chennireporters.com

தமிழ்த் தேசத் தந்தை பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் நினைவேந்துவோம்!

பாவலரேறு ஐயா பெருஞ்சித்திரனார் மறைவுற்று 27 ஆண்டுகள் ஓடிவிட்டன..

பதின் கவனகர், பதினாறு கவனகர் எனச் சொல்லப்படுகிற வகையில் பதினாறு வகைப்பட்ட செயற்பாடுகளில் முழு செயல்திறத தோடு இயங்கியவர் பாவலரேறு கழகக் காலம் என அறியப்படுகிற காலச் சிறப்புக்குரிய ‘பா’த் திறம் கொண்டவர்.

பாவலரேறு கட்டுரையாளர், சிறுகதைப் படைப்பாளர், பேச்சாளர், இதழியலாளர், மெய்யியல் அறிஞர், அறிஞர்களைப் பேணுநர், இயக்கச் செயற்பாட்டாளர், தமிழ்நாட்டின் விடுதலைப் போராட்டத் தளபதி – என்றெல்லாம் அவரின் ஆளுமைத் திறத்தை விரிவாகப் பதிவு செய்யலாம்..

அவர் எழுதிக் குவித்திருக்கும் பல்லாயிரம் பக்கப் பாடல்கள், கட்டுரைப் படைப்பாக்கங்களைக் கடந்து அவர் தமிழ்த்தேசியத் தந்தை எனக் கருதப்படுவதற்கு அடிப்படையான காரணங்கள் உண்டு.

தமிழ்நாட்டிற்கான விடுதலை தேவை முழக்கம் 1938 இல் சோமசுந்தரபாரதியார், மறைமலையடிகளார், பெரியார் ஈ.வெ இராமசாமியார் உள்ளிட்டோரின் அறிவிப்பில் தொடங்கப்பட்டது.

அதன்பின்னர் அவ் விடுதலைக் கொள்கையை வலியுறுத்தி மிகப் பெருமளவில் இல்லாவிட்டாலும் இயக்கப் படுத்தி .. அதற்காக அக்காலங்களில் சிறைப்பட்டவர் பெரியாரும் திராவிடர் கழகத்தவர்களுமே..அண்ணல் தங்கோ, கி ஆ பெ விசுவநாதம், சி. பா.ஆதித்தனார்,ஈ.வெ.கி.சம்பத்,ம.பொ. சிவஞானம் உள்ளிட்டோ ரெல்லாம் தொடர்ந்து தமிழ்நாடு விடுதலையை வலியுறுத்தி இயங்காமல் இடையில் தடம் மாறியும் தங்கியும் விட்டவர்கள்.

1956 மொழி வழி மாநிலப் பகுப்புக்குப் பிறகு, தான் மறைவுற்ற 1973 வரை பெரியார் தமிழ்நாடு விடுதலையைப் பேசி வந்தார் தமிழ்நாடு தமிழருக்கே எனப் பச்சை குத்திக்கொள்ளுங்கள் என்றார்.. மார்பு வில்லை அணிய வலியுறுத்தினார் வேட்டி, புடவைத் தலைப்புகளில் தமிழ்நாடு தமிழருக்கே என்று பொறித்துக் கொண்டனர்.

தோழர்கள் இடையிடையே வடநாட்டான் கடைமறியல் தமிழ்நாடு நீங்கலாக இந்தியப் பட எரிப்பு எனப் பெரியாரின் தமிழ்நாடு விடுதலைச் செயற்பாடுகள் இருந்தன 1959- இல் தென்மொழி இதழைப் பாவலரேறு பெருஞ்சித்திரனார் தொடங்கும் போதே தமிழ்நாடு விடுதலையை இலக்காகக் கொண்டிருந்தார்.

விடுதலை வேண்டும் அது முதல் வேலை வேறெந்த வேலையும் செய்யலாம் நாளை என்றார் விடுதலைக்குப் படை கட்ட வேண்டும் என அழைத்தார் அதில் இணைய வந்தவர்களிடம் குருதிக் கையொப்பம் பெற்றார்.

இன்றைய த.நா. மா.இலெ.கட்சிப் பொதுச்செயலாளர் தோழர் கார்முகில் அவர்கள் அன்றைக்குக் குருதிக் கையொப்பமிட்டவர்களுள் ஒருவர் 1972, 1973,1975 -ஆம் ஆண்டுகளில் தமிழ்நாடு விடுதலைக்கான மாநாடுகளைத் திருச்சி, மதுரை, சென்னையில் தமிழக வரலாற்றிலேயே முதன் முதலில் நடத்திச் சிறைப்பட்டார்.

