திருவள்ளூர் அருகே 32 கிலோ கஞ்சா கடத்தல் விவகாரத்தில் தலைமறைவாக இருந்த மதுரையை சேர்ந்த சிறப்புப்படை காவலர் கைது செய்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கும்மிடிப்பூண்டி . 32 கிலோ கஞ்சா கடத்தல் விவகாரத்தில் கடந்த 5 மாதங்களாக தலைமறைவாக இருந்த சிறப்புப்படை காவலரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த நவீன சோதனைச் சாவடியில் கடந்த ஏப்ரல் மாதம் 18ம் தேதி ஆந்திர மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 32 கிலோ கஞ்சாவை மதுவிலக்கு மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த கடத்தலில் ஈடுபட்ட திருச்சியைச் சேர்ந்த முகமது அசாருதீன் (35), கோயம்புத்தூரைச் சேர்ந்த விவேக் (27) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிறையில் அடைக்கப்பட்ட இருவரிடம் நடத்திய விசாரணையில், மதுரையைச் சேர்ந்த தமிழ்நாடு சிறப்புப்படை காவலர் பிரகாஷ் (27) என்பவர் கஞ்சா வாங்க பணம் கொடுத்ததாக வாக்குமூலம் அளித்தனர்.
தமிழ்நாடு சிறப்புப்படை காவலர் பிரகாஷ் (27)
இதனையடுத்து சம்பந்தப்பட்ட உயர் மட்ட அதிகாரிகளிடம் அனுமதி பெற்ற கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு மற்றும் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் தலைமறைவாக இருந்த காவலர் பிரகாசை வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்தநிலையில் அவர் மதுரையில் உள்ள அவரது வீட்டில் இருப்பதாக நேற்று முன் தினம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடத்தது. அதன் அடிப்படையில் மதுரைக்கு விரைந்து சென்ற போலீசார், பிரகாசை கையும் களவுமாக கைது செய்தனர்.
தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், பழக்கத்தின் பேரில் நண்பர்களுக்காக பண உதவி செய்ததாகவும், கடத்தலுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். ஆனால் கஞ்சா கடத்தல் குற்றவாளிகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரகாசை புழல் சிறையில் அடைத்தனர்.
தமிழ்நாடு முழுவதும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல்துறையை சேர்ந்த காவலர்கள் மற்றும் சில அதிகாரிகள் சட்டத்திற்கு புறம்பாக நடத்தப்படும் எல்லா செயல்களிலும் துணை நிற்கின்றனர். மேலும் கள்ளத்தனமாக மது விற்பவர்களிடமும் கஞ்சா மற்றும் மணல் கடத்துபவர்களிடம் தொடர்ந்து நட்பு பாராட்டி வரும் போலீசார் லஞ்சம் வாங்கிக் கொண்டு சட்டத்திற்கு எதிரான எல்லா வேலைகளையும் செய்து வருகின்றனர்.
இந்த சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு காவல்துறை ஏடிஜிபி டேவிட்சன் ஆசீர்வாதம் குண்டர்களிடமும் ரவுடிகளிடமும் நட்பு வைத்திருந்து சட்டம் ஒழுங்கிற்கு கேடு விளைவிக்கும் காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார். ஆனால் அவரின் உத்தரவை அதிகாரிகள் யாரும் செயல்படுத்தவே இல்லை எனவே குற்ற சம்பவங்கள் செய்பவர்களிடம் தொடர்பில் இருக்கும் காவலர்களை நிரந்தரமாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்கின்றனர் உயரதிகாரிகள்.