பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொடூர முறையில் கொல்லப்பட்ட சம்பவத்தில் வட இந்திய கொள்ளை கும்பலான பவாரியா கூட்டம் செய்திருக்கும் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மூன்று பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களாக அந்த வீட்டை கொள்ளையர்கள் நோட்டமிட்டுள்ளனர். எங்களை முகம் தெரியாத சிலர் நோட்டமிடுவதாக தனது உறவினர்களிடம் இறந்த தெய்வசிகாமணி கூறியதாக சொல்லப்படுகிறது.
இதைத் தொடர்ந்து போலீஸார் அது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள சேமலைக் கவுண்டம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் தெய்வசிகாமணி (78). இவரது மனைவி அலமேலு (75). இந்த தம்பதியருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இருவரும் திருமணமாகி, மகன் கோவையிலும், மகள் சென்னிமலையிலும் வசித்து வருகின்றனர். தம்பதியர் கிராமத்தில் விவசாயம் செய்து வந்தனர். இந்த நிலையில் நேற்று உறவினரின் நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொள்ள மனைவி குழந்தைகளை கோவையிலேயே விட்டுவிட்டு, மகன் செந்தில் குமார், தனது தாய், தந்தையர் இருக்கும் பண்ணை வீட்டிற்கு வியாழக்கிழமை வந்திருந்தார். அன்று இரவு உணவு அருந்திவிட்டு மூவரும் தூங்கச் சென்றனர். இவர்கள் தங்கியிருக்கும் இடம் சுமார் 15 ஏக்கர் கொண்ட தென்னந்தோப்பாகும். தெய்வசிகாமணி தென்னை தொழில் செய்து வந்தாராம்.
தெய்வசிகாமணி (78). இவரது மனைவி அலமேலு (75).
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு வழக்கத்திற்கு மாறாக நிறைய நாய்கள் குரைத்ததாம். இதனால் தூக்கம் கலைந்து போன தெய்வசிகாமணி, வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது அங்கிருந்த மர்ம நபர்கள் முதலில் தெய்வசிகாமணியை வெட்டியதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து வீட்டிற்குள்ளே நுழைந்த மர்ம நபர்கள் தூங்கிக் கொண்டிருந்த அலமேலு அம்மாளையும் செந்தில் குமாரையும் இரும்பு ராடாலும் அரிவாளாலும், அடித்தும் வெட்டியும், கொன்றனர்.
இந்த நிலையில் நிச்சயதார்த்தத்திற்கு செல்ல வேண்டும், தனக்கு அதிகாலையில் வந்து முகத்திற்கு சவரம் செய்து விடுமாறு அந்த ஊரை சேர்ந்த சவரத் தொழிலாளி வல்பூரானிடம் தெய்வசிகாமணி தெரிவித்திருந்தாராம். அதன்பேரில் அவர் நேற்று காலை அவர்களின் வீட்டுக்கு வந்து பார்த்த போது 3 பேரும் வெட்டி கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவிநாசிபாளையம் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து பல்லடம் டிஎஸ்பி சுரேஷ் தலைமையில் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த அலமேலு அம்மாள் அணிந்திருந்த 8 பவுன் மதிப்பிலான நகையை திருடி சென்றுவிட்டதாக தெரிகிறது.
வீட்டில் வேறு ஏதேனும் நகை, பணம் இருந்ததா என்பது குறித்து தெரியவில்லை. மூன்று சடலங்களையும் பார்த்து செந்தில் குமாரின் மனைவி கதறி அழுத காட்சி பார்ப்போர் நெஞ்சை கரைய வைத்தது. செந்தில் குமாருக்கு 7 வயதில் ஒரு மகனும், 12 வயதில் மகளும் இருக்கிறார். அந்த குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும், இல்லாவிட்டால் போலீஸ் டிபார்ட்மென்ட்டே வேஸ்ட் என ஆக்ரோஷமாக 3 பேரை இழந்த தவிப்பில் பேசினார். அவரை பெண் போலீஸாரும் ஆசுவாசப்படுத்தினர்.
இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், தென்னைமரங்கள் நிறைய இருப்பதால் அதற்கு மருந்தடிக்க, களை எடுக்க, தென்னங்காய்களை பறிக்க என நிறைய தொழிலாளர்கள் தோப்புக்கு வருவார்களாம். அவர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது. விசாரணையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாயல்குடியை சேர்ந்த கணவன்- மனைவி, தெய்வசிகாமணியின் தோட்டத்தில் தங்கி வேலை பார்த்து வந்ததாக தெரிகிறது.
அவர்களது நடவடிக்கைகள் சரி இல்லாததால் இருவரையும் தெய்வசிகாமணி வேலையை விட்டு நிறுத்திவிட்டாராம். அந்த நபரும் மற்றொரு நபருடன் சேர்ந்து தங்களை 10 நாட்களாக நோட்டமிடுவதாக தெய்வசிகாமணி தனது உறவினர்களிடம் பேசிய போது கூறியதாக போலீஸ் விசாரணையில் தெரிகிறது. இதையடுத்து பல்லடம் போலீஸார் கொடுத்த தகவலின் பேரில் சாயல்குடி போலீஸார் அந்த நபரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் வட இந்திய கும்பலை சேர்ந்த வர்களே செய்திருக்கக்கூடும் என்கின்றனர் உயர் போலிஸ் அதிகாரிகள்.
சொந்த கிராமத்தை சேர்ந்தவர்களோ தனது வீட்டில் வேலை செய்தவர்கள் மகனை கொலை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது காரணம் அவர்கள் பாதிக்கப்பட்டது அந்த குடும்பத்தை சேர்ந்த பெரியவர் தெய்வசிகாமணி தான். pavariya கும்பல் மற்றும் வட இந்திய கும்பல்கள் மட்டும் தான் ஈவு இரக்கமின்றி இது போன்ற கொலைகளை செய்வார்கள் அந்த ஸ்டைலில் தான் இந்த கொலையும் நடந்து இருக்கிறது. எனவே நிச்சயமாக வட இந்திய கும்பல் தான் செய்திருக்கும் என்ற கோணத்தில் போலீஸ் அதிகாரிகள் சிறப்பு படைகளை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.