காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் பகுதியில் சாம்சங் தொழிற்சாலை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் 5000க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் 1500 பேர் நிரந்தர பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் ஊதிய உயர்வு எட்டு மணி நேர வேலை சிஐடியு தொழிற்சங்க அனுமதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒன்பதாம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதுவரை மூன்று கட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு தோல்வியடைந்துள்ள நிலையில் தொழிலாளர்களுக்கு samsung நிறுவனம் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பி மிரட்டி வருகிறது. சட்டவிரோத வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதை நிர்வாகத்திற்கு எதிரானது என்றும் பணிக்கு வருபவர்களை தடுத்து போராட்டத்தில் ஈடுபடுவது தெரிய வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. உடனடியாக பணிக்கு திரும்பாவிட்டால் வரும் திங்கள்கிழமை முதல் ஊழியர்களின் அடையாள அட்டை முடக்கப்படும் என்று சாம்சங் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சாம்சங் நிறுவனத்தில் கடந்த 11 நாட்களாக தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டம் நடந்து வந்த நிலையில் சிஐடியு சங்கம் மீது அந்நிறுவனம் வழக்கு தொடர்ந்து உள்ளது.
மொபைல் போன் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் சாம்சங் நிறுவனம் தன் உற்பத்தி வளாகத்தை சென்னை அருகே வைத்துள்ளது.
இதில் பணியாற்றும் தொழிலாளர்கள் கடந்த 11 நாட்களாக தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் சாம்சங் நிறுவனம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தொழிற்சங்க நடவடிக்கைகள் மூலம் தொழிற்சாலையின் செயல்பாடுகளை சீர்குலைத்து வருகின்றனர். மற்ற ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுக்கின்றனர். இவ்வாறு செய்வது தொழிற்சாலையின் சுமுகமான செயல்பாடு மற்றும் ஊழியர்களின் பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று சாம்சங் தெரிவித்துள்ளது.
இது குறித்து சிஐடி சங்கத்தினர் கூறுகையில் தொழிலாளர்கள் சட்டபூர்வமாக வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள். samsung நிறுவனத்தின் புகார்களை நாங்கள் நீதிமன்றத்தில் சந்திப்போம் என்றனர் இதனிடையே எல்லா பிரச்சனைகளையும் விரைவில் தீர்க்க ஆலையில் உள்ள தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாகவும் சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.