பட்டப்பகலில் தஞ்சாவூரில் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த பெண் ஆசிரியை ஒருவரை இளைஞன் ஒருவன் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொலையாளி மதன்.
தஞ்சாவூரில் அரசுப் பள்ளி வகுப்பறையில் ஆசிரியை குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மல்லிப்பட்டினம் என்ற ஊரில் உள்ள அரசுப் பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது, வகுப்பறைக்குள் நுழைந்த மதன் என்பவர் ஆசிரியை கழுத்துப் பகுதியில் குத்தியுள்ளார். இதனால் நிலைகுலைந்து சரிந்த ஆசிரியரை, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.
இருப்பினும் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தஞ்சாவூர் மல்லிப்பட்டினம் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்த மதனை காவல்துறையினர் உடனடியாக கைது செய்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி ஒருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே சின்னமனை பகுதியை சேர்ந்தவர் முத்து. இவரது மகள் ரமணி (26). இவர் மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தான் இப்பள்ளியில் பணியில் சேர்ந்தார். இவரை சின்னமனை பகுதியைச் சேர்ந்த மதன் என்பவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மதனுக்கு 30 வயது. ஆசிரியை ரமணியை பெற்றோருடன் சேர்ந்து மதன் குடும்பத்தினர் பெண் கேட்டு சென்றுள்ளனர். ஆனால், ரமணி திருமணம் செய்ய விருப்பம் இல்லை என தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மதன், இன்று காலை கத்தி எடுத்துக் கொண்டு மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளிக்கு சென்றுள்ளனர்.அப்போது வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை ரமணி அருகே சென்ற மதன், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரது கழுத்திலேயே குத்தியுள்ளார். இதனை பார்த்த மாணவர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இருப்பினும், அருகில் இருந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தகவல் கொடுக்க, பள்ளி வளாகமே பெரும் பதற்றம் தொற்றிக் கொண்டது. உடனே சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து, ஆசிரியை ரமணியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இருப்பினும் ஆசிரியை ரமணி மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து உடனடியாக சேதுபாவாசத்திரம் காவல்துறைக்கும் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து ஆசிரியையை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் கொலையாளி மதனை கைது செய்து, கொலை வழக்கு பதிவு செய்து விசாரிக்க தொடங்கினர். அதில் திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததால் ஆசிரியை ரமணியை குத்திக் கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரும் சம்பவம் நடந்தது குறித்து கேட்டறிந்ததுடன், உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா IAS.
மேலும், இந்த சம்பவத்தை கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளார். அரசுப் பள்ளி வளாகத்திலேயே ஆசிரியை திருமண விவகாரத்துக்காக குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் அன்பில் மகேஷ்.
அரசு பள்ளியில் ஆசிரியையை குத்திக் கொலை செய்தவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
ஆசிரியை குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம். தஞ்சை: அரசுப்பள்ளியில் கொல்லப்பட்ட ஆசிரியை குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம். விசாரணை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு, குற்றவாளிக்கு விரைவில் தண்டனை பெற்றுத்தரப்படும். ஆசிரியை ரமணியின் உயிரிழப்பு கல்வித்துறை, ஆசிரியர்கள், மாணவர்களுக்கு ஈடு செய்ய முடியாத பெரிய இழப்பு – முதல்வர் ஸ்டாலின்