சென்னை பம்மலில் உள்ள பிஜே ஜெயின் மருத்துவமனையில் உடல் பருமன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவமனையை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதுச்சேரி சேர்ந்த திரு.D.செல்வநாதனின் மகன் S. ஹேமச்சந்திரன், உடல் பருமன் குறைப்பு சிகிச்சைக்காக சென்னை பம்மல் B.P.ஜெயின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தவறான சிகிச்சையின் காரணமாக கடந்த 23.4.2024 அன்று உயிரிழந்தார்.
டாக்டர் பெருங்கோ எனும் மருத்துவரால் நடந்த தவறான அறுவை சிகிச்சையாலும் இப்படிப்பட்ட அறுவை சிகிச்சை செய்வதற்குண்டான மருத்துவ வசதிகள் இந்த B.P. ஜெயின் மருத்துவமனையில் இல்லாததாலும். தன் மகன் S.ஹேமச்சந்திரன் மரணமடைந்தார். ஆகவே தன் மகனின் மரணத்தில் நியாயம் கிடைக்க வேண்டும், குற்றம் புரிந்தவர்களுக்கு தகுந்த தண்டனை கிடைக்க வேண்டும் என்று D.செல்வநாதன் தமிழக அரசிற்கு வேண்டுகோள் விடுத்தார். அதனடிப்படையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மாண்புமிகு மா.சுப்பிரமணியன் அவர்கள் துரிதமான நடவடிக்கை எடுத்தார்.
செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர். தீர்த்தலிங்கம் தலைமையிலான மருத்துவர் நிபுணர் விசாரணை குழு அமைக்கப்பட்டது. இந்த விசாரணை குழு அறிக்கையின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு B.P.ஜெயின் மருத்துவமனையின் அனுமதியை ரத்து செய்து மருத்துமனைக்கு சீல் வைத்தது.டாக்டர். பெருங்கோ மற்றும் இரண்டு மருத்துவர்கள், பணியாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலுக்கு பரிந்துரையும் செய்யப்பட்டது. B.P.ஜெயின் மருத்துவமனை என்பது காஞ்சி சங்கர மடத்தின் அறக்கட்டளைக்கு சொந்தமானதாகும். B.P. ஜெயின் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவு மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கை மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் மே மாதம் கோடை விடுமுறை கால நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து ஒரு நீதிபதி நீதிமன்றம் இந்த அரசு ஆணையை ரத்து செய்தது.
இன்று 12.9.2024 உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பு மாண்புமிகு நீதியரசர் D.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி P.B.பாலாஜி ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு பெஞ்ச் மே மாதத்தில் ஒரு நீதிபதி வழங்கிய தமிழ்நாடு அரசு ஆணைக்கு எதிரான தீர்ப்பை ரத்து செய்தது. இதனடிப்படையில் சங்கர மடத்தின் B.P.ஜெயின் மருத்துவமனையின் அனுமதியை ரத்து செய்யும், மருத்துவமனைக்கு சீல் வைக்கும் தமிழ்நாடு அரசின் ஆணை செல்லும் என்று தீர்ப்பு வந்திருக்கிறது. நியாயம் கேட்டுப் போராடும் தோழர் D.செல்வநாதனுக்கு இந்த தீர்ப்பு சற்று ஆறுதல் அளிக்கிறது.
இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு உடனடியாக B.P.ஜெயின் மருத்துவமனைக்கு சீல் வைக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக வேண்டுகிறோம். இந்த மேல்முறையீடு செய்த தமிழ்நாடு அரசிற்கும், அரசு வழக்கறிஞர்களுக்கும் நன்றினை தெரிவித்துக் கொள்கிறோம்.
ந்த வழக்கில் இணைந்து வழக்காடிய சீனியர் வழக்கறிஞர் திரு.பிரகாஷ் மற்றும் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும் நன்றினை உரித்தாக்கி கொள்கிறோம். மேலும் இந்த மரணத்தில் சந்தேகம் உள்ளது. எனவே உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று பம்மல் நகர், குரோம்பேட்டை காவல் நிலையங்களில் புகார் அளித்தும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே உடனடியாக இந்த காவல் நிலையங்கள், பம்மல் B.P.ஜெயின் மருத்துவமனை மீதும் டாக்டர் பெருங்கோ மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் எனக் கோரி உயர்நீதிமன்றத்தில் திரு.D.செல்வ நாதன் பெயரில் தனி வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஹேமச்சந்திரன் உயிரிழப்புக்கு நியாயம் கிடைக்க சிறப்பான நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் திரு. மா.சுப்பிரமணியன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.
இச்செய்தியினை தங்களின் மேலான பத்திரிக்கை மற்றும் செய்தி ஊடகத்தில் வெளியிடுமாறு வேண்டுகிறோம்.