பாலஸ்தீன இனப்படுகொலைக்காக இசுரேல் மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கினை இசுரேல் மீது சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்கா வழக்கினை பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக மே பதினேழு இயக்கத்தை சேர்ந்த தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அனைத்துலக நீதி மன்றம்(International Court of Justice)
சர்வதேச அளவில் நடக்கும் மக்கள் எழுச்சியும், பலவேறு சிந்தனையாளர்கள், கலை-இலக்கிய படைப்பாளர்கள், விளையாட்டு வீரர்கள், திரை கலைஞர்கள் என வெளிப்படுத்திய இசுரேலிய எதிர்ப்பும், பாலஸ்தீன ஆதரவும் வரலாற்றில் முதல்முறையாக சாமானியனுக்காக நீதிமன்றத்தை நாடியிருப்பது மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த முதல்கட்ட வெற்றி.
மேற்குலக-ஜியோனிச பிரச்சாரங்களை முறியடித்து மக்கள் குரல் மேலெழும்புகிறது. கிட்ட தட்ட 3 மாதத்தில் 10,000 குழந்தைகளை கொன்று குவித்திருக்கிறது இசுரேல். வாய்சவடால் துருக்கியோ, மத அரசியலென்று சொல்லி அமெரிக்க கைப்பாவையாக இருக்கும் சவுதியோ இக்குழந்தைகளுக்காக களமிறங்கவில்லை. இவர்கள் நினைத்திருந்தால் இசுரேல் போரை முதல் வாரத்திலேயே நிறுத்தியிருக்கும். ஆனால் புரட்சிகர அரசியல்வழியே காலனியத்தை விரட்டிய தென்னாப்பிரிக்கா களமிறங்கியுள்ளது.
ஈழப்படு கொலையின் போதும் மூன்று மாத அளவில் இதே எண்ணிக்கையில் குழந்தைகள் கொல்லப்பட்டிருந்தனர். 5வது மாத இறுதியில் கிட்ட தட்ட 30,000 குழந்தைகள் கொலையாகினர். ஐ.நாவின் போர் சூழலில் குழந்தைகளுக்கான அமைப்பு இதை எச்சரித்திருந்தது. ஆனால் அன்றிலிருந்து இன்றுவரை தமிழ்ச் சமூகத்தின் பெரும்பான்மையான படைப்புலக ஆளுமைகள், அறிவுச்சமூக ஆளுமைகள் தமிழ் இன அழிப்பை உலகிற்கோ, இந்திய அளவிலோ கொண்டு செல்லும் எந்த முயற்சிக்கும் தயாராக இல்லை. இந்திய அரசின் உதவியில்லாமல் இந்த அழிப்பு நடக்கவில்லை.
தம் சொந்த நாடு செய்த இப்படுபாதக செயலை கண்டிக்கும் துணிவோ, போராட்ட மனமோ, அற உணர்வோ தமிழ் கலை இலக்கிய, அறிவுச் சமூகத்தில் எழவில்லை. சாமானிய தமிழனே இன்றளவும் இந்த அநீதிக்கு எதிராகவும், இந்திய அரசிற்கு எதிராகவும் குரல் எழுப்புகிறான். வி.பு மீது ஒட்டுமொத்த குற்றத்தை சுமத்திவிட்டு, இந்திய-சிங்கள பேரினவாத்தை பாதுகாக்கும்.
தமிழின் இந்த ஒட்டுண்ணி வகை அறிவுச்சமூக-படைப்புலகத்தைப் போல, ஹமாசினை குற்றவாளியாக்கி ஒதுங்கிக்கொள்ளும் அரசியலை சர்வதேச படைப்புலகமோ, அறிவுச் சமூகமோ செய்யவில்லை. வீதிகளில் இறங்கியுள்ளனர், விவாதங்களை எழுப்புகின்றனர், பொய் பேசும் ஊடகங்களை அம்பலப்படுத்துகின்றனர். இலட்சக்கணக்கான பதிவுகள், குரல்கள், ஆய்வுகள் வெளியாகின்றன. பேரரசுகளின் இராணுவங்களை பின்னுக்கு நகர்த்துகின்றனர். ஐ.நாவின் அவைகள் கூடவேண்டிய நெருக்கடியை உருவாக்குகிறார்கள். ஜியோனிச மதவாதம் குறித்த வரலாற்று ஆய்வுகளை அம்பலப்படுத்துகிறார்கள்.
இசுரேல் உருவாக்கிய ஸ்பைகாட் ஒப்பந்தங்களை பதின்பருவ இளைஞர்கள் பேசுகிறார்கள். ஆனால், தமிழின் ஆகப்பெரும் அறிவுச்சமூகத்திடம் தமிழர்களை வஞ்சித்து சிங்கள பேரினவாதத்திற்கு தேசத்தை தாரைவார்த்த சோல்பெரி கமிசனை பற்றி கேட்டுப்பாருங்கள், முழிப்பார்கள். ஆனால் புலிகள் மீதான அவதூறுகளை ஆய்வு அறிக்கை போல வாசிப்பார்கள்.
இன அழிப்பை பற்றியோ, பேரினவாத வரலாறு குறித்தோ, அமெரிக்க-இந்திய பிராந்திய அரசியல் குறித்தோ, கொல்லப்பட்ட தமிழ் குழந்தையினைப் பற்றியோ எத்தனை எழுத்துகள் வந்திருக்கின்றன என தேடிப்பாருங்கள், நம் அவலம் புரியும். ஆனால் ஈ.ழ எதிர்ப்பு, பு.லி எதிர்ப்பு நூல்கள் வந்தவண்ணம் உள்ளன. இசுரேலிய ஜியோனிச கொள்கைக்கு இணக்கமாக நடந்துகொள்ளும் மேற்குலக உயர் வர்க்க சமூகத்தின் மனிதகுல விரோத அரசியலை, தமிழ் உலகில் மிக எளிதாக சந்திக்கலாம்.
14 ஆண்டுகள் கடந்தும் விடுதலைப்புலிகள் மீது மட்டும் குற்றம் சுமத்த முனையும் தமிழ் படைப்புலக, சிந்தனையுலகவாதிகளைப் போல நோய்பீடித்த சமூகத்தினை உலகில் வேறெங்கும் காண இயலாது. தென்னாப்பிரிக்கா நமக்கு வழிகாட்டியுள்ளது. பாலஸ்தீன மக்களுக்காக தொடர்ந்து பேசிக்கொண்டிருப்போம், போராடுவோம், அம்பலப்படுத்துவோம். இது மனிதநேயம் மட்டுமல்ல, நம் கடமையும் கூட. ஏகாதிபத்தியத்தை வேரருக்காமல் சனநாயகம் சாத்தியமில்லை. சனநாயக படைப்புலகும் சாத்தியமில்லை.
பாலஸ்தீனம் வெல்லும் , தமிழீழம் வெல்லும். தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பதிவு என்று கூறப்பட்டுள்ளது.