுடையது. திருமணமான அதே 1927ஆண்டில் அண்ணல் தங்கோ நடத்திய கொடுங்கோலன் நீலன், சிலை உடைப்புப் போராட்டம் மிக முக்கியமானது.

இப்போராட்டம் காரணமாக சென்னை அண்ணாசிலையில் இருந்த நீலன் சிலை பெயர்த்தெடுக்கப்பட்டு எழும்பூர் தொல்பொருள் காட்சியகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவருக்கு நீதி மன்றத்தால் ஓராண்டு சிறைத் தண்டனையும் கிடைத்தது

இவர் 1918ல் காங்கிரசில் சேர்ந்தார். 1923ல் கள்ளுக்கடை மறியல், 1925ல் வைக்கம் போராட்டம், 1927ல் சைமன் குழு எதிர்ப்பு போராட்டம், 1930ல் உப்புசத்தியாகிரகப் போராட்டம், என பல போராட்டங்களை நடத்தியவர்.காந்தியாரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரஸில் இருந்து விலகினார்.

1944ஆம் ஆண்டில் தென்னிந்திய நலவுரிமைச் சங்கமும் சுயமரியாதை இயக்கமும் இணைக்கப்பட்டு, திராவிடர் கழகம் உருவானபோது அதற்குத் ‘தமிழர் கழகம்’ என பெயர் சூட்டுமாறு வலியுறுத்தினார்.

1941இல் திருவாரூரில் நடந்த நீதிக்கட்சி மாநாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பில் தமிழர்கள் தங்களை திராவிடர் என்று குறிக்காமல் “தமிழர்” என்று குறிக்கும் படி வேண்டினார். இக்கருத்தை முதலில் ஒப்புக் கொண்ட ஈ.வெ.ரா.பெரியாரும், அண்ணாவும் பின்னர் மறுப்பு தெரிவித்தனர்.

தமிழரல்லாதார் நலன் காத்திடும் வகையில் திராவிடர் என்று குறிப்பிடுமாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது நீதிக்கட்சி நடத்திய ஏடுகளெல்லாம் தமிழில் திராவிடன் என்றும்,
தெலுங்கில் ஆந்திரப் பிரகாசிகா, ஆங்கிலத்தில் ஜஸ்டிஸ் என்றும் பெயர் வைத்து தமிழரின் இன அடையாளத்தை மறுத்து வந்தன.

இதை புரிந்து கொண்ட அண்ணல் தங்கோ 1942இல் ‘தமிழ் நிலம்’ எனும் ஏட்டைத் தொடங்கினார். அதில் தமிழர் நிலத்திற்கு வேலி இல்லாததை நினைத்து, “வீட்டுக் கரண் வைத்தனை! -வயலுக்கும் வேலி அரண் வைத்தனை, நாட்டுக் கரண் வைத்திலை! தமிழா! இல்லையே???” என்று பாடல் தீட்டினார்.

1953இல் ஆந்திரர்கள் தனிமாநிலம் கேட்டதோடு தமிழர் தாயகப் பகுதிகளை அபகரிக்க முயன்றனர். அப்போது அதனை எதிர்த்து வேலூரில் “தமிழக எல்லைத் தற்காப்பு மாநாட்டை” நடத்தி தமிழர்களை விழிப்புணர்வு கொள்ளச் செய்து போராட்டத்தை நடத்தினார்.

அதேபோல் பலருக்கு நல்ல தமிழ் பெயரை சூட்டினார்.திரு.கருணாநிதி அவர்களுக்கு அருளாலர் என்று பெயர் சூட்டினார். திரு.அன்னாதுரை அவர்கள் “பழைய பெயர் ,திரைத்துறையிலும், கட்சியிலும் நிலைத்து விட்டதால் , பெயரை மாற்ற வேண்டாம்”, என்று கூறியதால், திரு.கருணாநிதி தனது வடமொழி பெயரை மாற்றவில்லை, என் அவரே கூறியுள்ளார்.

அதேபோல்.கிருபானந்தவாரியரை அருளின்பக்கடலார், கர்மவீரர் காமராசரை காரழகனார், நாராயணசாமியை நெடுஞ்செழியன், சி.பி.சின்ராஜை சி.பி.சிற்றரசு, இளமுருகு தனபாக்கியத்தை இளமுருகு பொற்செல்வி, தார்பிடோ ஜனார்தனத்தை மன்பதைக்கன்பன், மே.வீ.வேணுகோபாலபிள்ளையை மே.வீ.குழற்கோமான், ஜீவானந்தத்தை உயிரின்பன், அரங்கசாமியை அரங்கண்ணல் என இவர் தமிழ்படுத்திய பெயர்களின் பட்டியல் நீளும்

இத்தகைய தமிழ்த் தலைவர்களின் சமூக பணியினை தமிழர்களிடம் எடுத்துச் செல்ல வேண்டியது நமது கடமையாகும்.

இதையும் படிங்க.!