chennireporters.com

நளினி முருகன் தனது உறவினர்களிடம் வாட்ஸ் அப்பில் பேச சென்னை ஐகோர்ட் அனுமதி.

நளினி, முருகன் ஆகியோர் லண்டனில் உள்ள சகோதரியிடமும் இலங்கையிலுள்ள தாயாருடனும் வாட்ஸ் அப் வீடியோ காலில் பேசுவதற்கு ஐகோர்ட் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினியும், அவரது கணவர் முருகனும் லண்டனில் உள்ள முருகனின் சகோதரியுடனும், இலங்கையில் இருக்கும் அம்மாவுடனும் வாட்ஸ் ஆப் வீடியோ மூலம் பேசுவதற்கு அனுமதிக்க கோரி நளினியின் தாயார் பத்மா சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் நீதிபதி என்.கிருபாகரன் தலைமையிலான பெஞ்ச், ராஜிவ்காந்தி கொலை வழக்கின் சர்வதேச தொடர்புகள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட பன் முக விசாரணை முகமை தற்போதும் செயல்பாட்டில் உள்ளதா?

அல்லது விசாரணைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

அப்போது, சர்வதேச தொடர்புகள் குறித்து விசாரிக்கும் பன்நோக்கு விசாரணை முகமையின் பதவிக்காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து கடந்த ஆண்டு ஜூலை 27 ம் தேதி உத்தரவிட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ராஜிவ்காந்தி கொலை வழக்கின் அயல்நாட்டு தொடர்புகள் குறித்த விசாரணை இன்னும் முடிவடையாத நிலையில், நளினி மற்றும் முருகனை வெளிநாட்டில் உள்ள உறவினர்களுடன் பேச அனுமதித்தால், வழக்கு விசாரணையை பாதிக்கும்.

சிறை அதிகாரிகள் மூலம் அவர்கள் பேசுவதை கண்காணித்தாலும், முக அசைவு மற்றும் உருவ அசைவில் கருத்துக்களை பரிமாற்றக்கூடும் என மத்திய அரசு தரப்பு வக்கீல் தெரிவித்தார்.

தொடர்ந்து சிறைத்துறை தரப்பில், ‘2011ம் ஆண்டு அரசாணையின் படி சிறைக் கைதிகள் வெளிநாட்டில் உள்ளவர்களுடன் பேச அனுமதி கிடையாது.

இந்தியாவிற்குள் உள்ள உறவினர்களுடன் 10 நாளைக்கு ஒருமுறை, மாதம் ஒன்றுக்கு 30 நிமிடத்திற்கு மிகாமல் 3 அழைப்புகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறது.

எனினும், அது சிறைவாசிகளின் அடிப்படை உரிமை இல்லை.சிறைத்துறை கண்காணிப்பாளரின் அனுமதிக்கு உட்பட்டது முருகன் கடந்த ஏப்ரல் மாதம் கூட, வேலூரில் உள்ள அவரது சகோதரியுடன் பேசினார்.

நளினியும் கடந்த மார்ச் மாதம் அவரது உறவினர்களுடன் பேசியுள்ளார்’ என்று தெரிவிக்கப்பட்டது.

தந்தை இறந்துவிட்ட நிலையில் தாய்க்கு ஆறுதல் கூற, சிறைத்துறை அதிகாரிகள் முன்னிலையில் அழைப்பை பதிவு செய்து கொள்ளும் வசதியுடன் பேச அனுமதிக்கலாமே என தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில், நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி ஆகியோர் கொண்ட பெஞ்ச் நேற்று தீர்ப்பளித்தது.

அதில், ‘நளினி, முருகன் ஆகியோர் லண்டனில் உள்ள முருகனின் சகோதரியிடமும் இலங்கையிலுள்ள தாயாருடனும் வாட்ஸ் அப் வீடியோ காலில் பேச அனுமதிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க.!