அட்டக்கத்தி தினேஷ் நடித்து வெளியான லப்பர் பந்து திரைப்படம் வெளியாகி சில நாட்கள் ஆனாலும் இன்னும் இணையதளத்தில் நெட்டிசன்கள் அந்த படம் குறித்து பல்வேறு விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
எழுத்தாளர் சமரன் நாகன்
தற்போது வெளியான அமரன் மற்றும் கங்குவா போன்ற திரைப்படங்கள் சரியாக ஓடவில்லை என்றும் மீண்டும் ரப்பர் பந்து பல தியேட்டர்களில் திரையிடப்பட உள்ளது என்கின்ற செய்திகளும் இணையதளத்தில் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் எழுத்தாளர் சமரன் நாகன் அவரது பார்வையில் லப்பர் பந்து என்று ஒரு விரிவான விமர்சனத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
லப்பர்பந்தின் பெண்கள் ! லப்பர்பந்து திரைப்படம் குறித்துப் பலரும் பல விமர்சனங்களை குறுக்கு வெட்டு, நெடுக்கு வெட்டு என்று வகை பிரித்து எழுதிவிட்டனர். பெரும்பாலோனோர்க்கு இந்தப்படம் பிடித்திருந்ததொன்றும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஒரு திரைப்படத்தில் காதல், ஈகோவால் நிகழும் தனிமனித யுத்தங்கள், சாதிய வன்மம், பெண்ணுரிமை எல்லாவற்றையும் பேசியும், சுவாரஸ்யமான திரைக்கதையாக நகர்த்தியிருக்கிறார் தமிழரசன் பச்சைமுத்து.
யதார்த்த வாழ்வின் போலிகளின் இடையே நிகழ்ந்திருக்கும் நிஜம் லப்பர்பந்து. தமிழ்ச்சினிமாவில் நிகழவே இல்லாத, இல்லை அரிதாக நிகழ்ந்திருக்கின்ற ஒரு விசயத்தை இயக்குநர் இந்தப்படத்தில் தொட்டிருப்பது தான் என்னை முதலில் கவர்ந்தது. ஒரு தலித் பெண்ணை, குறைந்தபட்சமாகச் சாதிய அடுக்கில் மேலுள்ள ஒரு ஆணைத் திருமணம் செய்துகொள்ளும் ஒரு பெண்ணை முதன்மைக் கதாபாத்திரமாக எடுத்து அவள் வாழ்வின் ஒழுங்குகளைக் காட்சிப்படுத்தியதற்கு ஒரு சபாஷ் போட்டுக்கொள்கிறேன்.
இந்த வகைமைப் பெண்களை தமிழ் சினிமா காட்சிப்படுத்தியதாக எனக்கு நினைவில்லை. (அப்படியே இருந்தாலும் முதன்மைக் கதாபாத்திரமாகக் கையாளப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை). ஆண் பாத்திரங்கள் பெரும்பாலும் பண்ணையார் பெண்களையே காதலிக்கும், இல்லை வேறு மதம் என்றுகூடத் தாவிவிடும், ஆனால் இப்படியான யசோதைக்கள் நம்மைச் சுற்றிலும் நிறையப் பேர் இருக்கிறார்கள். யசோதையின் கதாபாத்திரம் தான் உண்மையிலேயே ‘கெத்து’. வழக்கம்போலவே டைட்டிலை ஆண்கள் தட்டிச்சென்றுவிட்டனர். பரவாயில்லை.
சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்த எனக்கு யசோதையைப் போல் பல பெண்களைத் தெரியும். சாதிய ஆணவத்தால் கொலை, வன்முறை மட்டுமே இல்லை. இது போல ஏற்றுக்கொள்ளலும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. குறைந்தபட்சம் அந்தப்பெண்ணைத் திருமணத்தின்பின் ஏற்றுக்கொள்வார்கள். இல்லை அவர்களே திருமணம் செய்து வைப்பார்கள். ஆனால் அவர்கள் குடும்பத்தோடு உறவாடிக்கொள்ள (புழங்கிக்கொள்ள என்பது வட்டாரத்தில் சொல்லப்படும் சொல்லாடல்) மாட்டார்கள். அவர்கள் வீடுகளுக்குச் செல்வதோ, அப்படியே போனாலும் உணவருந்துவதோ பெரும்பாலும் நடப்பதில்லை. அந்த நிலையிலிருந்து மாற முயற்சித்துக்கொண்டிருக்கும் ஒரு சமூகத்தைக் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.
கதையை அவை உருவாகும் இடத்திலிருந்தே எடுப்பது அழகியலின் உச்சம். ஹரீஸ்கல்யாண் , அட்டகத்தி தினேஷிடம் மன்னிப்புக் கேட்க எடுக்கும் உத்திகள் ஒரு உதாரணம். ‘கெத்து’ பூமாலையை, ‘அண்ணா’ என்று கூப்பிடுவது. அக்கா, அண்ணா என்று அழைத்துப்பழக்கமான குடும்பத்துப் பெண்களைக் காதலித்தபின் ஆண்கள் அந்த வழக்கத்தைக் கைவிட முடியாமல் பெண்ணின் அம்மாவை ‘அக்கா’ என்றே அழைக்கும் சில வீடுகளும் உண்டு.
