chennireporters.com

காரில் லஞ்ச பணத்துடன் சிக்கிய அதிகாரி.

கே.உமா சக்தி.

காரில் ரூ 38 லட்சம் லஞ்ச பணத்துடன் சென்ற போக்குவரத்து இணை ஆணையாளர் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அதிரடி சோதனையில் சிக்கினார். கோயமுத்தூர் மண்டல போக்குவரத்து இணை ஆணையாளராக இருந்தவர் கே.உமா சக்தி.

இவர் கோவை மண்டலத்துக்கு உட்பட்ட ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்ட பஸ் உரிமையாளர்கள் மற்றும் சுங்கச்சாவடி அதிகாரிகளிடமிருந்து மாதம் தோறும் லஞ்சமாக பணம் வசூலித்து வருவதாக கோவை சரக லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு தொடர்ந்து பல புகார்கள் வந்தன.

இதையடுத்து கோவை லஞ்ச ஒழிப்பு துணை கண்காணிப்பு அதிகாரிகள் மற்றும் போலீசார் இணைந்து கடந்த 23 ஆம் தேதி கோவை சவுரிபாளையம் பகுதியில் கண்காணித்து வந்தனர்.

அப்போது அங்கு வந்த ஒரு காரை மடக்கி அதிரடியாக சோதனையிட்டனர்.
அதில் கணக்கில் வராத ரூ 28,35000 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பணத்தை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்தபோது, அந்த காரை எம். உமாசக்தி ஓட்டி வந்ததும் அவர் வைத்திருந்த பையில் இருந்த பணம் ரூபாய் 28 லட்சத்து 35 ஆயிரம் லஞ்சப் பணம் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து லஞ்ச பணத்தை பறிமுதல் செய்த போலீசார் போக்குவரத்து இணை ஆணையர் கே. உமா சக்தியை கைது செய்தனர்.

போலீஸ் விசாரணையில் இத்துறையில் ஏற்கனவே பணிசெய்து ஓய்வு பெற்ற அலுவலக உதவியாளர் எம். செல்வராஜ் என்பவர் இதில் உடந்தையாக இருந்து செயல்பட்டதும் இவர்
கோவை போக்குவரத்து மண்டலத்திற்கு உட்பட்ட, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் சுற்று வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பணி புரியும் அதிகாரிகள் துணையோடு மாதம்தோறும் லஞ்சம் பெற்று உமா சக்திக்கு கொடுத்து வந்ததும் தெரியவந்துள்ளது.

தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசாரின் தீவிர விசாரணையில் இதில் தொடர்புடைய மேலும் பல போக்குவரத்து துறை சார்ந்த அதிகாரிகள் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

உமா சக்திக்கு ஊட்டி, வால்பாறை, கோத்தகிரி, முதுமலை போன்ற இடங்களில் சொகுசு பங்களாக்கள் இருப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

அது தவிர சென்னை பெங்களூர் போன்ற இடங்களில் பல சொத்துக்கள் இருப்பதாகவும் தெரிகிறது உமா சக்திக்கு பல வங்கிகளில் சேமிப்பு கணக்கு இருப்பதாகவும் அந்த வங்கி கணக்கில் உள்ள லாக்கர்களில் தங்கம் மற்றும் வைர நகைகள் இருப்பதாக தெரிகிறது.

அவற்றை அதிகாரிகள் சோதனை செய்ய முடிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க.!