புதுச்சேரியில் செய்தியாளரை செல்போனில் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்த காலப்பட்டு தொகுதி பா.ஜ.க. எம்எல்ஏ கல்யாணசுந்தரம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி புதுச்சேரி செய்தியாளர்கள் சங்கம் சார்பில் துணைநிலை ஆளுநர், முதல் அமைச்சர், உள்துறை அமைச்சர், மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது.காலாப்பட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினருக்கு புதுச்சேரி மக்கள் ஒருங்கிணைப்பு இயக்கம் கண்டனம் தெரிவித்துகொள்கிறது.
புதுச்சேரி மாநில காலாப்பட்டு சட்டமன்றத் தொகுதியின் பா.ஜ.க உறுப்பினர் கல்யாண சுந்தரம் அவர்கள், கழுகு தர்பார் வார இதழ்.
செய்தியாளர் சண்முகம் என்பவரை அவருடைய செல்போனில் அழைத்து காலாப்பட்டு தொகுதி சம்பந்தமாக செய்தி வெளியிட்டதற்காக இரண்டாம் தர வார்த்தைகளை பயன்படுத்தி மிக கேவலமாக பேசி மிரட்டிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆம்பளையா இருந்தா என் ஆபிசுக்கு நேரில் வாடாஎன்று கொலை செய்து விடும் நோக்கத்தில் பேசும் வார்த்தைகள் அங்குள்ள செய்தியாளர்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜனநாயகத்தின் நான்காம் தூணான பத்திரிக்கை துறையின் கடமைகளில் ஒன்று மக்கள் பிரச்சனைகளை சமூக அக்கறையோடு மக்களுக்கு கொண்டு சேர்ப்பது தனது கடமை.
ஆனால் அப்படி செய்தி வெளியிடும் செய்தியாளரை அழைத்து ஒருமையில் பேசி தரக்குறைவான இரண்டாம் தர வார்த்தைகளை பயன்படுத்தி கொலைமிரட்டல் மிரட்டுவது என்பது ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கும் செயல்.
பிரதமர் முதல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட யாரும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. அப்படி விமர்சனங்கள் எழும்பொழுது தவறான விமர்சனமாக இருக்கும் பட்சத்தில் பொறுப்பான மக்கள் பிரதிநிதிகள் மறுப்பு தெரிவிக்கலாமே தவிர, மிரட்டுவது என்பது அநாகரீகமான செயல். இதோடு மட்டுமில்லாமல் புதுச்சேரியில் இருக்கும்,சக சட்டமன்ற உறுப்பினர்கள் யாருமே வேலை செய்யவில்லை என்று கூறி, அனைவரையும் அவமரியாதை செய்யும் விதமாக ஒருமையில் பேசியிருக்கிறார்.
அவர் ஒருமையில் பேசிய சக சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவர் தான் முதலமைச்சர் மற்றும் அமைச்சர் பெருமக்கள் என்பதை நன்கு அறிந்த அவர் இவ்வாறு பேசியிருப்பது கண்ணியம் தவறிய செயலாகும்.
காலாப்பட்டு சட்டமன்ற பா.ஜ.க எம்.எல்.ஏ வின் இத்தகைய செயலுக்கு, புதுச்சேரி ஒருங்கிணைப்பு இயக்கம் தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
தாமோ.தமிழரசன் வழக்கறிஞர் செய்தித்தொடர்பாளர், புதுச்சேரி மக்கள் ஒருங்கிணைப்பு இயக்கம். இந்த புகார் தொடர்பாக பாண்டிச்சேரி அரசும் காவல் துறையும் நடவடிக்கை இல்லை என்றால்; தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஒருங்கிணைந்த பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் பாண்டிச்சேரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்று போராட்ட குழு முடிவெடுத்துள்ளது.