முக்கால் நூற்றாண்டு இந்திய ஜனநாயகத்தின் பக்கங்களில், கருப்பு அத்தியாயமாக மணிப்பூரில் தொடர்ந்து படுகொலைகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. பெண்களும், பச்சிளம் குழந்தைகளும் அங்கே படுகொலை செய்யப்படுவது அன்றாட நிகழ்வாகிவிட்டது.
மணிப்பூரில் ஒரு முதல்வர் இருக்கிறாரா? அல்லது மணிப்பூரை உள்ளடக்கிய இந்தியாவின் பிரதமராக மோடி இருக்கிறாரா என்கின்ற சந்தேகத்தை, தினம் தினம் அங்கே அரங்கேற்றப்படும் அட்டூழியங்கள் நம்மில் எழுப்பி உள்ளன.
ஆம்! மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு சமூகங்களுக்கு இடையிலான பிரச்சனையை ஒன்றிய பாஜக அரசு தடுக்க தவறியதால் அங்கு மீண்டும் கலவரம் ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக அந்த மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் கடந்த ஆண்டு வன்முறையை நினைவூட்டும் வகையில் மீண்டும் பற்றி எரிந்து கொண்டு இருக்கின்றன.
மணிப்பூரில் பெரும்பான்மை சமூகமாக இருக்கும் மெய்த்தி இனத்தவருக்கும், பழங்குடி மக்களான நாகா மற்றும் குகி இனத்தவருக்கும் இடையே பிரச்சனை இன்னும் நீரு பூத்த நெருப்பாகவே கனன்று கொண்டிருக்கிறது. கடந்தாண்டு ஒட்டுமொத்த மணிப்பூர் மாநிலமே பற்றி எரிந்த ஒரு கொடூரமான நிகழ்வு அரங்கேறிய போதிலும், அங்குப் பதற்றத்தை தணிக்க ஒன்றிய பாஜக அரசு முனைப்பு காட்டாதது அங்கு மீண்டும் கலவரம் தலை தூக்கி இருப்பதற்கான காரணமாகப் பார்க்கப்படுகிறது.
நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் ஆளும் பாஜக தனக்கான அரசியல் ஆதாயம் கருதி மெய்த்தி இனத்தவரைப் பழங்குடி இன பட்டியலில் சேர்ப்பதாக ஆசை வார்த்தை கூறிய போதுதான் அங்குப் பிரச்சினையே தொடங்கியது. அதுவரை சகோதரர்களாகப் பழகி வந்த நாகா, குக்கி பழங்குடி இனத்தவருக்கும், மெய்த்தி சமூகத்திற்கும் இடையே மோதல் உருவானது. கடந்த மே மாதம் தொடங்கிய இந்த வன்முறை தொடர்ந்து பல நாட்களுக்கு நீடித்ததில் 200க்கும் அதிகமானோர் உயிர்ப்பலியானார்கள். பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக வீதிகளில் இழுத்து வரப்பட்டு கொடூர துன்பங்களை அனுபவித்தார்கள். பல்லாயிரக்கணக்கான மக்கள் அகதிகளாகப் பிற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்த அவலமும் அரங்கேறியது. கிறிஸ்துவ தேவாலயங்கள் இடித்து நொறுக்கப்பட்டன. கிறிஸ்தவர்களால் நடத்தப்படும் பள்ளி கட்டிடங்கள் சேதப்படுத்தப்பட்டன. பள்ளியின் வாகனங்களும், வகுப்பறைகளும் தீக்கிரையாக்கப்பட்டன.
இவ்வளவு நடந்தும் ஒரு நாட்டின் பிரதமர் என்ற முறையில் மோடி, அங்குச் சென்று பார்க்காததும், அதுகுறித்து வாய் திறக்க மறுப்பதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அந்த மாநிலத்தில் பிரச்சனை முடிவுக்கு வராமல் நீரு பூத்த நெருப்பாகவே இருந்து வந்தது.அங்கு எந்த நேரத்திலும் மீண்டும் ஒரு பெரும் வன்முறை கலவரம் வெடிக்கலாமென உளவுத்துறை அவ்வப்போது தகவல்களை அளித்தும் ஒன்றிய பாஜக அரசு அதில் பெரிதும் ஆர்வம் காட்டவில்லையெனக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இப்படிப்பட்ட சூழலில் தான் மணிப்பூர் மாநிலத்தின் ஜிரிபாம் மாவட்டத்தில் குகி பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஆயுதம் தாங்கிய இளைஞர்கள் பாதுகாப்பு படையினருடன் சண்டையிட்டனர். இதில் போராட்டக்காரர்கள் 10 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். இந்தச் சூழலில் மெய்த்தி சமூகத்தைச் சேர்ந்த ஆறு பேர் கடத்தப்பட்டனர். அவர்கள் குகி சமூகத்தினரால் கடத்திச் செல்லப்பட்டதாகக் கூறி மணிப்பூர் மாநிலத்தின் பல இடங்களில் மெய்த்தி சமூகத்தினர் மீண்டும் வன்முறையில் இறங்கினர். கடத்திச் செல்லப்பட்ட ஆறு பேரும் சடலங்கலாகக் கண்டெடுக்கப்பட்டதால் நிலைமை இன்னும் மோசமானது.