திருச்சி விடுதலை மாநாட்டிற்கு அண்ணல்தங்கோ, கி ஆ பெ, ஆதித்தனார் உள்ளிட்டோரை அழைத்தார் ஆனால் திராவிடர் கழகத்தின் பொன்னம்பலனார், வழக்கறிஞர் கோவை கத்தூரி உள்ளிட்டோரும் எண்ணற்ற தென்மொழி மறவர்களுமே வந்திருந்தனர்.

1973 மதுரை மாநாட்டிற்குப் பெரியாரை அழைத்திருந்தார் பெரியாரும் வந்து பேரணி தொடங்கிய நிலையில் மாலையில் வருவதாய்ச்சென்றார் தமிழ்நாடு விடுதலையை வலியுறுத்திப் போராட்டம் அறிவிக்க பெரியாரை வலியுறுத்தினார்.

பெரியாரும் ஒப்புக்கொண்டு சென்னை இறுதிச் சொற்பொழிவில் பேசினார் 1973 இல் பெரியார் மறைவுற்றதற்குப் பிறகு 21 ஆண்டுகள் பாவலரேறு ஐயா வாழ்ந்திருக்கிறார்.

நெருக்கடி காலத்தில் மிசாவில் சிறைப் பட்டு வந்த பின்னரும் தமிழ்நாடு விடுதலை வலியுறுத்தம் பாவலரேறுவிடம் குறையவில்லை.

தீவிரப்பொதுவுடைமையராக மக்கள் போர்க் குழுவில் செயல்பட்டு வந்த புலவர் கலியபெருமாள், தோழர் தமிழரசன் உள்ளிட்டோரிடையே 1981 முதல் பேசித் தமிழ்த் தேச விடுதலையை வலியுறுத்தினார்.

1984 – இல் அவர்கள் தமிழ்நாட்டு அளவில் கட்சி கட்டியதற்கும், தமிழ்நாடு விடுதலையை வலியுறுத்தியதற்கும் தமிழீழச் சிக்கல் மட்டுமே காரணியன்று.. பாவலரேறுவும் காரணம் என்பதை உணர்ந்தோர் அறிவர்..

1985,86 களில் மா இலெ வினரை, தமிழ்த்தேசியரை, பெரியாரியலாளர்களை, அடித்தட்டு மக்கள் இயக்கங்களை இணைத்து தமிழ்நாடு விடுதலை நோக்கி இயங்கவைத்த சிறப்புக்குரியவர் பாவலரேறு..

அதேபோல் பேராயக்கட்சியிலிருந்த ஐயா நெடுமாறன் அவர்களும்,
மார்க்சிய கட்சியிலிருந்ததோழர் பெ. மணியரசன் உள்ளிட்ட தோழர்களும் 1990 களில் தமிழ்த் தேச அரசியல் நோக்கி வருவதற்குத் தமிழீழ அரசியல் காரணம் போலவே தென்மொழியின் செயற்பாடுகளும், தோழர் தமிழரசன் புலவர் கலியபெருமாள் உள்ளிட்டோரின் தமிழ்நாடு பொதுவுடைமைக் கட்சி செயற்பாடுகளும் ஒரு காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது..

1995 – இல் தன் இறுதி மூச்சு இருந்தவரை தமிழ் மொழி, இனம், நாடு என்பதற்காகவே உயிர்த்து இயங்கிய பேராற்றல் சான்ற பெருந்தகை பாவலரேறு அவர்கள்..

எனவே,தமிழ்த் தேச அரசியல் விடுதலைக்குத் தந்தை என்று அடையாளப்படுத்திட வேண்டிய அப் பேராசானின் அடியொற்றிச் செயற்பட அவரின் 27 ஆம் நினைவேந்தல் நாளில் சூளுரை மேற்கொள்வோம்..

சூன் 11- ஆம் நாள்..பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் 27- ஆம் ஆண்டு நினைவேந்தல் நாள். தமிழ்தேசத் தந்தை பாவலரேறு ஐயாவுக்கு வீரவணக்கம்.

இதையும் படிங்க.!