chennireporters.com

மு.க.ஸ்டாலின் கோரிக்கைகளும் மோடியின் புறக்கணிப்பும்

ஐயா பெ. மணியரசன்

ஐயா பெ. மணியரசன்,
தலைவர் – தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
இந்திய அரசு செயல்படுத்தும் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா – தொடக்க விழா ஆகியவை 26.5.2022 வியாழக்கிழமை மாலை சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடந்தது. தலைமையமைச்சர் மோடி பங்கேற்றார்.

இவ்விழாவில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழ் மொழி சார்ந்தும், தமிழ்நாடு சார்ந்தும் பல்வேறு கோரிக்கைகளை எழுப்பினார். அப்போது துக்க வீட்டில் உட்கார்ந்திருப்பவரைப் போல தலைமை அமைச்சர் மோடி சோகமாக உட்கார்ந்திருந்தார்.

இந்திய ஏகாதிபத்தியத்தின் பேரரசன் போல் நாம் அமர்ந்திருக்கும் மேடையில் நமக்குக் கீழே, முதலமைச்சர் என்ற பெயரில் செயல்படும் நம் “நாட்டாமைக்கு” இவ்வளவு துணிச்சலா என்று அவர் மனம் குறுகுறுத்திருக்கும்! மோடியின் தமிழ்நாட்டுக் கைத்தடி அண்ணாமலை அன்று இரவே செய்தியாளர்களிடம் ஒப்பாரி வைத்துவிட்டார்.

“இன்று ஒரு கருப்பு நாள்; திட்டங்களின் தொடக்க விழாவில் பிரதமரை மேடையில் வைத்துக் கொண்டு கோரிக்கைகளை மு.க. ஸ்டாலின் பட்டியலிட்டது, அவரை அவமானப்படுத்தும் செயல்” என்றார் பா.ச.க. பார்வையில் “அபச்சாரமாக”த் தெரிந்த கோரிக்கைகள் யாவை?

1. தமிழ்நாட்டின் கச்சத்தீவை இந்திய அரசு இலங்கைக்குக் கொடுத்து விட்டதால் – தமிழ்நாட்டுக் கடலோர மீனவ சமுதாயம் பேரிழப்பிற்கு ஆளாகிறது. இலங்கையிடமிருந்து கச்சத்தீவை இந்தியா மீட்க இதுவே தக்க தருணம்; மீட்டுத் தர வேண்டும்.

2. உலகின் முதல் செம்மொழியான தமிழை இந்திக்கு இணையான அலுவல் மொழி ஆக்க வேண்டும். சென்னை உயர் நீதிமன்ற மொழியாக்க வேண்டும்.

3. நீட் தேர்வு தமிழ்நாட்டில் செயல்படாமல் விலக்களிக்கும் சட்ட முன்வடிவைத் தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றி ஆளுநர் வழியாகக் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. அதற்கு இந்திய அரசு ஒப்புதல் தர வேண்டும்.

4. சரக்கு சேவை வரியில் (ஜி.எஸ்.டி.) இந்திய அரசு தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய இழப்பீட்டுத் தொகையில் 15.5.2022 வரை 14,006 கோடி ரூபாய் நிலுவையாக உள்ளது. இத்தொகையை விரைந்து வழங்க வேண்டும். இவ்வாறு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை 2022 உடன் நிறுத்தி விடாமல் அடுத்த இரண்டாண்டுகளுக்கு நீட்டித்துத் தர வேண்டும்.

மு.க. ஸ்டாலின் இத்தோடு நின்றிருந்தாலாவது மோடிக்கு ஆத்திரம் மட்டுப்பட்டிருக்கும். இதற்கும் மேலே போய், இந்தியாவுக்கும் இந்திய அரசுக்கும் தமிழ்நாடு தரும் பொருளாதார பங்களிப்பு மற்ற (இந்தி) மாநிலங்களைவிட எவ்வளவு அதிகம் என்பதையும் மறைமுகமாகச் சுட்டிக் காட்டிவிட்டார்.

1. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு 9.22 விழுக்காடு. 2. ஒன்றிய அரசின் மொத்த வரி வருவாயில் தமிழ்நாட்டின் பங்கு 6 விழுக்காடு! 3. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்கு 8.4 விழுக்காடு! 4. துணித்துறை ஏற்றுமதியில் 19.47%. 5. தோல் பொருள் ஏற்றுமதியில் 33%.

ஆனால், ஒன்றிய அரசு தனது வரி வருவாயில் தமிழ்நாட்டிற்குப் பிரித்துக் கொடுப்பது 1.21 விழுக்காடு மட்டுமே!

தமிழ்நாடு போன்ற வளர்ந்த மாநிலங்கள் வழங்கும் பொருளாதாரப் பங்களிப்பிற்கேற்ப – இம்மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு பகிர்ந்தளிக்கும் நிதியும், திட்டங்களுக்கான தொகையும் உயர்த்தித் தரப்பட வேண்டும்!

முதலமைச்சர் முன்வைத்த இக்கோரிக்கைகளில் ஒன்றைக் கூடக் குறிப்பிட்டு, “பரிசீலிக்கிறேன்” என்று கூறவில்லை மோடி. “மாடு மேய்க்கும் புலையா உனக்கு மார்கழித் திருநாளா?” என்று நந்தனாரைப் பார்த்து நக்கல் செய்த அந்தக் கால அக்ரகாரத்து ஆண்டையைப் போல் எகத்தாளமாக எண்ணியிருப்பார் போலும்!

அருமையான கோரிக்கைகளை மக்கள் திரள் மேடையில் இந்திய ஏகாதிபத்தியத் தலைவரிடம் முன்வைத்த முதல்வர் மு.க. ஸ்டாலினைப் பாராட்டுவோம்! ஆனால் திராவிட மாடலின் வரலாற்றை நினைத்தால் வயிற்றில் புளியைக் கரைக்கிறது!

கடந்த காலங்களில், முற்போக்கான – புரட்சிகரமான கோரிக்கைகளையும் இலட்சியங்களையும் முன்வைத்த தி.மு.க., பின்னர் அவற்றைக் கைவிட்டு, இந்திய ஏகாதிபத்தியவாதக் காங்கிரசுடனும், பா.ச.க.வுடனும் அமைச்சரவைப் பங்காளியாகி இரண்டகம் செய்தது. அந்நடைமுறையைக் கைவிட்டு, மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து, தி.மு.க. தொடர்ந்து இயங்கினால் சிறப்பாக இருக்கும்!

( தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் – 2022 சூன் மாத இதழின் ஆசிரியவுரையாக எழுதப்பட்டது ).

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

இதையும் படிங்க.!