இம்பால் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பல இடங்களில் நாகா மற்றும் குகி சமூகத்தினரை குறி வைத்துத் தாக்குதல்கள் அரங்கேறின. தீ வைப்பு சம்பவங்களும் நடந்ததால் நிலைமை மோசமானது. மேலும் ஜிரிபாம் நகரில் இரண்டு தேவாலயங்களுக்குத் தீ வைக்கப்பட்டதோடு அங்கிருந்த சில வீடுகளும் தாக்கப்பட்டன.
மணிப்பூரை ஆளும் பாஜக அரசுமீதும் கோபம் திரும்பியதால் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களின் வீடுகளைக் குறிவைத்தும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. முதலமைச்சர் பைரன் சிங் வீட்டின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு அதிகமானது.
நேற்று முன்தினம் தொடங்கிய இந்தக் கலவரம் முடிவின்றி தற்போது வரை தொடந்து கொண்டு இருக்கிறது. இதனால் கடந்த ஆண்டு மே மாதம் நடந்தது போன்ற ஒரு கொடூரமான கலவரம்- வன்முறை மீண்டும் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் ஒட்டுமொத்த மணிப்பூர் மக்களும் உறைந்து போயிருக்கிறார்கள்.
மணிப்பூர் மாநிலத்தில் தற்போது நடைபெறும் வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆளும் பாஜக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் தேசிய மக்கள் கட்சி அரசுக்கான தங்கள் ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்திருப்பதால் அங்கு அரசியல் பரபரப்பும் அதிகரித்து இருக்கிறது.
மணிப்பூரில் வன்முறையைக் கட்டுப்படுத்துவதில் பாஜக அரசு முற்றிலும் தோல்வி அடைந்து விட்டது; அல்லது இரு சமூகங்களுடைய பிரச்சனையைத் தூண்டிவிட்டு, மடியும் உயிர்களின் அலறல் சப்தத்தில் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருக்கிறது ஆளும் மணிப்பூர் பாஜக அரசு என்கின்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாகத் தேசிய மக்கள் கட்சி தலைவர் கன்ராட் சங்மா தெரிவித்திருக்கிறார்.
மணிப்பூரில் மீண்டும் இப்படியொரு கலவரம் ஏற்படும் என்று தெரிந்தும் மத்திய பாஜக அரசு தொடர்ந்து மெத்தனமாக இருப்பதால் அந்த மாநிலம் கலவரத்தால் பற்றி எரிய வேண்டும் என்பதை பாஜக விரும்புகிறது எனக் காங்கிரஸ் கட்சி கடுமையான விமர்சனத்தை முன் வைத்திருக்கிறது. பாஜகவின் இரட்டை எஞ்சின் ஆட்சியில் மணிப்பூர் அமைதி இழந்து தவிக்கிறது;
அங்கு மக்களிடையே அமைதி இல்லை; அவர்கள் இடையே பகை ஏற்படுத்தப்பட்டு வன்முறை கட்டவிழ்க்கப்பட்டிருக்கிறது. மணிப்பூர் மாநில சூழ்நிலை, தனது வெறுப்பூட்டும் அரசியலுக்கு உதவுவதால் மணிப்பூர் எரிக்கப்பட வேண்டும் என்றே பாஜக விரும்புகிறது என்றும் மிகக் காட்டமாகத் தனது கருத்தைப் பதிவு செய்திருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே. பிரதமர் மோடி ஒருமுறையாவது மணிப்பூருக்கு சென்று அமைதியை மீட்டெடுக்க முயற்சிக்க வேண்டும் எனக் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தியும் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
தனது அரசியல் சுய லாபங்களுக்காக ஒரு மாநிலமே பற்றி எரிவதை ஒன்றிய பாஜக அரசு இனியும் வேடிக்கை பார்க்கக் கூடாது. எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி நாடு முழுவதும் இருக்கும் நடுநிலையாளர்களின் கருத்தும் இதுதான். தங்களது சுயநலத்திற்காக, சுய லாபத்திற்காக ஒரு மாநிலத்தின் ஒற்றுமையை வேட்டையாடும் பாசிச பாஜக ஆட்சியைப் பார்த்து இந்திய தேசத்தின் ஒட்டுமொத்த மக்களும் கேள்வி கேட்க வேண்டிய தருணம் இது.
கேட்க வேண்டிய தருணத்தில் கேட்காமல் போனால், மணிப்பூர் மக்களுக்கான நீதி மட்டும்தான் கிடைக்காமல் போய்விடும் என்பதல்ல. இந்திய மக்களுக்கான நீதியும் மறுக்கப்பட்டுவிடும். கேட்கப்படாத கேள்வியால் தான் இன்று மணிப்பூர் பற்றி எரிகிறது. மக்களின் இந்த மௌனம் தொடர்ந்தால், நாளைய இந்தியா இன்னொரு மணிப்பூராக மாறிவிடும் அபாயம் இருக்கிறது.