திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு எதிராக சினிமா பைனான்சியர் போத்ரா தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகரும், தயாரிப்பாளருமான சசிகுமாரின் பட நிறுவனத்தில், இணை தயாரிப்பாளராக இருந்த அவரது உறவினர் அசோக்குமார் கடன் தொல்லை காரணமாக கடந்த 2017 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில் சினிமா துறையில் பைனான்ஸ் கொடுத்த பணத்தை திருப்பித்தர முடியாததால் நடிகர் சசிகுமார் உறவினர் தற்கொலை செய்து கொண்டது குறித்தும்.
பைனான்சியர்கள் கெடுபிடி செய்து வருவதாகவும், சினிமா பைனான்சியர் போத்ரா குறித்தும் அந்த நேரத்தில் ஞானவேல்ராஜா வாரப் பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கருத்து தெரிவித்திருந்தார்.
இதனால் ஞானவேல் ராஜா, மற்றும் ஜூனியர் விகடன் மீது பைனான்சியர் போத்ரா சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஞானவேல்ராஜா சார்பில் கடந்த 2019ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதில் தனக்கு எதிரான வழக்கில் எந்தவித ஆதாரங்களும் இல்லை.எனவே வழக்கை ரத்துசெய்ய வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி தண்டபாணி, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்பதால், அவருக்கு எதிராக ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் தொடரப்பட்டுள்ள அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.