எந்த காரணமும் இன்றி புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பணியாற்றும் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த ஊழியர்களை நிர்வாகம் பணி விலகல் கடிதம் எழுதி கொடுக்கும் படி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
புதியதலைமுறை தொலைக்காட்சி நிர்வாகம் முன்னெடுத்துள்ள பணிநீக்க நடவடிக்கையை உடனே கைவிட வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வலியுறுத்துகிறது.
புதியதலைமுறை தொலைக்காட்சியில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் பணியாளர்கள் சிலரை அழைத்து நிர்வாகம் பேசியுள்ளது. அப்போது, பணியிலிருந்து உடனே விலகிக்கொள்ள வேண்டும் என்று அவர்களை நிர்வாகம் வற்புறுத்தியுள்ளது. அத்துடன், பணிவிலகல் கடிதத்தை தர வேண்டும் என்றும் கேட்டுள்ளது.
பணியாளர் தரப்பில் அதற்கான காரணம் கேட்டதற்கு, உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. நிர்வாகத்தின் வற்புறுத்தலின்பேரில் சிலர் பணிவிலகல் கடித்தத்தை கொடுத்துள்ளதாகவும், சிலர் நிர்வாகத்திடம் உரிய விளக்கம் அளிக்குமாறு கேட்டுள்ளதாகவும் அறிகிறோம்.
தொழிற்தகராறு சட்டத்தின் (1947) அடிப்படையில் எந்தவித விளக்கமுமின்றி, அரசின் முன்அனுமதியின்றி, முன்னறிவிப்புமின்றி தொழிலாளர்களை பணிநீக்கம் செய்வது சட்டப்படி தவறாகும்.
ஏற்கனவே புதியதலைமுறை தொலைக்காட்சியில் இதுபோல் அநியாய பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள், மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில், அதை எதிர்த்து சட்டப்போராட்டம் நடத்தி வெற்றிபெற்றதையும் இந்த இடத்தில் நிர்வாகத்திற்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
ஆகவே, புதியதலைமுறை நிர்வாகம் மேற்கொண்டுள்ள சட்டத்திற்குப் புறம்பான பணிநீக்க நடவடிக்கையை உடனே கைவிட வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வலியுறுத்துகிறது.
அது தொடரும்பட்சத்தில், பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கு நீதி கிடைக்க, மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் ஆவண செய்யும் என்று உறுதியளிக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.