33ஆண்டுகள் சிறையிலிருந்த மாதையன் மரணம்!தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் இரங்கல் அறிக்கை வீரப்பனின் அண்ணன் மாதையன் 33 ஆண்டுக் காலம் சிறையில் இருந்து சிறையிலேயே மரணம் அடைந்த சோகச் செய்தி என்னை உலுக்கிவிட்டது.
குற்றச்செயல் எதிலும் ஈடுபடாமல் எளிய விவசாயாக வாழ்ந்தவர் மாதையன். வீரப்பனைப் பிடிக்க முடியாத கோபத்தில் இவரைப் பிடித்து இவருக்குச் சற்றும் தொடர்பில்லாத ஒரு வழக்கில் சிக்க வைத்து ஆயுள் தண்டனை விதித்தனர்.
வீரப்பனால் பிடித்துச் செல்லப்பட்ட கன்னட நடிகர் இராஜ்குமாரை வீரப்பனிடம் பேசி நாங்கள் விடுவித்த போது, தன்னுடைய அண்ணன் மாதையனின் நிலையை எடுத்துக்கூறி உதவும்படி வீரப்பன் வேண்டிக்கொண்டார்.
அதற்கிணங்க மாதையனைச் சிறையில் சந்தித்துப் பேசி சட்டரீதியாக அவரை விடுவிப்பதற்குப் பல முயற்சிகள் செய்தோம்.
ஆனாலும் வெற்றி கிடைக்கவில்லை இறுதியாகச் சிறையிலேயே தனது உயிரை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற நிலை யாருக்கும் வரக்கூடாது மாதையனின் குடும்பத்தினரின் துயரை நானும் பகிர்ந்துக் கொள்கிறேன்.
அன்புள்ள,(பழ.நெடுமாறன்) தலைவர்.