chennireporters.com

மே-18 – ஈழத் தமிழர் இனப்படுகொலை நாள் கடைப்பிடிக்க கனடா நாடாளுமன்றம் தீர்மானம்

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை“ஈழத் தமிழர்கள் இனப்படுகொலைக்கு ஆளான நினைவு நாளாக மே-18ஆம் நாளை கடைப்பிடிக்கும்படி.

கனடா நாடாளுமன்றம் ஒரே மனதாகத் தீர்மானம் ஒன்றினை நிறைவேற்றியுள்ளதை உலகத் தமிழர்கள் மற்றும் மனித உரிமைப் போராளிகள் அனைவரும் வரவேற்றுப் பாராட்டுவார்கள் என்பதில் ஐயமில்லை.

இத்தீர்மானத்தை முன்மொழிந்த லிபரல் கட்சியைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கேரி ஆனந்த சங்கரி அவர்களுக்கும் கனடா நாட்டின் தலைமையமைச்சர் ஜஸ்டின் ட்ரூ டியாவு அவர்களுக்கும் நன்றி கூறிப் பாராட்டுகிறேன்.

கனடா தலைமையமைச்சர் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உயிர்ப் பிழைத்து எஞ்சியிருக்கும் தமிழ் மக்களுக்கும் நீதி கிடைக்கவேண்டும் என்பதற்காக கனடா தொடர்ந்து போராடும்.

ஐ.நா. மனித உரிமை குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, இலங்கையில் மனித உரிமைகளை நிலைநாட்டுவதற்கும், காப்பதற்கும் இலங்கை அரசு முன்வரவேண்டும் என்பதையும் தொடர்ந்து நாங்கள் வலியுறுத்துவோம்.

கனடாவில் வாழும் ஈழத் தமிழ் மக்களுக்கு ஆறுதல் கூறி அரவணைக்க வேண்டிய கடமை கனடா மக்களுக்கு உண்டு. எதிர்காலத்தில் இத்தகைய கொடுமைக்கு அவர்கள் ஆளாகாதவாறு தடுப்பதற்கு நாம் ஒன்றிணைந்து செயல்படுவோமாக” எனக் கூறியுள்ளார்.

உலகின் மிக முக்கிய நாடுகளில் ஒன்றான கனடா நாட்டின் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ள இந்த தீர்மானம் வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும். உலக நாடுகளின் விழிகளைத் திறப்பதற்கும்.

கனடாவைப் பின்பற்றி மற்ற நாடுகளும் ஈழத் தமிழர் துயரைத் தடுப்பதற்கும் முன்வர இத்தீர்மானம் உதவும் என நம்புகிறேன்.

அன்புள்ள

(பழ.நெடுமாறன்)
தலைவர்.

இதையும் படிங்க.!