இரண்டு மாதங்களாக தமிழக பத்திரப்பதிவு துறைக்கு போதாத காலமாக இருக்கிறது. பல அதிகாரிகள் முக்கிய ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றுள்ளனர்.
ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, கோயமுத்தூர் போன்ற பகுதியை சேர்ந்த பத்திரப்பதிவாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
விரைவில் ஆவடி, மணவாள நகர், பூந்தமல்லி போன்ற பகுதிகளில் உள்ள பத்திரப்பதிவு அதிகாரிகள் விரைவில் புழல் பக்கம் போவார்கள் என்கிறார்கள் சில ஆவண எழுத்தர்கள்.
பத்திரப்பதிவுத்துறையில் கோவை மாவட்டத்தில் நீண்ட காலமாக பணியாற்றி வருபவர் செல்வகுமார். சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர். கோவை மாவட்ட தணிக்கை பதிவாளராக பணியாற்றி வந்தார். துறை ரீதியான புகார்கள் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
செல்வக்குமாரின் மாமியார் பாண்டியம்மாள் மற்றும் செல்வகுமாரின் மனைவி முகிலின் தங்கை தென்றல் ஆகியோர் பெயரில் கோவை மாவட்டம் விளாங்குறிச்சி ஸ்ரீ வராக மூர்த்தி அவென்யூவில் செல்வக்குமார் ஆடம்பர பங்களா ஒன்றை கட்டியுள்ளார்.
இவர் 2009 ம் ஆண்டு ஜனவரி 1 முதல் 2012 டிசம்பர் 31 வரை தன் மாமியார் பாண்டியம்மாள் பெயரிலும், மனைவியின் தங்கை பெயரிலும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை வாங்கியுள்ளார்.
பாண்டியம்மாள், தென்றல் ஆகியோரது சொத்துக்களின் மதிப்பு 2009ல் பதினோரு லட்சம் ரூபாயாக இருந்தது, அதன் மதிப்பு 2012 டிசம்பரில் சுமார் ஒரு கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
குறிப்பிட்ட இந்த காலத்தில் அவர்களது வெளிப்படையான வருவாய் ஆதாரங்கள் மூலம் 27 லட்சம் ரூபாய் மட்டுமே வருவாய் கிடைத்திருக்க முடியும் ஆனால் வருவாய்க்கு அதிகமாக 60 லட்சம் ரூபாய் மதிப்பில் சொத்துக்கள் அவர்கள் பெயரில் வாங்கப்பட்டுள்ளன.
இதன் வாயிலாக செல்வக்குமார் அவரது மாமியார் பாண்டியம்மாள், தனது மனைவியின் தங்கை தென்றல் ஆகியோர் உண்மையான வருவாய் ஆதாரத்தை காட்டிலும் 242 சதவீதம் அதிகமாக சொத்துக்களை வாங்கியுள்ளனர் என்பது லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதை அடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் மாவட்ட பதிவாளர் செல்வகுமார் அவரது மாமியார் மனைவியின் சகோதரி ஆகியோர் மீது கோவை லஞ்சம் ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
முந்தைய அதிமுக ஆட்சியில் பத்திரப்பதிவுத்துறையில் சர்வ வல்லமையுடன் வலம் வந்தவர் தான் இந்த செல்வகுமார். இவர் பணியாற்றிய 19 ஆண்டுகளும் கோவை மாவட்டத்தில் தான் பணியாற்றியிருக்கிறார்.
முன்னாள் அமைச்சர்கள் உயர் அதிகாரிகள் என விஐபிகள் பலரும் பத்திரப்பதிவு செய்வது என்றால் செல்வகுமாரை தான் தொடர்பு கொள்வார்கள். அப்படி பத்திரப்பதிவு செய்த வகையில் அதிமுகவின் விஐபிகள் பலரும் அவரது நட்பு வலையத்தில் வந்தனர்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் அவர் மீதான புகார்கள் விசாரணை சூடு பிடித்தது தற்போது லஞ்ச ஒழிப்பு போலீஸ்சார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
செல்வக்குமாரை காவலில் எடுத்து விசாரணை செய்தால் கோயம்புத்தூர் பகுதியில் உள்ள முக்கிய விஐபிகள் வாங்கி உள்ள சொத்துக்களின் மதிப்பு தெரியவரும் என்கின்றனர் கோவை மாவட்ட பத்திரப்பதிவு அலுவலர்கள்.