புதுச்சேரியை புரட்டிப் போட்ட ஃபெஞ்சல் புயல் காரணமாக பாண்டிச்சேரி முழுவதும் மழை வெள்ளத்தில் சிக்கி தவிக்கிறது. மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் நிலையை அறிந்த முதலமைச்சர் ரங்கசாமி. புதுச்சேரியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அறிவித்துள்ளார். நிவாரணமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.5000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே நேற்று முனத்தினம் சனிக்கிழமை இரவு கரையைக் கடந்தது. இதனால், புதுச்சேரியில் கனமழை கொட்டித் தீர்த்தது. புயல் கரையை கடந்த நிலையில், அங்கு 48 செ.மீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது. புயலுக்குப் பிறகு புதுச்சேரி தற்போது மெல்ல மெல்ல இயல்புநிலைக்கு திரும்பி வருகிறது . இருப்பினும் மழை வெள்ளம் பல பகுதிகளில் வடியாமலேயே இருந்து வருகிறது.
இதனிடையே, வெள்ளம் சூழ்ந்த பகுதியிலிருந்த மக்கள் மீட்பு படைகள் மூலம் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்து உள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.
புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தில் புதுச்சேரியில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரியில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகபட்ச மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் தெரிவித்துள்ளார். புதுச்சேரி அரசு விடுத்த கோரிக்கையை ஏற்று, இந்திய ராணுவப் படையினர் நேற்று வந்து, மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த புயலால் கடுமையாக புதுச்சேரி பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட மக்கள், அரசு, தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் ஏற்படுத்தப்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில், புதுச்சேரியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வர் ரங்கசாமி நிவாரணம் அறிவித்துள்ளார். அதன்படி நிவாரணமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.5000 வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். மாட்டிற்கு ரூ.40,000, கிடாரி கன்று குட்டிக்கு ரூ.20,000, சேதம் அடைந்த படகு ஒன்றுக்கு ரூ.10,000 நிவாரணம் வழங்கப்படும். அதே போல விலை நிலம் ஹெக்டேருக்கு ரூ. 10,000 நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சேதம் அடைந்த கூரை வீடு ஒன்றுக்கு ரூ.10,000 நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் மழை வெள்ளத்தால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். புதுவையில் மழைக்கு இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் 208 முகாம் அமைக்கப்பட்டு 85,000 பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்துக்கு பகுதிகளில் துப்புரவு பணிகள் சரிவர மேற்கொள்ளப்படவில்லை எனவும் பல்வேறு புகார்கள் மாவட்ட ஆட்சியருக்கு அப்பகுதி பொதுமக்களிடம் இருந்து தொடர்ந்து வந்தது.மேலும் கோட்டுச்சேரி எம்.ஜி.ஆர் சாலை பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பள்ளி மற்றும் மருத்துவமனைகளுக்கு செல்வதற்கு வாய்க்கால்களை கடந்து செல்ல சிரமப்படுவதாக மாவட்ட ஆட்சியரிடம் நேற்று புகார் அளித்தன.
இதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் நேற்று காலை கோட்டுச்சேரி எம்.ஜி.ஆர் சாலை பகுதியில் சைக்கிளில் சென்று திடீர் ஆய்வு செய்தார்.ஆய்வுக்கு பின் பொதுப்பணித்துறை,கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் மற்றும் நில அளவையர்களைக் கொண்டு நேரில் சென்று ஆய்வு செய்து பாலம் அமைப்பதற்கு கள ஆய்வு மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அதனை தொடர்ந்து வரிச்சிக்குடி சோனியா காந்தி நகர்,காமராஜ நகர் உள்ளிட்ட பகுதிகளில் துப்புரவு பணிகள் சரிவர மேற்கொள்ளப்படுகிறதா என ஆய்வு செய்த கலெக்டர் மணிகண்டன் தூய்மை பணிகளை முழுமையாக மேற்கொள்ளுமாறு தனியார் துப்புரவு நிறுவனத்திற்கு அறிவுறுத்தினார்.
கலெக்டர் ஆய்வின் போது பொதுமக்கள் கோட்டுச்சேரி சுகாதார நிலைய வளாகத்தில் மருத்துவர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும்,போதிய இடவசதி இல்லை எனவும்,மருந்தாளர்கள் பணிக்கு தாமதமாக வருவதாகவும், இதனால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது எனவும் கலெக்டரிடம் பொதுமக்கள் புகார் அளித்தனர்.
மாவட்ட ஆட்சியர் மணிகண்டன்
இதன் பேரில் உடனடியாக சுகாதார நிலையத்திற்கு சென்ற மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் பொதுமக்கள் நீண்ட வரிசையில் இருப்பதை பார்த்து மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறையை நீக்குவதற்கு உடனடியாக சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி நிரந்தர தீர்வு காணப்படும் என பொதுமக்களிடம் தெரிவித்தார்.மேலும் மருத்துவமனையில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் மருத்துவர்கள் பணிபுரிவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். கலெக்டர் ஆய்வின்போது நகராட்சி செயற்பொறியாளர் லோகநாதன், தனியார் துப்புரவு நிறுவன அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தட்டாஞ்சாவடி தொகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சேதுசெல்வம் தலைமையில் பிரட், பால் இன்று வழங்கப்பட்டு வருகிறது.
புயல் காற்று,மழை, வெள்ளத்தால் தட்டாஞ்சாவடி தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மரங்கள் விழுந்தும், வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தும், வீடுகள் இடிந்தும் பெரும் பாதிப்பு ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு பிரட், பால் வழங்கி நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விழுப்புரம் வெள்ளத்தில் குழந்தையைக் காப்பாற்றிய செய்தியாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. விழுப்புரத்தில் செய்தி சேகரிக்க சென்ற இடத்தில், வெள்ளத்தில் சிக்கித் தவித்த குடும்பத்திற்கு உதவியதுடன், அவர்களின் குழந்தையை, புதிய தலைமுறை செய்தித் தொலைக்காட்சியின் செய்தியாளர் காமராஜ் சிலரின் உதவியுடன் வாளியில் வைத்து காப்பாற்றியது செய்தியறிந்து நெகிழ்ந்து போனேன்.
செய்தியாளர்கள் எனப்படுபவர்கள் தனித்தவர்கள் அல்ல… சமூகத்தின் அங்கம் என்பதை அவர் நிரூபித்திருக்கிறார். செய்தியாளர் காமராஜுக்கு எனது பாராட்டுகள். என்று பாமக அன்பு மணி தெரிவித்துள்ளார்.
திமுகவை சேர்ந்த எம்,எல்,ஏக்கள் மற்றும் பிற அரசியல் கட்சியினர் பொது மக்களை சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். மேலும் பல்வேறு நல திட்ட உதவிகளையும் செய்து வருகின்றனர்.