Chennai Reporters

ஈ.பி.எஸ் மற்றும் ஒ.பி.எஸ் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் நீதிபதி உத்தரவு.

அவதூறு வழக்கில் ஆஜராக விலக்களிக்க கோரி, சட்டமன்ற எதிர் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை சென்னை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

வரும் செப்டம்பர் 14-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு இருவருக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார் அதிமுகவின் செய்தித் தொடர்பாளராக இருந்த பெங்களூரு புகழேந்தியை கட்சியிலிருந்து நீக்கி, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டறிக்கை வெளியிட்டனர்.

அதில் கட்சியின் கோட்பாடு, கொள்கைக்கு எதிராகவும்,கட்சி விரோத செயல்பாடுகளில் ஈடுபட்டதற்காகவும் நீக்கம் செய்யப்பட்டதாக காரணம் கூறப்பட்டிருந்தது.

இது தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதால் ஒ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க கோரி, சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ. க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் பெங்களூரு புகழேந்தி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் இருவரும் ஆகஸ்ட் 24- ம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது இந்த வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி அலீசியா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது அப்போது ஈபிஎஸ், ஒபிஎஸ் சார்பில் வக்கீல் பிரகாஷ் ஆஜராகி, இருவரும் முறையே எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவராக உள்ளனர்.

இப்போது, சட்டசபை கூட்டத்தொடர் நடந்து கொண்டிருப்பதால் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டியுள்ளது. ஆதலால், இருவரும் நேரில் ஆஜராக முடியவில்லை
என்று தெரிவித்தார்.

மேலும், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்துள்ள மனு உயர்நீதிமன்றத்தில் வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது என்றும் தெரிவித்தார்.

மனுதாரர் புகழேந்தி தரப்பில் வக்கீல் திருமூர்த்தி ஆஜராகி ஈபிஎஸ், ஒபிஎஸ் ஆகியோரின் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.

இருவரும் கூறும் காரணம் நியாயமானது தான் என தெரிவித்த நீதிபதி, இருப்பினும் வழக்கின் முதல் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டியது கட்டாயம் என்பதால், நேரில் ஆஜராக விலக்கு அளிக்க கோரி தாக்கல் செய்த இருவரின் மனுக்களை தள்ளுபடி செய்வதாக கூறி, நீதிபதி உத்தரவிட்டார்.

தொடர்ந்து வழக்கு விசாரணையை செப்டம்பர் 14- ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி, அன்றைய தினம் இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!