பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு…
அரசு மற்றும் அரசுப்பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மதிப்பீடு செய்ய மாநில அளவிலான அடைவு ஆய்வு (SLAS-2025) அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில் பயிலும் 3, 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் முதல்வர்கள் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், மாநில அடைவு ஆய்வு பணிக்கு கள ஆய்வாளர்களாக அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகள் தெரிவு செய்யப்பட்டு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
3ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 4ம் தேதியும், 5ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 5ம் தேதியும், 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 6ம் தேதியும் தேர்வு நடத்தப்படவுள்ளது.
தேர்வு நாள் அன்று ஆய்வாளராக செயல்படும் கல்லூரி மாணவ, மாணவிகள் முதன்மைக் கல்வி அலுவலரால் வழங்கப்பட்ட அனுமதிக் கடிதத்துடன் சார்ந்த பள்ளிகளுக்குச் சென்று மாநில அடைவு ஆய்வினை நடத்துவர்.
ஆய்வு நடத்த நல்ல காற்றோட்டமான, வெளிச்சமான இருக்கை வசதியுடன் கூடிய தேர்வு அறையை தலைமை ஆசிரியர் ஒதுக்கித் தர வேண்டும். தேர்வு நடக்கும் அறைக்குள் கள ஆய்வாளர்களைத் தவிர தலைமை ஆசிரியரோ அல்லது உதவி ஆசிரியர்களோ செல்லக்கூடாது.
தேர்வு நடத்துவதற்கு தேவையான வினாத்தாள் கட்டுக்கள் அந்தந்த வட்டார வள மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகவும், தேர்வு நடைபெறும் நாள் அன்று காலை 7.30 மணி அளவில் ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளின் ஆசிரியர்கள் சார்ந்த வட்டார வள மையங்களுக்கு சென்று வினாத்தாள் கட்டுக் காப்பாளரிடம் இருந்து அன்றைய நாளுக்கான வினாத்தாள் கட்டுக்களைப் பெற்று அவரவர் பள்ளிக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
மாணவ, மாணவிகளின் கற்றல் அடைவை ஆய்வு செய்யும் இந்த முக்கியமான பணி எவ்வித புகாருக்கும் இடமின்றி சிறப்புற நடைபெற அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது.