சரிவர வேலைக்குப் போகாமல் கிரிக்கெட் மட்டையைத் தூக்கிக்கொண்டு விளையாடப்போகும் ஒரு ஆணை, ஹீரோவாகக் காட்டும்போது நுணுக்கமாகப் பல கோணங்களில் அந்தப் பாத்திரம் வடிவமைக்கப்பட்டாலொழிய அது மக்களிடையே அடிவாங்கிவிடும். ‘ கெத்து ‘ பூமாலை மனைவிக்கு மோசமானவனாகவும், மகளுக்கு ஹீரோவாகவும் தெரிகிறான். ‘கல்யாணமாகி ரெண்டு புள்ள பெத்தாச்சு… இன்னுமா உன்ற புருசன் மட்டைய தூக்கிட்டு விளையாடப் போறான்…’ இதைப் பெரும்பாலான பெண்கள் கேட்டிருக்கக்கூடும். கூலி வேலை பார்த்துக் குடும்பம் நடத்தும் ஒருவனுக்குப் பொழுதுபோக்கென்பது அனாவசியம். அதெல்லாம் மேட்டுக்குடிகளுக்கானது என்ற பிம்பம் படுத்தும்பாடு.
அவன் அப்படி இருப்பதால் தான் குடும்பம் கடனில் தத்தளிக்கிறது. இல்லாது போனால் அவர்கள் பொருளாதார ரீதியாக மேலான வாழ்வு வாழ்ந்திருப்பார்கள் என்பதெல்லாம் சுத்தப் பிதற்றல். இது போன்ற கிரிக்கெட்டுகள் வார இறுதியில் நடக்கும். ஏதாவது டோர்னமெண்ட் என்றால் கொஞ்சம் தொழிலுக்கு வேட்டு வைக்க வாய்ப்பு உண்டு. அவர்கள் கிரிக்கெட்டே விளையாடாமல் முட்டிதேய ஏழு நாளும் உழைத்துக் கொட்டினாலும் கொஞ்சம் கடனில்லாமல் அவர்கள் வாழ்ந்திருக்கலாமேயொழிய மிகப்பெரிய மாயாஜாலங்கள் எதுவும் நிகழ்ந்திருக்கப்போவதில்லை.
அவர்கள் வீட்டில் அனைவரும் உழைக்கிறார்கள், சம்பாதிக்கிறார்கள், கெத்து நல்லவன், அவன் குடித்துவிட்டுக் கூத்தடிப்பதில்லை, சம்பாதிக்கும் பணத்தை வீண் செய்வதில்லை, அவனிடம் இருப்பது கிரிக்கெட்டின் மீதான காதல். ஆனால் அப்படியான ஆணை வீட்டில் வைத்திருக்கும் பெண் தான் அதற்கான சுமையையும் சேர்த்துச் சுமக்க வேண்டியிருக்கிறது. அப்படியான ஆண் வீட்டில் இருக்கும்போது பெண் அவனிடம் கண்டிப்புடன் இருக்கவேண்டிய நிர்பந்தத்துக்குத் தள்ளப்படுகிறாள். இல்லையென்றால் ஊருக்குள் அவர்கள் குடும்பத்துக்கு நல்ல பெயர் இருக்காது.
அவன் பொறுப்பில்லாமல் இருப்பது போன்ற பிம்பத்தை உடைக்கவே யசோதை மிகவும் கடுமையனவளாகத் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனாலும் யசோதை அவன் மீது அன்பாயிருக்கிறாள். அன்பாக இருப்பதென்பது மலர்கொத்துகள் கொடுத்துக் கொள்வதோ, பிறந்தநாளுக்குப் பரிசுப்பொருட்களை நிறைப்பதோ இல்லை. அன்பாக இருப்பதென்பது வெறுமனே அன்பாக இருப்பது மட்டுமே. அவர்களுக்குள்ளான ஊடலும் கூடலும் அத்தகைய அன்பைக் காட்டியது.
கெத்தின் மகளாக வரும் துர்கா காதலில் உறுதியாக இருக்கிறாள். ‘வேறு ஒருத்தனைக் கட்டிக்க மாட்டேன்’. எவ்வளவு எளிமையான வார்த்தைகள். தான் நினைத்தாலன்றி தனக்கு யாரும் எஜமானாக முடியாது என்றொரு மனநிலை அடித்தட்டு மக்களுக்கே கிடைத்த வரம். இங்கு போராட்டங்கள் உண்டு. ஆனால் அது வாழ்வின் ஊடாக நிகழ்ந்துகொண்டே இருக்கும். இந்தப் பெண்கள் பூட்டிய கதவுகளுக்குள் அடைத்துவைக்கப்படுவதில்லை. காதலிப்பது தெரிந்தபின்னும் கூட சுயமாக இருக்கவிடப்படுகிறார்கள். பொருளாதாரத்தில் அடித்தட்டில் இருப்பவர்களுக்கு சொத்து என்ற வகையில் நிலம், உடைமைகளைக் கட்டிக்காக்க வேண்டிய அவசியமும் , அதற்காகப் பெண்களைப் பலிகடா ஆக்கவேண்டிய நிர்பந்தமும் இருப்பதில்லை. அவர்கள் இந்த வகையில் அதிர்ஷ்டசாலிகளே..!
வாழ்வியல் யதார்த்தக் களத்தில் பெண்களைத் தனியாக உருவகப்படுத்தத் தேவையே இல்லை. நம்மைச் சுற்றியுள்ளவர்களின் உணர்வுகளைக் காட்சிப்படுத்தினாலே போதுமானதாக இருக்குமே! துர்காக்கள், யசோதைக்கள், யசோதையைச் சுற்றியிருக்கும் லப்பர்பந்தின் பெண்கள் யதார்த்த வாழ்வின் உண்மைகள். லப்பர்பந்து மனம்நிறைத்த திரையனுபவம்.