chennireporters.com

நீட் தேர்வு எதிரொலி மாணவர் தற்கொலை…

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து மாணவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டு வருகிறார்கள் நீட் தேர்வு பயத்தின் காரணமாக நேற்று மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இந்த செய்தி பரவியதும் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கூழையூரில் மூன்றாவது முறையாக நீட் தேர்வு எழுத இருந்த தனுஷ் (19) என்ற மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கூழையூரை சேர்ந்தவர் சிவகுமார் இவரின் முதல் மகன் நிஷாந்த் பொறியியல் படித்து வருகிறார்.

இரண்டாவது மகன் தனுஷ் ஏற்கனவே இவர் 2019 இல் இருந்து நீட் தேர்வை எழுதி வருகிறார். இதில் பல் மருத்துவம் படிக்க இடம் கிடைத்தபோதும் எம்.பி.பி.எஸ் தான் படிக்க வேண்டும் என்று உறுதியாக இருந்துள்ளார்.

இதனால் மீண்டும் தேர்வை எழுத முடிவு செய்து படித்து வந்துள்ளார்.இரண்டாவது முறை நீட் தேர்வில் போதிய மதிப்பெண்கள் கிடைக்காமல் தோல்வியடைந்தார்.

இந்நிலையில் மூன்றாவது முறையும் தோல்வியடைந்து விடுவோமோ என்ற பயத்துடன் இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மேச்சேரியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் தனுஷ் நீட் தேர்வை எழுதுவதாக இருந்தது.

எனினும் தேர்வு குறித்து அச்சத்தில் இருந்த தனுஷ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தகவல் அறிந்ததும்மாணவர் தனுஷ் தற்கொலை தொடர்பாக கருமலைக்கூடல் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இது தொடர்பாக அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுக மீது ஆவேசத்துடன் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து என்று கூறியிருந்தது.

ஆனால் செயல்படுத்தவில்லை நடக்காத ஒன்றை நடத்திக் காட்டுவோம் என்று திமுக பொய் சொல்லுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி தனுஷின் வீட்டிற்கு சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார்.
அரசு தனுஷின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தனுஷின் வீட்டிற்குச் சென்று அவரது பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு தனுஷின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு அந்த குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதி அளித்து விட்டு வந்தார்.

பாஜகவுடன் கூட்டு வைத்திருக்கும் அதிமுக நீட் தேர்வை ரத்து செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இனிமேல் இதுபோன்று எந்த உயிர் இழப்புகளும் ஏற்படக்கூடாது என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். இன்று சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கான சட்ட திருத்த மசோதா கொண்டுவரப்படும் என்று தெரிகிறது.

இதையும் படிங்க.!