முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளனுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
தமிழ் மக்கள் அனைவரும் உச்ச நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பை வரவேற்பார்கள். ஆயுள் தண்டனையை விட அதிகமான காலம் பேரறிவாளன் சிறையில் அனுபவித்து வந்த இந்த தண்டனையிலிருந்து அவரை விடுவிக்க உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கூட செவிசாய்க்காமல் மத்திய அரசு அவரை விடுவிக்காமல் காலம் தாழ்த்தி வந்தது.
உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு 32 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடிய பேரறிவாளனுக்கு, அவரது விடுதலைக்காக தொடர்ந்து விடா முயற்சியுடன் போராடி வந்த அவரது தாயார் அற்புதம் மாளுக்கு கிடைத்த வெற்றி.
விடுதலையை நோக்கி அழைத்துச் செல்லும் பேரறிவாளன் விடுதலைக்கு யாரும் ஆட்சேபனை தெரிவிக்க முடியாது என்ற கருத்தை தான் இந்த ஜாமீன் மூலம் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ள தீர்மானத்தை தமிழக ஆளுநர் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.மத்திய அரசு ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர் விடுதலைக்கு வழி வகை செய்ய வேண்டும் என்பது தமிழக மக்களின் குரலாக உள்ளது.
இது போன்ற வழக்குகளில் சிறையில் உள்ள மற்ற வழக்குகளுக்கு பேரறிவாளன் ஜாமீன் வழக்கு ஒரு முன்மாதிரியாக அமைந்துள்ளது.பேரறிவாளனின் நீண்ட நாள் சட்டப் போராட்டத்திற்கும் தமிழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கும் கிடைத்த வெற்றி என்கிறார்கள்.